Description
தமிழச்சி தங்கபாண்டியன்
விகடன் குழுமத்தில் இருந்து ‘டாக்டர் விகடன்’ ஆரம்பிக்க முடிவான நேரம். மருத்துவ விஷயங்களில் வாசகர்களை மிரட்சிப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக டாக்டர் விகடனில் சுவாரஸ்ய எழுத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என ஆலோசித்தோம். அந்தக் கணத்தில் முதல் ஆளாக மனக் கண்ணில் வந்தவர் தமிழச்சி தங்கபாண்டியன். ‘‘கிராமிய மருத்துவங்களைப் பற்றி எழுத முடியுமா?’’ எனக் கேட்டபோது, தமிழச்சியிடத்தில் அப்படியொரு பூரிப்பு. சொலவடையாக, மருத்துவமாக, பேச்சுவழக்காக, உயிரார்ந்த நேசமாக கிராமத்தின் அத்தனைவிதமான ஆசாபாசங்களையும் தமிழச்சி விவரித்தபோது, கண்முன் விரிந்த கிராமங்கள் நிறைய! படிப்பாளி, படைப்பாளி என உயரிய அடையாளங்களைச் சுமக்கும் தமிழச்சி, தான் வாழ்ந்த கிராமத்தின் இண்டு இடுக்குகளை இன்னமும் மறக்காமல், தனக்கான நிழலாக, தான் தலை சாய்க்கும் மடியாக மல்லாங்கிணறை நினைத்திருப்பது இன்றைய பரபர உலகில் பார்க்க முடியாத அபூர்வம். அக்கம்பக்கத்தினரை அளவிட முடியாத பாசத்தோடு அவர் அணுகும் விதமும், அவர்கள் இவரிடம் பகிரும் வாஞ்சையும் உடல் சுளித்து ஓடும் அணிலாக மனதுக்குள் விரிகிற காட்சிகள். மஞ்சணத்தி, குப்பைமேனி, வெந்தயக் கீரை என இயற்கையின் வரங்களை வைத்து வைத்தியம் பார்க்கும் கிராமத்து மக்களின் வாழ்வியலை அவர்களின் வார்த்தைச் சாயல் மாறாமல் தமிழச்சி எழுதியிருக்கும் விதம், வேறு எவருக்குமே கைவராதது. கிராமப் பத்தாயங்களில் இருந்து சொலவடைகளைச் சேகரித்து வெகுஜனப் பார்வைக்கு வைத்து, அதன் வழியே கிராமிய மனசை அடையாளப்படுத்தி இருக்கிறார் தமிழச்சி. மண், மருத்துவம், மனசு என தனக்கு மிகப் பிடித்த விஷயங்களை வாசகப் பார்வைக்கு வைக்கும் தமிழச்சி, உலகின் பேரற்புதங்களின் திசையாக கிராமங்களையே காட்டுகிறார். மகத்துவத் தமிழில் மருத்துவத்தையும் மனத்துவத்தையும் ஒருசேரச் சொல்கிற நுணுக்க நடையைப் படித்துச் சிலிர்க்கிறபோது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது, பார்க்கும்போதெல்லாம் அழகிய தமிழச்சி… படைக்கும்போதெல்லாம் அசத்திய தமிழச்சி!
ரூ.85/-
Reviews
There are no reviews yet.