கடவுள் கற்ற பாடம்

ரூ. 90/- இத்தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்பொழுது உண்மையில் பிரஞ்சு இலக்கியத்தின் மீது ஒரு பெருங்காதல் தோன்றுகிறது. புதிர்களும் அர்த்தங்களும் மாறி மாறித் தோன்றும் ஒரு கனவின் கிளர்ச்சித் தன்மையைத் தந்துவிடுகிறது இதன் ஒவ்வொரு கதையும். தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் படைப்பாளர்களின் படைப்புத்திறனும் மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்பு நேர்த்தியும் இணைந்தே செல்லும் தண்டவாளம்போல நம்மைப் புதிய புதிய தூரங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. ‘கடவுள் கற்ற பாடம்’ கடவுளுக்கான பாடமேதான்.

அழகிய பெரியவன் கதைகள்

ரூ.500/- அழகிய பெரியவனின் அரசியல் நம்பிக்கையும் கலை நம்பிக்கையும் ஒன்றோடொன்று முயங்கி, ஒன்றுக்கொன்று அனுசரணையாக அமைந்திருக்கும் ஒரு பெறுமதியான உறவில் இவருடைய கதைகள் உருவாகியிருக்கின்றன. கதையுலகின் உள்ளார்ந்த தீவிரத்திலும் கதையாடலின் உயரிய கலை எழுச்சியிலும் உயிர்கொண்டிருக்கும் கதைகள் இவை. நம் மண்டையோட்டைப் பிளக்கும் கதை உலகமானது, படைப்பு மந்திரத்தின் கதகதப்பில் உருப்பெற்றிருக்கிறது.  இன்றைய தமிழ்க்கதைப் பரப்பில் அழகிய பெரியவன் தனித்துவமும் ஆற்றலும் கூடிய ஒரு சக்தி. தன் காலத்தோடும் வரலாற்றோடும் தன் கலை மொழியினூடாக அழகிய பெரியவன் வலுவான, தீர்க்கமான உறவு கொண்டிருப்பதன் அடையாளம் இத்தொகுப்பு. – சி. மோகன்

ஆ.மாதவன் கதைகள்

ரூ.500/- ஆ. மாதவன் ஒரு நூதனமான மலரினம். மூவகைப் பசியையும் எழுதியிருக்கிறார். மூவாசையையும் எழுதியிருக்கிறார். எங்கும் பிரச்சாரம் இல்லாமல், கோஷம் இல்லாமல், ஆபாசம் இல்லாமல், பகட்டு இல்லாமல், மேதாவிலாசம் புலப்படுத்தாமல், வாசகனை வெருட்டாமல்… அவரது மொழி மணிப்பிரவாளம் இல்லை, மணிமிடைப் பவளம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அற்புதமான மொழி அவரது சம்பத்து. அவர் கையாண்ட மலையாளச் சொற்கள் பெரும்பாலும் ஆதித் தமிழ்ச் சொற்கள். அவருக்கு என்று ஒரு மொழி நேர்த்தியுண்டு. அது மலையாளத்து காளன், ஓலன், எரிசேரி, அவியல், புளிசேரி, புளியிஞ்சி, சக்கைப் பிரதமன், பாலடைப் பிரதமன், உப்பேரி போல. தமிழுக்குப் புதிய மணம், புதிய சுவை. ஆ. மாதவனின் சிறுகதைகளை வாசித்தவர் இதை உணர்வார்கள், அவற்றின் தனித்துவம் பற்றியும் செய்நேர்த்தி பற்றியும் கலை வெற்றி பற்றியும் அறிவார்கள். –  நாஞ்சில் நாடன்

மரி என்கிற ஆட்டுக்குட்டி

மரியை எனக்குத் தெரியும். அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள். வசதியான குடும்பம். தெருவில் மூன்று கார்கள் நின்றன. நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள். வீட்டில், அம்மா இல்லை. அதாவது குழந்தையிடம் இல்லை. அப்பா, பணம் பண்ணிக் கொண்டிருந்தார். அம்மாவும் அப்பாவும் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று மரி நினைத்தாள். அவள் உலகை வெறுக்கத் தொடங்கினாள். குழந்தைகள் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான். அது மட்டும்தான். அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம். – பிரபஞ்சன் ரூ.170/-

படைப்பாளிகள் உலகம்

ஒரு கதாசிரியன் எவ்வளவுதான் கதைகள் எழுதினாலும் ஒரே கதையைத்தான் மா(ற்)றி மா(ற்)றி எழுதுகிறான் என்ற கூற்றில் உண்மையில்லை என்று கூறிவிடமுடியாது. இதையே இன்னும் சிறிது விஸ்தரித்தோமானால் அவன் என்ன எழுதினாலும் அது அந்த ஒரே கதையின் இன்னொரு வடிவம்தான் என்றும் கூறிவிடமுடியும். இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை ஒருசேர இப்போது படித்தபோது எனக்கு அவை என் கதைகள் இவ்வளவு ஆண்டுகள் சொல்லி வரும் செய்தியைத்தான் வெவ்வேறு தகவல்கள் கொண்டு சொல்வதாகத் தோன்றியது. இக்கட்டுரைகளை எழுத நேர்ந்தபொழுது ஒரு சில எனக்கு நிர்ப்பந்தமாகக் கூடத் தோன்றியிருக்கின்றன. ஆனால் எழுதி முடித்தபின் இவை அனைத்தும் என் சிந்தனைக்கும் கவனத்திற்கும் நிறைய ஊக்கம் தந்திருக்கின்றன. ஒரு நல்ல கதை எழுதி முடிப்பதில் விளையும் ஊக்கத்துக்கும் உற்சாகத்துக்கும் மனநிறைவுக்கும் இது சற்றும் குறைந்ததல்ல. – அசோகமித்திரன் ரூ.190/-

சொல்முகம்

என் உரைகள் எல்லாமே முன்னரே தெளி-வாகக் கட்டுரை வடிவில் எழுதப்பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அந்தக் குறிப்புகளை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன். ஆனால் நான் ஒருபோதும் குறிப்புகளைப் பார்த்து வாசித்ததில்லை. எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்-போவதென்ன என்பது முன்னரே தெளிவாகி-விடுகிறது. நம் உரைக்கு தொடக்கம், முடிவு, உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்–கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத் திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது. இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம். ரூ.170/-

நாளும் பொழுதும்

நாளும் பொழுதும்’ நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன். ஏற்கனவே வாழ்விலே ஒருமுறை, நிகழ்தல் போன்ற தொகுதிகளில் என் இத்தகைய எழுத்து-கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை வாசகர்-களுக்கு மிக நெருக்கமானவையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஏனென்றால் இவை உண்மை-யான அனுபவங்கள் என்ற பிரக்ஞை இவற்றுக்கு வாசகரின் நம்பகத்தை உருவாக்கித் தருகிறது. அந்த உண்மையனுபவத்தில் இருந்து எழும் ஓர் உணர்ச்சி அல்லது தரிசனம் வாசகன் எளிதில் தொட்டறியக் கூடியதாக உள்ளது. சிறந்த புனைவுத் தருணங்கள் அளவுக்கு இந்த அனுபவத் தருணங்களும் கலைத்-தன்மையை அடைவது இப்படித்தான். ரூ.120/-

சார்வாகன் கதைகள்

இப்போது, நான் எழுதியிருப்பவற்றையெல்லாம் ஒருசேரப் பார்க்கும்போது ‘அட, நான் இத்தனை எழுதியிருக்கிறேனா?’ என்ற மலைப்புடன் கூடிய மகிழ்ச்சி. நான் உண்மையாக ‘எழுத்தாளன்’ என்றிருந்தால் இதைப் -போலக் குறைந்தபட்சம் நாலைந்து மடங்காவது எழுதிக் -குவித்திருக்கவேண்டும், என் கை விரல்கள் மரத்து மடங்கி-விட வில்லையே! ஆகவே இன்னமும் எழுதிக்கொண்டிருக்கவும் வேண்டும். இரண்டும் நேரவில்லை. நான் அவ்வப்போது ஏதேதோ எழுதியிருந்தாலும் எப்போதும் என்னை ஒரு ‘எழுத்தாள’னாகக் கருதிக்கொண்டதில்லை. இப்போதும் கருதிக்-கொள்ளவில்லை.வானத்தில் என்றோ ஒருநாள் தோன்றிச் சில நாள் இருந்து மறையும் வால்நட்சத்திரம் போன்ற விசித்திரப்பிறவி என்று தான் நான் நினைத்தேன். எனவேதான் போலும், “இது என் குழந்தை!” என்று நான் மார்தட்டித் திரியவுமில்லை. அப்படித் திரியவேண்டும் என்று தோன்றவுமில்லை. – சார்வாகன் ரூ.400/-

சினிமா பாரடைஸோ

சினிமா பாரடைஸோ படம் பார்ப்பதற்குத் தரும் அதே சுவாரஸ்யத்தை அந்தப் படத்தின் திரைக்கதை வசனமும் தருகிறது. பொதுவாகத் திரைக்கதை வசனத்தைப் படத்தின் கதாசிரியர்தான் எழுதுவார். பின்னர் அது பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். ஆனால் இது மொழிபெயர்ப்புப் புத்தகமல்ல. படத்தை டிவிடியில் பலமுறை பார்த்து நேரடியாகத் தமிழில் அதன் திரைக்கதை வசனத்தைத் தந்திருக்கிறார் யுகன். இது ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பதைவிடக் கடினமானது. யுகன் நிறைய காலம் உழைத்து இப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். சினிமா பாரடைஸோ ஏற்கனவே எல்லோராலும் மிகவும் விரும்பப்பட்ட படமாதலால் சரளமாக எவ்வித நெருடலுமின்றி எழுதப்பட்டிருக்கும் அதன் திரைக்கதை வசனமும் நல்ல வரவேற்பினைப் பெறும். – அம்ஷன் குமார், திரைப்பட இயக்குநர் ரூ.95/-