எப்போதுமிருக்கும் கதை

எஸ். ராமகிருஷ்ணன் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இலக்கிய இதழ்களில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்தும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீதான தனது அவதானிப்புகள் மற்றும் விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.இந்த நேர்காணல்கள் படைப்பாளியின் தனிப்பட்ட பார்வைகள் என்பதைத் தாண்டி புனைகதை குறித்த ஆழ்ந்த விசாரணையை முன்வைக்கின்றன. புதியதொரு கதையியலை நோக்கி வாசகனை அழைத்துச் செல்லும் முனைப்பும் உலக இலக்கியத்தின் பரந்த வாசிப்பு அனுபவமும் முழுமையாக வெளிப்படுகின்றன என்பதே இந்த நேர்காணல்களின் சிறப்பம்சம். ரூ.65/-

விழித்திருப்பவனின் இரவு

எஸ். ராமகிருஷ்ணன் நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு. இப்படைப்பாளிகள் குறித்த பொதுவான இலக்கிய பிம்பங்களைத் தாண்டி அவர்களது கனவும் பைத்திய நிலையும் கொண்ட வேட்கைகளை, தேடல்களை விரிவாகப் பதிவு செய்யும் இக்கட்டுரைகள் உயிர்மை இதழில் தொடராக வெளிவந்து பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன. வெறும் தகவல் குறிப்புகளாக அல்லாமல் தீவிர மன எழுச்சியையும் படைப்பாளியின் சவால்கள் குறித்த உக்கிரமான கேள்விகளையும் எழுப்பும் இந்நூல் ஒரு ஆய்வாளனின் கடும் உழைப்பும் ஒரு படைப்பாளியின் தீவிர அழகியலும் கொண்டதாகத் திகழ்கிறது. ரூ.150/-

கோடுகள் இல்லாத வரைபடம்

எஸ். ராமகிருஷ்ணன் திசைதெரியாத கடலில் சூரியனையும் நட்சத்திரங்களையும் துணையாகக் கொண்டு பயணம் செய்த கடலோடிகள் எண்ணிக்கையற்ற விசித்திரங்களைக் கண்டிருக்கிறார்கள். வாசனை திரவியங்கள் வாங்கவும், வணிக வழிகளை உண்டாக்கவும் பௌத்தம் கற்றுக் கொள்ளவும், வானவியலின் உச்சங்களை அறிந்து கொள்ளவும் என வேறு வேறு நோக்கம் கொண்ட பலர் நாடோடி, பயணிகளாக கடல்,மலையறியாமல் சுற்றியலைந்திருக்கிறார்கள். வதைபட்டிருக்கிறார்கள். நிலக்காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி உலகைச் சுற்றிவந்த பிரசித்தி பெற்ற யாத்ரீகர்களான யுவான்சுவாங், பாஹியான், வாஸ்கோட காமா, அல்பெருனி, மார்கோ போலோ உள்ளிட்ட பதிமூன்று பயணிகளைப் பற்றியது கோடுகள் இல்லாத வரைபடம். இலக்கற்று ஊர்சுற்றித் திரியும் என் பயணங்களுக்கு இவர்களையே முன்னோடிகளாகக் கொள்கிறேன். அந்த வகையில் என் முன்னோடிகளைப் பற்றிய அறிமுகமும் நினைவுபகிர்தலுமே இந்தக் கட்டுரைகள். ரூ.60/-

சித்திரங்களின் விசித்திரங்கள்

எஸ். ராமகிருஷ்ணன் நவீன ஓவியம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், சினிமாவிற்கும் ஓவியத்திற்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகின்றவர்களுக்கும், ஓவியத்தின் பின்உள்ள கதைகளை, ஓவியனின் வாழ்வை உணர்ந்து கொள்ள முற்படுகின்றவர்களுக்குமான எளிய அறிமுகமே சித்திரங்களின் விசித்திரங்கள். இன்றைய சினிமா அதன் ஒளிப்பதிவு முறையில் அதிகம் ஓவியங்களின் பாதிப்பு கொண்டதாக இருக்கிறது. புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களான ஸ்டேரெரோ, வில்மாஸ் சிக்மண்ட், நிக்விஸ்ட், கார்டன் வில்லிஸ் போன்றவர்கள் தங்களது உந்து சக்தியாக ஓவியர்களையே குறிப்பிடுகிறார்கள். சித்திரங்களின் விசித்திரங்கள் தீராநதியில் தொடராக வெளிவந்து பரந்த வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. ரூ.75/-

குறத்தி முடுக்கின் கனவுகள்

எஸ். ராமகிருஷ்ணன் நவீன இலக்கிய மறுவாசிப்பு – ஜி.நாகராஜன், புதுமைப்பித்தன், ஹெப்சிபா ஜேசுதாசன், சம்பத், வண்ணதாசன், சரத் சந்திரர். வைக்கம் முகமது பஷீர் என்று நீளும் இந்த மறுவாசிப்புக் கட்டுரைகள் நவீன இலக்கிய படைப்புகள் சார்ந்த புதிய வாசிப்பு அனுபவத்தையும் அணுகுமுறையையும் வெளிப்படுத்துகின்றன. புத்தக வாசிப்பு என்பது வெறும் நிகழ்வல்ல. மாறாக, அது கற்றுக்கொள்ளும் தொடர் இயக்கம். நவீன இலக்கியம் சார்ந்த இந்த மறுவாசிப்பு நாம் கவனம் கொள்ளத் தவறிய முக்கிய நூல்களை மீண்டும் அடையாளப்படுத்துகிறது. தீவிர வாசகன் தன்னை ளர்த்துக்கொள்ள வேண்டிய முக்கிய படைப்புகளை அடையாளம் காட்டும் சிறப்பான நூல் இது. ரூ.120/-

கலிலியோ மண்டியிடவில்லை

எஸ். ராமகிருஷ்ணன் அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம். ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்துகொள்ள முயன்றதே இக்கட்டுரைகள். அதிகம் விவாதிக்கப்பட்ட இந்தக் கட்டுரைகள் அறிவியல், இலக்கியம், சினிமா, கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப் புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் ரூ.85/-

பெயர் இல்லாத ஊரின் பகல் வேளை

எஸ். ராமகிருஷ்ணன் நவீன மனிதகுல வரலாறு புலம்யெர்வுகளின் வரலாறாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அறிவியலும் தொழில் நுட்பமும் காலம், இடம் சார்ந்த இடைவெளிகளை அழித்துவரும் அதே சமயம் அரசியல், சமூக, பொருளியல் காரணிகளால் மனிதர்கள் இடம் பெயர்வதும் பல்வேறு கலாச்சாரக் குழப்பங்களுக்கு ஆளாவதும் கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் பெரும் மனித அனுபவமாக மாறிவிட்டது. கலைகளும் இலக்கியங்களும் இந்த அனுபவத்தைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. மனிதர்களின் அலைந்துழலும் வாழ்வின் ரகசியங்களைச் சொல்லும் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள் சிதறுண்டுபோன நவீன மனித வாழ்க்கை குறித்த காட்சிகளை முன்வைக்கின்றன. இக்கதைகள் வாசிப்போம் சிங்கப்பூர் இயக்கத்திற்காக பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டவை. ரூ.50/-

வெளியில் ஒருவன்

முதல் தொகுப்பினை மறுபடியும் கையில் எடுத்து வாசித்துப் பார்ப்பது என்பது பழைய கறுப்பு வெள்ளை புகைப்படத்தைக் கையில் வைத்து பார்ப்பதை போன்றது, நானும் வளர்ந்திருக் கிறேன், எனது எழுத்தும் வளர்ந்திருக்கிறது, இந்த மாற்றங் களை ஏற்படுத்திய காலம் இரண்டினையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது, முதல்தொகுப்பு வெளியாகின்ற நாளில் இதை எத்தனை பேர் வாசிக்கப்போகிறார்கள், எவ்வளவு வரவேற்பு பெறும் எனத் தெரியாத நடுக்கமும் கவலையும் இருந்தது, ஆனால் புத்தகம் வெளியான சில வாரங்களிலே பெரியவரவேற்பு பெற்றதுடன் இன்றுவரை எனது முதற்தொகுப்பின் கதைகளைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகின்றவர்களைக் காணமுடிகிறது, அந்த வகையில் நான் பாக்கியசாலி, இன்று எனது முதற்தொகுப்பு அப்படியே மறுபதிப்பு காணுவது சந்தோஷம் தருகிறது. என்றோ பள்ளிவயதில் நோட்டில் ஒளித்து வைத்த மயிலிறகை திரும்பக் கண்டெடுத்துப் பார்ப்பது போல மனது குதூகலம் அடைகிறது. -எஸ்.ராமகிருஷ்ணன் ரூ.90/-

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி

மனதின் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக்கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான், கதைக்கருவிலும் கதை சொல்லும் முறையிலும் கவித்துவமான மொழியிலும் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவை எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள். ஒரு படைப்பு திரும்பத் திரும்ப வாசிக்கப்படுவதும், வேறு கலைவடிவங்களுக்கு உருமாறுவதும் தற்செயலானதில்லை. மாறாக, அந்தப் படைப்பு மற்றும் படைப்பாளி காலத்தின் ஊடாகத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் தாக்கத்தின் அடையாளம் என்றே கூறவேண்டும். எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியச்சூழலோடு ஏற்படுத்தி வரும் தாக்கமும் இத்தகைய ஒன்றே. எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், உருது, தெலுங்கு, கன்னடம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி

வரலாறு, எதார்த்தம், புனைவு என்ற எல்லைகளைக் கடந்து செல்கின்றன எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள். மனித வாழ்வின் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையிலும் பெருகிடும் வாழ்வின் மகத்துவங்களை அடையாளம் காட்டுகின்றன இக்கதைகள். காலனியம் ஏற்படுத்திய மோசமான விளைவுகளைத் தொடர்ந்து எஸ்.ரா. தனது சிறுகதைகளில் பதிவு செய்து வருகிறார். அவை அழுத்தமான வரலாற்று நினைவுகள். குறுங்கதைகள், மிகைபுனைவுகள், அதிகதைகள், மாய யதார்த்தக் கதைகள், வரலாற்று மீள்புனைவுகள், நடப்பியல் கதைகள், உருவகக் கதைகள் எனப் புனைவின் எல்லையற்ற சாத்தியங்களை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டுவதே இவரது எழுத்தின் சாதனை. எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், உருது, தெலுங்கு, கன்னடம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. ரூ.410/-