Description
செ.திவான்
வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும் இறுதியில் மிகவும் கடுமையாக ஆங்கிலேயரை எதிர்த்து சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மருதநாயகம் என்னும் கான்சாகிப். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாகத் தெரியாவிடினும், வரலாற்றுச் சான்றுகளையும், கட்டுரையாளர்களின் பதிவுகளையும் ஆதாரங்களாகக் காட்டி பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர் மருதநாயகம் என்பதைத் தெளிவாக விளங்கச் செய்துள்ளார் இந்த நூலின் ஆசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான செ.திவான். மேலும், மருதநாயகம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும், அவர் ஒரு முஸ்லிம்தான் என்பதையும் பல சான்றுகளுடன் ஆணித்தரமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வரலாற்றுப் பதிவுகள் என்றாலே அதில் ஒரு தேடலும், ஆய்வும், ஆராய்ச்சியும் கட்டாயம் இருக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் கொடுத்திருக்கும் தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன.மருதநாயகம் என்ற மாமனிதரின் வீர சாகசங்களையும், அதிரடியான போர்த்திறன்களையும் எளிய நடையில், உணர்ச்சி மிக்க எழுத்துகளால் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர். நம்மில் பலருக்கும் தெரியாத பல அரிய தகவல்களை மேல்நாட்டு எழுத்தாளர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய பதிவுகள் போன்றவற்றை ஆதாரங்களாகக் கொடுத்திருப்பது மிகுந்த வலு சேர்க்கக்கூடியது. வரவேற்கத்தக்கது. சரித்திரத்தின் உண்மைகளைத் தெரிந்துகொள்ள நினைக்கும் அத்தனைபேருக்கும் இந்த நூல் அற்புதமான ஆவணம்.
ரூ.110/-
Reviews
There are no reviews yet.