கண்ணீரைப் பின் தொடர்தல்

ஜெயமோகன் சென்ற அரைநூற்றாண்டாகத் தமிழில் இந்திய இலக்கியங்கள் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு அவற்றுக்கு மதிப்புரைகள் கூட வருவதில்லை. இந்நூலில் ஜெயமோகன் அவரது மனம் கவர்ந்த இருபத்திரண்டு நாவல்களை நுட்பமாகவும் விரிவாகவும் ஆராய்கிறார். வங்க நாவல்களான ஆரோக்கிய நிகேதனம் (தாராசங்கர் பானர்ஜி), பதேர்பாஞ்சாலி (விபூதிபூஷண் பந்த்யோபாத்யாயா), நீலகண்ட பறவையைத்தேடி (அதீன் பந்த்யோபாத்யாய), கன்னட நாவல்களான மண்ணும் மனிதரும் (சிவராம காரந்த்), ஒரு குடும்பம் சிதைகிறது (எஸ்.எல்.பைரப்பா), உருது நாவலான அக்னி நதி (குர் அதுல் ஐன் ஹைதர்), குஜராத்தி நாவலான வாழ்க்கை ஒரு நாடகம் (பன்னாலால் பட்டேல்) போன்றவற்றை உலகப் பேரிலக்கியங்கள் எதற்கும் நிகரானவை என ஒரு நல்ல வாசகன் சொல்வான்.இந்நூல்கள் பற்றிய ஆய்வுகள் வாசித்தவர்களுக்கு அவற்றின் நுட்பங்களைக் காட்டும், வாசிக்காதவர்களுக்கு அந்நூல்களின் சிறப்பை உணர்த்தும், நாவல்களை வாசிப்பது போன்றே உத்வேகத்துடன் வாசிக்கவைக்கும் மொழிநடை கொண்ட நூல் இது. ரூ.125/-

ஆழ்நதியைத் தேடி

ஜெயமோகன் தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? என்னுடைய இளம் வாசக நண்பர் ஒருவரிடமிருந்து வந்த வினா இது. தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? அவருக்கு விளக்கும் முகமாக எனக்கு நானே அதை வரையறை செய்யவும் இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் அது எவ்வண்ணம் செயல்படுகிறதென நோக்கவும் முயன்றேன். அவருக்கு எழுதிய கடிதங்களை மீண்டும் கட்டுரையாக எழுதினேன். இது அது. ஆன்மீகம் குறித்த எந்த ஒரு விவாதத்தைப் போலவே இதுவும் வாசகன் தன் பதில்களைத் தானே தேடிச் செல்லும் பயணத்துக்கு உதவக்கூடிய கூடுதல் வினாக்களை எழுப்பவும், எழுப்பப்பட்ட வினாக்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும் மட்டுமே உதவும் என்று எண்ணுகிறேன். பதில்களை முன்வைப்பது அல்ல இதன் நோக்கம்; சில திறப்புகளை உருவாக்க முயல்வதே. அது நிகழுமென எண்ணுகிறேன். ரூ.60/-

சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்

ஜெயமோகன் இது சுந்தர ராமசாமி குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது என்றே எண்ணுகிறேன். இந்நினைவுகள் எனது ஒரு காலகட்டத்தின் சித்திரங்களாகவே என் பார்வைக்குப் படுகின்றன. இது சுந்தர ராமசாமி அல்ல, என்னுடைய சுந்தர ராமசாமி என்று படுகிறது. இதேபோலப் பல சுந்தர ராமசாமிகள் இருக்கலாம். அவர்களும் எழுத்தில் வரக்கூடும். அது வரவேற்கத்தக்கதே. நம் காலகட்டத்து மாபெரும் ஆளுமைகளில் ஒன்று அவர். சிலைகளை உருவாக்க வேண்டாம். அவை சரியும். ஆனால் மூதாதையரை உண்டு செரித்துக் கொள்வோம். அது நம் வேருக்கு நீர்.(ஜெயமோகன் ), சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில், ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ராவைப் பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும் உக்கிரமான உரையாடல்களும் மிகுந்த இந்நூலின் முதல் பகுதி உயிர்மை இதழில் வெளிவந்தபோது வாசகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சு.ராவின் நினைவுகளைப் பல்வேறு தளங்களில் விரித்து எழுதிய இந்நூல் அவரைப் பற்றிய படைப்பூக்கமுள்ள ஓர் ஆவணமாகத் திகழ்கிறது. ரூ.100/-

நவீன தமிழிலக்கிய அறிமுகம்

ஜெயமோகன் நவீன இலக்கியத்தினுள் நுழைய விரும்பும் வாசகனுக்குரிய முழுமையான எளிய கையேடு இது. நவீன இலக்கியம் என்றால் என்ன, அதனுள் நுழையும்போது வரும் சிக்கல்கள் என்ன, ஒரு வாசகனாக எப்படி நம்மைத் தயாரித்துக்கொள்வது போன்ற வினாக்கள் எளிமையாக இந்நூலில் விளக்கப்படுகின்றன. நூற்றாண்டுகால நவீனத் தமிழிலக்கியத்தின் சுருக்கமான வரலாறு அளிக்கப்பட்டுள்ளது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கியஇயக்கங்கள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. இன்றியமையாத இலக்கியக் கலைச்சொற்களுக்குப் பொருள் அளிக்கப்பட்டுள்ளது. முக்கியப் படைப்பாளியும் இலக்கிய விமர்சகருமான ஜெயமோகன் அவரது தெரிவில் நவீன இலக்கியத்தின் சிறுகதை, நாவல், கவிதை ஆகியவற்றிலும் வணிக எழுத்திலும் உள்ள குறிப்பிடத்தக்க நூல்களின் பட்டியல் ஒன்றை அளித்துள்ளார். மேலும் இந்நூலில் இலக்கியஆக்கம். இலக்கிய வாசிப்பு என்ற இரு தளங்களையும் ஆசிரியர் மிக எளிமையாக விளக்குவதும் குறிப்பிடத்தக்கது ரூ.175/-

தனிக்குரல்

ஜெயமோகன் ஒரு எழுத்தாளனின் பணி அனுபவங்களை தொகுப்பது மட்டுமல்ல. கருத்தாக்கங்களை உருவாக்குவதன் மூலமும் உரையாடலுக்கான கேள்விகளை தொடர்ந்து எழுப்புவதன் மூலமும் அவன் தனது சூழலை உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறான். அவன் தற்செயலாக, போகிற போக்கில் எழுப்புகிற கேள்விகள் மீண்டும் மீண்டும் பலராலும் பதில் சொல்லப்பட்டு நிரந்தரம் பெற்று விடுகின்றன. அந்த வகையில் ஜெயமோகன் தனது பேச்சுகளின் ஊடாக முன்வைத்த பல கருத்துகள் கடந்த இருபதாண்டுகளில் நவீன தமிழ் இலக்கிய சூழலின் தொடர்ச்சியான பேசுபொருளாக இருந்திருக்கின்றன. கடும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் உருவாக்கி இருக்கின்றன. சில சமயம் அவை தர்க்கத்தின் பாற்பட்டவை. சில சமயம் காழ்ப்பின் வழி நிற்பவை. இந்தத் தொகுதியில் ஜெயமோகன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள் இடம்பெறுகின்றன. அவை பல்வேறு கலை இலக்கிய, சமூக பிரச்சினைகளை தீவிரமாக விவாதிக்கின்றன. ரூ.110/-

புதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள்

ஜெயமோகன் இலக்கிய விமரிசனம் என்பது இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியே. ஆனால் நாம் நமது முன்னோடிகளைப் பற்றிப் பேசும் அளவுக்குச் சமகால இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதில்லை. ஆகவே சமகாலத்து எழுத்தாளர்களைப்பற்றிய நமது பார்வை எப்போதும் மங்கலாகவே இருக்கிறது. இந்நூல் சமகாலத்தின் முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை விமரிசனப்பார்வையில் அணுகி அவர்களை புரிந்துகொள்ள முயல்கிறது. அவர்களை சூழலிலும் மரபிலும் வைத்துப் பரிசீலிக்கிறது விமரிசனம் என்பது எப்போதும் ஒரு விவாதமே. தீர்ப்போ அளவீடோ அல்ல. இந்நூலும் சமகாலத்தின் ஆக்கங்கள் மீது விவாதங்களையே உருவாக்குகிறது. விவாதிப்பதன்மூலம் இப்படைப்பாளிகளை நாம் நெருங்கிச்செல்கிறோம் ரூ.170/-

முன்சுவடுகள்:சில வாழ்க்கை வரலாறுகள்

ஜெயமோகன் நாம் நடந்துசெல்லும் இந்தப்பாதையில் ஏராளமான பாதச்சுவடுகள். நாம் அவற்றை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் செல்கிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு எச்சரிக்கைகள், ஒவ்வொரு பாடங்கள். இலக்கியத்தில் சுயசரிதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளுக்கு வரும் முக்கியத்துவம் இவ்வாறுதான் உருவாகிறது. இந்நூல் பல்வேறு வாழ்க்கை வரலாறுகளில் உள்ள ஆர்வமூட்டும் பகுதிகளை எடுத்து சுருக்கமாக மறு ஆக்கம்செய்து அளிக்கிறது. விதவிதமான வாழ்க்கைகள்: வழியாக கடந்துசெல்லும் வண்ணமயமான அனுபவத்தை அளிக்கிறது இது. ரூ.75/-

சாட்சி மொழி: சில அரசியல் குறிப்புகள்

ஜெயமோகன் நாம் எப்போதும் அரசியலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம், ஓயாமல் விவாதிக்கிறோம். ஏனென்றால் அது நம்முடைய நிகழ்காலத்தின், எதிர்காலத்தின் மீதான விவாதம். இந்த விவாதங்களில் எத்தனையோ தரப்புகள் உண்டு. கட்சித்தரப்புகள். கோட்பாட்டின் தரப்புகள். அவற்றில் ஒன்று எழுத்தாளனின் தரப்பு. எழுத்தாளனின் தரப்பு என்பது கட்சி மற்றும் கோட்பாடுகளைச் சார்ந்ததாக இருக்க முடியாது. எந்த நுண்ணுணர்வால் அவன் இலக்கியங்களைப் படைக்கிறானோ அந்த நுண்ணுணர்வால் அவன் சமகால அரசியலை அணுகும்போது உருவாகும் கருத்துக்களால் ஆனது அது. ஒரு நாவலை எழுதும் அதே ஆராய்ச்சியுடன் முழுமை நோக்குடன் அவன் வரலாற்றையும் அரசியலையும் பார்ப்பான் என்றால் அவன் குரலை எவரும் புறக்கணித்துவிட முடியாது சமகால அரசியல் குறித்த எண்ணங்களும் எதிர்வினைகளும் பதிவுகளும் கொண்ட நூல் இது ரூ.160/-

இன்று பெற்றவை:எழுத்தாளனின் நாட்குறிப்புகள்

ஜெயமோகன் எந்த ஒரு நாட்குறிப்பும் ஆர்வமூட்டுவதே. அதில் ஓரு மனிதனின் வாழ்க்கை உள்ளது. எழுத்தாளனின் நாட்குறிப்பு என்பது ஒரு பண்பாடு தன் நாட்குறிப்பை எழுதுவதுபோல. கடந்த சிலவருடங்களில் ஜெயமோகன் பண்பாட்டு அரசியல் மற்றும் இலக்கிய விவாதங்களைப் பற்றி எழுதிய சிறிய குறிப்புகளின் நாள்வழி அமைப்பு இந்நூல். இங்கே என்ன பேசப்பட்டது என்பதற்கும் என்ன பேசப்படவில்லை என்பதற்கும் சான்று இது. நுண்ணிய அவதானிப்புகளும் எதிர்வினைகளும் அடங்கியது. ரூ.150/-

புல்வெளி தேசம்:ஆஸ்திரேலியப் பயணம்

ஜெயமோகன் ஆஸ்திரேலியா இயற்கை சில பரிசோதனைகள் நிகழ்த்துவதற்காக ஒதுக்கு புறமாக கொண்டு வைத்த ஒரு நிலம். அங்கே விசித்திரமான மிருகங்கள் வேறுபட்ட செடிகொடிகள் உள்ளன. அந்நிலத்து மனிதர்கள் வெளியுலகம் அறியாமல் தங்கள் வாழ்க்கையை நடத்தி தங்கள் பண்பாட்டை முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக அமைத்துக்கொண்டவர்கள். அந்நிலத்தை ‘நாகரீக’ உலகம் கண்டடைந்தபோது அது பேரழிவாக ஆகியது. பின்னர் ஒரு புதிய உலகம் அங்கே உருவாகி வந்தது ஜெயமோகன் தன் துணைவியுடன் மேற்கொண்ட ஆஸ்திரேலிய பயணம் ஒன்றின் பதிவு இந்நூல். அந்த புதிய நிலத்தை மிக விரிவான தகவல்களுடன் நுணுகி ஆராய்கிறார் ஆசிரியர். ரூ.125/-