Description
பாரதியார்
‘‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’’ – முண்டாசுக் கவிஞன் பாரதி அன்றே வைத்த கோரிக்கை இது. இறவாத புகழுடைய பாரதி கவிதைகளின் முழுத் தொகுப்பே இந்த நூல். தமிழ் மொழியின் தனிநிகர் அடையாளமான பாரதி பக்தி, காதல், கம்பீரம், சுதந்திரம் எனப் பன்முகத் தளங்களிலும் கவி பாடிய சிந்தனைக்காரன். அவன் ஊட்டிய உணர்வுக்கு ஈடாக & உண்மைக்கு நிகராக பெருங்கவிகள் இன்னும் பிறக்காத நிலையில், அவனுடைய பாடல்களின் தொகுப்பு அவசியமாகிறது இந்தத் தமிழ் மண்ணுக்கு. முடமையில் இருந்துப் பிடுங்கியும், முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைத்தும் பாரதி இந்த தேசத்துக்குப் பாடல்களின் வழியே ஆற்றிய பங்களிப்பு சாதாரணமானது அல்ல. கால ஆற்றில் அடித்துச் செல்லப்பட முடியாத அளவுக்கு மனசாட்சி வழிநின்று பாரதி படைத்த கவிதைகளை இன்றைய இளைய தலைமுறையின் கைகளில் சேர்க்கும் காரியமே இந்தப் புத்தக உருவாக்கம். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகாகவியாக விளங்கிய பாரதி, சமுதாய மேன்மைக்காக சமரசமற்றுப் போராடிய வல்லமைக்காரன். பன்மொழிப் புலமையும் எதற்கும் தலைவணங்காப் பெருங்குணமும் கொண்ட பாரதி, தமிழ்கூறும் நல்லுலகின் வீரிய வெளிச்சம். காலத்தை வென்று நிற்கும் அவருடைய கவிதைகளை அனைவருடைய பார்வைக்கும் எடுத்துச் செல்லும் விதமாக அழகிய வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது இந்தப் பொக்கிஷப் புத்தகம். பாரதியின் கவிதைகளோடு மட்டும் அல்லாமல், அவருடைய அரிய புகைப்படங்கள், கையெழுத்து, கடிதம் எனப் போற்றிப் பாதுகாக்கத்தக்க ஆவணங்கள், அவருடைய வாழ்க்கைக் குறிப்புகள் என இந்தப் புத்தகத்தில் பதியமிடப்பட்டிருக்கும் அம்சங்கள் அதியற்புதமானவை. காலப்பெருவெளியின் கம்பீர அடையாளமான பாரதியின் கவிதைகளைப் படியுங்கள்; பலருக்கும் பரிசாக அளியுங்கள்; கடைக்கோடி மக்களின் மனங்களிலும் கரங்களிலும் பாரதியைப் பதியுங்கள்!
ரூ.240/-
Reviews
There are no reviews yet.