கானல் நதி

யுவன் சந்திரசேகர் யுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’ கலையின் எல்லையற்ற பிரகாசத்திற்கும் மனித இருப்பின் முடிவற்ற பெரும் துயருக்கும் இடையே ஒரு அக்னி நதியாக உருக்கொள்கிறது. இந்த நதி காலங்காலமாக மனித அனுபவத்தின் மீள முடியாத கனவொன்றை நம் நெஞ்சில் படரச் செய்கிறது. தனஞ்செயனைத் துரத்தும் விதியின் நிழல் எது? அது திரும்பத் திரும்ப சொல்லப்படும் இழந்த காதலின் தணியாத விம்முதல் மட்டும்தானா, அல்லது வீழ்ச்சிகளின் மன முறிவுகளின் யாரும்இனம் காண முடியாத விதியின் ரகசியங்களா? வாதையின் இடையறாது அதிரும் தந்திகளால் முடிவற்ற துயரத்தின் இசையை கசியச் செய்கிறது இந்நாவல். ரூ.200/-

உறுபசி

எஸ். ராமகிருஷ்ணன் நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது. ரூ.110/-

ரத்தம் ஒரே நிறம்

சுஜாதா சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சுஜாதாவின் ‘ரத்தம் ஒரே நிறம்.’ இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்தப் படுகொலைகளும் குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன. தனிமனித விருப்பு வெறுப்புகளும், இலட்சியவாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சிப் பெருக்கையும் துயரங்களையும் பிரமாண்டமாகச் சித்தரிக்கும் சுஜாதா சரித்திரப் புனைகதை வடிவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறார். குமுதத்தில் ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ என்ற பெயரில் சில அத்தியாயங்கள் வெளிவந்து கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்ததால் நிறுத்தப்பட்டு மீண்டும் ‘ரத்தம் ஒரே நிறம்’ என்ற பெயரில் எழுதப்பட்டது இந்த நாவல். ரூ.260/-  

வஸந்த் வஸந்த்

சுஜாதா சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் தொடர்களில் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்த நாவல் வஸந்த்! வஸந்த்! ஒரு பழங்காலக் கிணறு குறித்த ஆராய்ச்சிக் குறிப்பும் அதன் பின்னணியில் நிகழும் குற்றங்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சித்தரிக்கப்படும் இந்நாவல் வாசகர்களின் யூகங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேறு திசைக்குத் திருப்பிவிட்டு எதிர்பாராத திருப்பங்களை உருவாக்குகிறது. சுஜாதாவின் அங்கதம் அதன் உச்சத்தைத் தொட்ட படைப்புகளில் இதுவும் ஒன்று. ரூ.140/-

வண்ணத்துப் பூச்சி வேட்டை

சுஜாதா உண்மைக்கும் பொய்க்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய திரைதான். ஆனால் அது அன்றாட வாழ்க்கையில் உறவுகளின் நாடகத்தில் அவ்வளவு எளிதில் விலக்க இயலாத இரும்புத்திரை என்பதைச் சித்தரிக்கும் நாவல் வண்ணத்துப்பூச்சி வேட்டை. ஆண்களின் உலகத்தில் பெண்களின் தனிமையையும் பயங்களையும் அவர்கள் மேல் செலுத்தப்படும் வெளிப்படையான, மானசீக வன்முறையையும் சுஜாதா மனநெகிழ்ச்சியூட்டும் வகையில் இந்நாவலில் விவரிக்கிறார். மிக நுட்பமான சித்தரிப்புகளும் அவதானிப்புகளும் இந்நாவலை மிகவும் அழகியல் தன்மை கொண்டதாக மாற்றுகின்றன. ரூ.115/-

பேசும் பொம்மைகள்

சுஜாதா இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான(Downloading) ‘டவுன் லோடிங்’ என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்திரத்துக்கு மாற்றிப் புகட்ட முடியுமா என்று பலர் வியந்து இதுசாத்தியமே இல்லை என்றார்கள். இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி நிலையில் இது சாத்தியமில்லைதான். ஆனால் இன்று அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளின் முற்போக்கு ஆராய்ச்சி நிலையங்களில் ‘செயற்கை அறிவு’ என்ற இயலின் ஒரு பிரிவாக இத்தகைய மூளைச் செய்தி மாற்றும் ஆராய்ச்சிகள் செய்து சிறிதளவு வெற்றி கண்டும் இருக்கிறார்கள். இந்த வெற்றியின் ஒரு கற்பனை விரிவாக்கம்தான் ‘பேசும் பொம்மைகள்’. ரூ.180/-

காகித மலர்கள்

ஆதவன் வெவ்வேறு வேடங்களின் கைதிகள். அரசியல் தலைவர்கள்.mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், ‘நடக்கிறபடி நடக்கட்டும் நமக்கேன் வம்பு?’ என்ற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவு ஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமான, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு சில ‘தியரிகளை உச்சாடனம் செய்துகொண்டு, ‘உஞ்ச விருத்தி’ செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள். பெண்கள் ஆணின் ‘அடிமை’, ‘மகிழ்வூட்டும் கருவி’ அல்லது இந்தப் பிம்பங்களுக்கெதிராகப் புரட்சி செய்கிறவள்-என்கிற பிம்பங்களின் கைதிகள். இளைஞர்கள், வயதையும், ‘வேடங்கள்’ அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற ஒரு அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurity இன், ஒரு alienation இன் கைதிகள். இத்தகைய பல கைதிகளையே ‘காகித மலர்கள்’ அறிமுகம் செய்கிறது. ரூ.190/-

என் பெயர் ராமசேஷன்

ஆதவன் ஒரு நகர்ப்புற மத்திய தர இளைஞனின் கண்களின் வழியே நவீன வாழ்நிலையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்தரிக்கப்படும் என் பெயர் ராமசேஷன் ஆதவனின் புகழ் பெற்ற நாவல். சுய நிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட இளமையின் வண்ணம் மிகுந்த சித்திரம் இந்தநாவல். ரூ.120/-

நெடுங்குருதி

எஸ். ராமகிருஷ்ணன் வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு. தலைமுறைகளாக இக்கனவைக் கடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங்களும் நிலைகொள்ள முடியாத தத்தளிப்புகளும் ஆசாபாசங்களின் இருளும் வெளிச்சமும் இந்நாவலில் முடிவற்ற குருதிப் பெருக்காகின்றன. பொருளற்ற வாழ்வும் மரணமும் தங்கள் வசியக் குரலால் வேம்பலையை நோக்கி மனிதர்களை அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு பிரமாண்டமான கனவின் திரைமீது அறியப்படாத யதார்த்தம் ஒன்றை எழுதுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இந்நாவல். வாசகர்களின் பெரும் கவனத்திற்கும் தீவிர வாசிப்பிற்கும் உரியதாக இருந்த நெடுங்குருதி இப்போது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. ரூ.410/-