படைவீடு

இன்றைய சமூக சீர்கேட்டுக்கெல்லாம் எதோ ஓர் இடத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்க வேண்டும். இந்த நாவல் அதைத் தேடிய பயணம்தான். 14 ஆம் நூற்றாண்டில் தமிழ் பேரரசுக்கு சமயம், பண்பாடு இரண்டிலும் ஒரு நெருக்குதல் ஏற்பட்டது. மதுரையை ஆண்ட சுல்தானியர்களும் விஜயநகரத்தை ஆண்ட ஹரிகர புக்கர் அரசும் உண்டாக்கிய நெருக்கடியின் வலி இன்றும் தொடர்கிறது. விமர்சனக் களம் கொண்ட இந்த நாவலும் விமர்சனத்துக்குத் தப்பாது என்பது கண்கூடு. சமயம், சாதி தொடர்பான பல கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியாகவும் இந்த நாவலைப் படைத்திருக்கிறார் தமிழ்மகன்.

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது… இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டுடெடுத்த எழுத்துக்களும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துக்களும் ஒன்றுபோல இருப்பது ஏன்? இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன? தென்கோடி தமிழ் நாட்டில் இருந்து மெசபடோமியா – கிரேக்கம் என நடந்த வர்த்தகம் என்ன சேதியைச் சொல்கிறது?… நினைவிலே தமிழ் உள்ள மிருகமாக நாம் இருக்கிறோம். ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் அதைத்தான் பேசுகிறது. ரூ.150

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெட்ராஸை பற்றி சிறிதும் பெரிதுமாகப் பல நூல்கள் வெளியாகியுள்ளன. இது சென்னையின் சமீபத்திய 50 ஆண்டு கால மாற்றங்களைச் சொல்லும் சிறிய நூல். சென்னையில் ஒருவர் தனியாக ரயில் வைத்திருந்தார் என்கிற தகவலில் இருந்து சென்னை சென்ட்ரல் அருகே இருந்த மிருகக் காட்சிசாலையில் இருந்த எம்.ஜி.ஆர். வளர்த்த சிங்கம் வரை பல சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்கிறது. ஒரு நகரம் நம் கண் முன்னாலேயே எப்படி மாறிப் போயிருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவைக்கும் விறுவிறுப்பான நூல்.

ஆண்பால் பெண்பால்

எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண் – பெண் பாகுபாடு போல இல்லை, மனிதர்களில் உள்ள பால் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துகள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி, எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு கையெழுத்து, குரல், சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம். ஆண்பால் பெண்பால் நாவல் அந்த அற்புத முரண்பாட்டை படைப்பிலக்கியத்தின் வழியே அறிவியல் பூர்வமாகவும் உணர்த்துகிறது.

அமரர் சுஜாதா

எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு.  எழுத்தாளர் சுஜாதா தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து அறிவியல் கதைகள் எழுதி வந்தவர், அவருக்கு செய்யும் ஒரு காணிக்கையாகவே அமரர் சுஜாதா என்கிற சிறுகதை அமைந்துள்ளது. சோறியம், மகா பெரியவர், அமில தேவதைகள், கிளாமிடான் உள்ளிட்ட கதைகள் தமிழ்ச் சூழலில் புதிய அறிவியல் புனைவுகளுக்கு வழிவகுத்தவை. துணிச்சல் மிகுந்த கதைகள் எனவும் குறிப்பிடலாம். ரூ.120/-  

வனசாட்சி

இலங்கையின் மலைகளில் தேயிலைத் தோட்டத்தை உருவாக்கி அதற்கு எருவாகிப்போன தமிழ் மக்களின் கதை. ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்துக்குப் பிறகு அவர்களில் பாதி பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ரத்தம் கொதிக்கவைக்கும் அந்த தியாகச் சரித்திரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட நாவல். மலையிலும் கடலிலும் மறைந்துபோன அந்த தமிழர் உழைப்பை புனைவின் ஊடே பதிவு செய்திருக்கிறது இந்த நாவல். ரூ.260/-

தாரகை

தமிழ் அரசியலில் சூழலில் சினிமா ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. நடிகர்கள் இல்லாமல் கடந்த அரை நூற்றாண்டாக தமிழக அரசியல் இல்லை. ஓரிரு படங்கள் ஓடிவிட்டாலே நடிகர்கள் தங்களை தமிழகத்தை ஆளும் தகுதி வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். தாரகை நாவலில் நாயகி தீபிகாவும் தமிழக அரசியல் கட்சி ஒன்றின் தலைவி ஆகிறாள். யாருமற்ற அனாதையாக தமிழ் சினிமா உலகில் அடி எடுத்துவைத்து, பாதையில் பயணத்து, அவள் அடையும் இடம்… வெற்றிடமா? வெற்றி மகுடமா? ரூ. 165/-

மீன்மலர்

கடவுள், இசை, காமம் என எல்லாவற்றையுமே விவாதத்துக்குள்ளாக்கும் வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு. மீனையும் மலரையும் ஒப்புமைப்படுத்தும் சிறுகதை ஒரு தத்துவவாதத்தை சிறுகதையினூடே சிறப்பாகச் செய்திருக்கிறது. மனக்குகை ஓவியம் சிறுகதை, மனித வாழ்வின் உளவியல் சிக்கலை முன்வைக்கிறது. மனம் என அமையப் பெற்ற உயிரினமான மனிதனுக்கான சிக்கலை விவரிக்கும் கதை அது. ஆர்ப்பாட்டங்கள் இல்லாத நீரோடை போன்ற நடையில் இவற்றை வாசிப்பது பேரனுபவம். ரூ. 85/-

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

சிறுகதை உலகில் தடம் பதித்த நூல். ஆனந்த விகடன், கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு. வித விதமான மனிதர்களை அடையாளம் காட்டும் அற்புதமான சிறுகதைகள். இறந்து போனதாக டாக்டர்களே கைவிட்டுவிட்ட ஒருவனின் மரணப் போராட்டத்தைச் சொல்லும் நினைவின் நிழல், பாம்புகளை நேசிக்கும் ஒரு வினோத மனிதனின் செயல்களுக்கு ஒளிந்திருக்கும் உண்மைக் காரணத்தைச் சொல்லும் இது பாம்புக் கதை அல்ல… என வாசிப்புச் சுவையுடன் வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.   ரூ. 185/-

ஆபரேஷன் நோவா

தமிழில் அறிவியல் புனைகதைகள் அருகி வருகின்றன. எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிறகு ஏறத்தாழ அறிவியல் புனைகதையில் தேக்கநிலை. ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த ஆபரேஷன் நோவா தொடர் பெரும் வாசக வரவேற்பைப் பெற்றது. டோபா எரிமலை வெடித்து பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து நேரப் போவதை விஞ்ஞானிகள் அறிகிறார்கள். மக்களைக் காப்பாற்றும் பணியில் பல சிக்கல்கள். உயிரினம் வாழ உகந்த கோள் ஒன்றில் மனிதர்கள் வாழ வழிசெய்யப்படுகிறது. இந்த நேரத்தில் பூமிக்கு ஆபத்து இல்லை எனத் தெரியவர, சயின்டிஸ்ட் ஒருவர் சாத்தான் உருவம் எடுக்கிறார். விறுவிறுப்பான் கதை. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் அணிந்துரை, நாவலுக்கு மகுடம் சூட்டியிருக்கிறது. ரூ.160/-