Description
பிரபஞ்சன்
‘எழுத்துக்கு ஒரு கொள்கை இருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. ஏதேனும் ஒன்றை முன் நிறுத்தவோ, அல்லது ஏதேனும் ஒரு கருத்தை பிரச்சாரம் செய்யவோதான் இந்த கவிதையோ அல்லது கதைகளோ பிறக்கின்றன. ஆக கொள்கை இல்லாமல் எழுத்து இருப்பதற்கு சாத்தியம் இல்லை. கொள்கை இல்லாதது என்பது கூட ஒரு கொள்கைதானே. எனது எழுத்துக்கள் கொள்கையோடுதான் இருக்கின்றன. அந்தக் கொள்கை பொதுவாக மனிதம் சார்ந்தவை. பெண்ணியம் சார்ந்தவை. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்தவையாகத்தான் இருக்கின்றன. அவர்கள் சார்ந்த விடயமாக எனது எழுத்துக்கள் இருக்கின்றன’ என தன் எழுத்தின் தன்மையைப் பற்றிக் கூறுகிறார் சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன். புதுச்சேரிக்காரரான இவரது கதைகள் பெரும்பாலும் சமூக நீதி, பெண்ணியம், வரலாறு ஆகிய வகைகளில் அடங்கும். எழுத்துக்கும், வாழ்வுக்கும் இடைவெளி இல்லாத போக்கை கடைபிடிக்கும் பிரபஞ்சன், தமிழ்தான் படிக்க வேண்டும் என்று அடம்பிடித்து தமிழ்க் கல்லூரியில் சேர்ந்தவர். பிரெஞ்சு ஆட்சியர் காலத்து புதுச்சேரியை மானுடம் வெல்லும், வானம் வசப்படும், கண்ணீரால் காப்போம் என்ற நாவல்கள் மூலம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்தவர். இவரது ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘ஆண்களும் பெண்களும்’ என்ற குறுநாவலும் தமிழக அரசின் பரிசைப் பெற்றுள்ளன. இலக்கிய சிந்தனை விருது, கஸ்தூரி ரங்கன் விருது, பாஷா பரிஷீத் விருது போன்றவற்றைப் பெற்றவர். பிரபஞ்சனின் கதைகள் பெரும்பாலும் நெடுங்கதைகளே. அவற்றுள் இப்படியாக ஒரு சினேகிதி, குமாரசாமியின் பகல்பொழுது, இருட்டில் இருந்தவன், நாணல் மரங்கள் போன்றவற்றை விகடன் பிரசுரம் தேர்வு செய்து இலக்கிய சிகரங்கள் வரிசையில் வெளியிடுகிறது. சமூகத்தின் பலதரப்பட்ட மக்களை அக்கறையோடு அணுகும் பிரபஞ்சன், அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களின் நிலையை குமாரசாமியின் பகல் பொழுது என்னும் கதையில் விவரிக்கிறார். இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதைகளும் மனித வாழ்வியலின் தன்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுபவை. படித்துப்பாருங்கள். பிரபஞ்ச கானம் மனதில் லயிக்கும்!
ரூ.115/-
Reviews
There are no reviews yet.