Description
லா.ச.ராமாமிர்தம்
‘‘உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்.’’ – லா.ச.ரா. லா.ச.ரா. என்று அழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் 1916-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியில் பிறந்தார். மணிக்கொடி இதழில் எழுத ஆரம்பித்த லா.ச.ரா-வின் பிரசுரமான முதல் கதை ஆங்கிலக் கதை. தலைப்பு: ‘தி எலிபென்ட்’. இவர் 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இதுவரை லா.ச.ரா-வின் 6 நாவல்களும், 6 கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற லா.ச.ரா 2007-ம் ஆண்டு தனது 92-வது பிறந்தநாளில் காலமானார். ‘சிந்தா நதி’ என்ற அவரின் நூலுக்கு 1989-ம் வருடம் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. வாழ்வின் தேடல்களில் அவர் கண்டுணர்ந்தவற்றை எழுதினார். மனித உணர்வுகளின் வாயிலாக உண்மையின் தரிசனத்தைக் கண்டவர். அவருடைய படைப்புகளில் இடம்பெறும் கதாபாத்திரங்களில் மட்டுமல்ல, நிறைந்திருக்கும் பொருட்களில் எல்லாம் உண்மையின் தரிசனத்தைக் காணலாம். எழுத்து என்பது லா.ச.ரா-வைப் பொறுத்தவரை வியாபித்திருக்கும் ஊற்று. அவரது எழுத்துலகில் ஒரு போதும் வறட்சி ஏற்பட்டதில்லை. “எழுதுவதற்கு விஷயத்துக்கு என்றுமே நான் பஞ்சப்பட்டதில்லை. எழுத்தடைப்பு- என்று சொல்வார்கள். இதுவரை எனக்கு நேர்ந்ததில்லை. காரணம், ஒருவேளை, நான் மெதுவாய் எழுதுபவன்தான். ஆனால் ஓயாமல் எழுதிக் கொண்டிருப்பவன். தினம், சங்கல்பமாக வெள்ளைக் காயிதத்தைக் கறுப்பாக்குகிறேனோ இல்லையோ, நெஞ்சில் எழுத்து கிளைத்துக் கொண்டேயிருக்கும். இது என்னால் தவிர்க்க முடியாத நிலை… தேக ரீதியில் சிரமமான நிலை… ஆனால், அதில்தான் உற்சாகம் இருக்கிறது. என் கற்பனை திடீர் திடீர் என வெள்ளம் புரள்வதில்லை. ஆனால் ஊற்று வற்றியதில்லை” – இப்படி லா.ச.ரா சொல்வது கூட உண்மையின் தரிசனம்தான். வாருங்கள். உண்மையை தரிசிப்போம்.
ரூ.95/-
Reviews
There are no reviews yet.