பறவைக் கோணம்

எஸ். ராமகிருஷ்ணன் திரை இசைப்பாடல்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை மட்டுமில்லை. அவை எளிய மனிதர்களின் சுக துக்கங்களை சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலைவடிவமாகும். வேறு எந்தக் கலைவடிவத்தை விடவும் மக்களால் அதிகம் ரசிக்கப்படுவது திரைப்படங்களே. அதிலும் குறிப்பாக திரை இசைப்பாடல்களே. சினிமா பாடல்களைக் கேட்கும் ஒவ்வொருவரும் அதைத் தன் மனதின் பாடலாக உருமாற்றிக் கொண்டுவிடுகிறார்கள். தமிழ் திரை இசைப்பாடல்கள் உருவாக்கிய பாதிப்பையும் அதன்வழியாக உருவான ரசனையையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் சினிமாவின் கண்டுகொள்ளப்படாத சாதனைகள் குறித்து விரிவாக நமக்கு அடையாளம் காட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சினிமா பாடல் என்பது ஒரு மாயக்கண்ணாடி. அது கேட்பவரின் மனநிலைக்கு ஏற்ப வேறுவேறு தோற்றங்களை உண்டாக்கி காட்டுகின்றன என்பதை எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கட்டுரைகள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. ரூ.120/-

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துலகம்

எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் நவீன தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமை. ஒரு எழுத்தாளன் செயல்பாடுகளும் அக்கறைகளும் எவ்வளவு விரிந்த களனில் இருக்கமுடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரம் அவரது எழுத்தியக்கம். சுந்தர ராமசாமி துவங்கி சமயவேல் வரை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நூலிது ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகைப் புரிந்துகொள்ளவும் அதன் சிறப்புகளை அடையாளம் காட்டுவதற்கும் நாற்பதுக்கும்மேலான விமர்சனக் கட்டுரைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஒரு இளம்வாசகன் தமிழின் முக்கியமானதொரு படைப்பாளுமையை சரியாகப் புரிந்து கொள்ள முடியும் ரூ.170/-

ரயிலேறிய கிராமம்

எஸ். ராமகிருஷ்ணன் உலகப் புகழ்பெற்ற 30 அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புத்தகங்கள் நம்மை வேறுவேறு உலகில் வேறு அடையாளங்களுடனும் வாழவைக்கின்றன. ஒரு புத்தகம் மட்டும் துணை இருந்தால் போதும் எந்தத் தீவிலும் வாழ்ந்து விடலாம். வாசிப்பில் விருப்பமான புத்தகங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் எழுதிய இக்கட்டுரைகள் தமிழ் வாசகனுக்கு உலக இலக்கியத்தின் வாசலைத் திறந்து விடுகின்றன. ரூ.125/

காண் என்றது இயற்கை

எஸ். ராமகிருஷ்ணன் இயற்கை அறிதல் இந்தக் கட்டுரைகள் இயற்கை குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துகின்றன. நாம் எவ்வளவோ முறை கண்டு விலகிப்போன இயற்கைக்காட்சிகளை நின்று அவதானித்து துல்லியமாக அடையாளம் காட்டிப் புரிந்துகொள்ள வைக்கின்றன. இயற்கை குறித்த ஈடுபாடும் லயிப்புமே அகவிடுதலையின் ஆதார உணர்வுகள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன, இயற்கை எப்போதுமே கற்றுத்தருகிறது. எல்லா வடிவத்திலும் நம்மைக் களிப்புறச் செய்கிறது அதன் அடையாளமே இந்தக் கட்டுரைத் தொகுதி. ரூ.110/-

சாப்ளினுடன் பேசுங்கள்

எஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமா பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகள் ஒரு மகத்தான கலையின் அற்புதமான தருணங்களை நம்முள் மீள்படைப்புச் செய்பவை. பிம்பங்களின் பின்னே ததும்பும் வாழ்வின் மகத்தான தரிசனங்களை இனம் காட்டுபவை. சினிமாவைப் புரிந்துகொள்வதற்கான காட்சி மொழியை நோக்கி வாசகனை இக்கட்டுரைகள் வெகு நுட்பமாக நகர்த்திச் செல்கின்றன ரூ.140/-

பிகாசோவின் கோடுகள்

எஸ். ராமகிருஷ்ணன் நவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்ட கட்டுகரைகளின் தொகுப்பு இது. வான்கோ, பிகாசோ, எஷர், லாட்ரெக், காகின், கிளிம்ட், புருகேல் போன்ற உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் விரிவான தனது ரசனையைப் பதிவு செய்திருக்கிறார். உலகின் மிக முக்கியமான கலைக்கூடங்களுக்கு நேரில் சென்று ஓவியங்களைக் கண்டுவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் தேடுதலின் வெளிப்பாடே இக்கட்டுரைகள். நவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதற்குப் பயிற்சியும் ரசனையும் தொடர்ந்த ஈடுபாடும் தேவை என்பதை எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. ரூ.90/-

காஃப்கா எழுதாத கடிதம்

எஸ். ராமகிருஷ்ணன் புத்தகங்களும் பயணங்களுமே எனது இரண்டு சிறகுகள். இதன்வழியே நான் அடைந்த அனுபவங்கள் மகத்தானவை. உலக இலக்கிய ஆளுமைகளையும் அவர்களின் முக்கிய நூல்களையும் குறித்து தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன். அந்த வரிசையில் காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெர்மென் மெல்வில், தோரோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க், மிரோஜெக், ரேமண்ட் கார்வர், விளாதிமிர் மெக்ரே ,வியோலெட் லெடுக், செல்மா லாகர்லெவ் போன்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூலிது. ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும் என பைபிளில் ஒரு வரி இடம்பெற்றிருக்கிறது. அது மரத்திற்கு மட்டுமானதில்லை, எழுத்தாளர்களுக்கும் பொருந்தக்கூடியதுதானே. ரூ.200/-

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்

எஸ். ராமகிருஷ்ணன் என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல வெறியோடும் பேராசையோடும் உலகை எனது இருப்பிடத்துக்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள். எஸ்.ராமகிருஷ்ணன் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் முழுமையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து கிடக்கும் கிராமங்களையும், நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாகத் தனிமையும் துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காணமுடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகுபுனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ்ப் புனைவியலை உருவாக்குகின்றன என்பதே அதன் சிறப்பம்சம். ரூ.480/-

நடந்து செல்லும் நீரூற்று

எஸ். ராமகிருஷ்ணன் அன்றாட வாழ்வின் சொல்லப்படாத துக்கங்களும் தொடப்படாத தனிமைகளும் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகளை ஆற்றுப் படுத்த முடியாத கேவல்களின் சித்திரங்களாக மாற்றுகின்றன. ஆழம் காண முடியாத இருளில். உடைந்த மனோரதங்களுடன் வாழ்வைக் கடந்து செல்லும் இக்கதைகளின் பாத்திரங்கள் யார்மீதும் எந்தப் புகார்களும் கொண்டவையல்ல. மாறாக அவை தம் மறைவிடங்களில் தீமைகளின் இடையறாத பேச்சினைக் கேட்டபடி இருக்கின்றன. ரூ.70/-

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

எஸ். ராமகிருஷ்ணன் கடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல்வரையான இந்த சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத ஒரு கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்றன. ஆணும்பெண்ணும் ஒரே கூரையின்கீழ் வாழ்ந்தபோதும் எவ்வளவு இடைவெளியும், புதிர்மையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. கதைகளின் வழியாக வெளிப்படும் குரல் நகர வாழ்வின் அபத்தத்தையும், வெளிவேஷத்தையும், அர்த்தமற்ற தினசரிவாழ்வின் பசப்புகளையும் கேலி செய்கின்றது. அந்தக் கேலி நம்மைச் சிரிக்க செய்யும் அதே நேரத்தில் குற்றவுணர்வு கொள்ளவும், நிம்மதியற்றுப் போகவும் செய்கிறது என்பதே இக்கதைகளின் தனிச்சிறப்பு. ரூ.120/-