காற்றில் யாரோ நடக்கிறார்கள்

எஸ். ராமகிருஷ்ணன் என் கட்டுரைகள் எளிமையானவை. அவை ஒரு வாசகன் அல்லது பார்வையாளன் என்ற முறையில் என் மனதின் பிரதிபலிப்புகளை, நான் உள்வாங்கிக் கொண்ட விஷயங்களை முன்வைக்கின்றன. ஆனால் இவை வெறும் ரசனையின் பிரதிபலிப்புகள் மட்டுமில்லை. அதைத் தாண்டிய தளங்களை கவனத்திற்கு உட்படுத்துகின்றன. என் தனிமையைப் பகிர்ந்து கொண்ட இந்தப் புத்தகங்கள், சினிமா, இசை போன்றவை உங்களுக்குள் நிரம்பியுள்ள தனிமையையும் போக்கக்கூடும் என்ற பகிர்தலே இந்தக் கட்டுரைகளின் அடிப்படை. இதில் பெரும்பான்மை என் இணையத் தளத்தில் வெளியானவை. அத்தோடு கல்குதிரை, கணையாழி, அட்சரம் போன்ற இலக்கிய இதழ்களிலும், விகடன், குமுதம், தினமணி, சண்டே இந்தியன் போன்ற வார இதழ்களிலும் வெளியானவை. ரூ.200/-

அதே இரவு அதே வரிகள்

எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய அட்சரம் இலக்கிய இதழில் வெளியான மொழிபெயர்ப்புகளின் தேர்தெடுத்த தொகை நூல் இது. நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் நேர்காணல்கள், நோபல் பரிசு ஏற்புரைகள், உலக இலக்கிய கட்டுரைகள், மொழிபெயர்ப்பு கதைகள் ஆகியவை இதில் இடம் பெறுகின்றன. இதில் மார்க்வெஸ், இசபெல் ஆலண்டே, போர்ஹே, குந்தர் கிராஸ், மிலாராட் பாவிக், மிலன் குந்தேரா, காப்கா, தஸ்தாயெவ்ஸ்கி, மாபௌஸ், ஜோசே சரமாகோ, கென்சுபரோ ஒயி, ஏ.கே.ராமானுஜம் உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தத் தொகுப்பின் வழியே உருவாகும் படைப்பனுபவமும் கருத்தாக்கங்களும் மிகுந்த மன எழுச்சியை உருவாக்குகிறது. உலக இலக்கியத்தின் ஆதாரமான சுருதியை கோடிட்டுக் காட்டுகிறது. ரூ.150/-

இலைகளை வியக்கும் மரம்

எஸ். ராமகிருஷ்ணன் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள், அவரது கதைகளைப் போலவே மிக நுட்பமானவை. ஊர்சுற்றுதல், கவிதைகள், நாட்டார் இலக்கியம், இலக்கிய ஆளுமைகள், தினசரி வாழ்வின் குறிப்புகள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் இந்தப் பதிவுகளின் அடித்தளமாக இருப்பது எதிலும் தேங்கிவிடாத படைப்பாளியின் முடிவற்ற தேடல். தினசரி வாழ்வின் ஊடாக வெளிப்படும் அற்புதக் கணங்களை அடையாளம் காண்பதிலும், இயற்கையின் தீண்ட முடியாத தனிமையை எதிர்கொள்வதிலும், கவிதையின் ரகசியச் செயல்பாட்டிலும் அலைவு கொள்ளும் இந்தக் கட்டுரைகள் புதிய வாசிப்பு அனுபவத்தை உருவாக்கக்கூடியவை. இணையத்திலும் சிற்றிதழ்களிலும் வெளியான இருபது முக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு. ரூ.90/-

பேசத்தெரிந்த நிழல்கள்

எஸ். ராமகிருஷ்ணன் இவை சினிமா குறித்த விமர்சனக் கட்டுரைகள் அல்ல. உலக சினிமாவையும், தமிழ் சினிமாவையும் தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளனின் குறிப்புகள் அல்லது அவதானிப்புகள் என்று சொல்லலாம். கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் ஆழ்ந்த விமர்சனக் கூறுகளை முன்வைத்து இவை எழுதப்படவில்லை. என்னை பாதித்த சில படங்கள், அதற்கான காரணங்கள், அதிலிருந்து மீளும் நினைவுகள், நான் சந்தித்த சில திரை நட்சத்திரங்கள், அவர்கள் குறித்த ஞாபகங்கள், இவையே இந்தக் கட்டுரைகளின் அடிநாதம் ரூ.95/-

கோடுகள் இல்லாத வரைபடம்

எஸ். ராமகிருஷ்ணன் திசைதெரியாத கடலில் சூரியனையும் நட்சத்திரங்களையும் துணையாகக் கொண்டு பயணம் செய்த கடலோடிகள் எண்ணிக்கையற்ற விசித்திரங்களைக் கண்டிருக்கிறார்கள். வாசனை திரவியங்கள் வாங்கவும், வணிக வழிகளை உண்டாக்கவும் பௌத்தம் கற்றுக் கொள்ளவும், வானவியலின் உச்சங்களை அறிந்து கொள்ளவும் என வேறு வேறு நோக்கம் கொண்ட பலர் நாடோடி, பயணிகளாக கடல்,மலையறியாமல் சுற்றியலைந்திருக்கிறார்கள். வதைபட்டிருக்கிறார்கள். நிலக்காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி உலகைச் சுற்றிவந்த பிரசித்தி பெற்ற யாத்ரீகர்களான யுவான்சுவாங், பாஹியான், வாஸ்கோட காமா, அல்பெருனி, மார்கோ போலோ உள்ளிட்ட பதிமூன்று பயணிகளைப் பற்றியது கோடுகள் இல்லாத வரைபடம். இலக்கற்று ஊர்சுற்றித் திரியும் என் பயணங்களுக்கு இவர்களையே முன்னோடிகளாகக் கொள்கிறேன். அந்த வகையில் என் முன்னோடிகளைப் பற்றிய அறிமுகமும் நினைவுபகிர்தலுமே இந்தக் கட்டுரைகள். ரூ.60/-

மலைகள் சப்தமிடுவதில்லை

எஸ். ராமகிருஷ்ணன் எழுத்து-வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள். ஆச்சரியங்கள், அழிக்கமுடியாத புதிர்கள் என எண்ணற்ற வண்ணங்கள் நிரம்பி இருக்கின்றன. புனைவுகள் உருவாக்கும் ரகசியத் தடங்களும் அன்றாட உலகின் சிடுக்குகளும் இந்தக் கட்டுரைகள் எங்கும் பதிவாகின்றன. எழுத்து தரும் அமைதியின்மைகள், மனிதர்களின் வினோதங்கள், நவீன வாழ்க்கை முறையின் கோளாறுகள் என வெவ்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இக்கட்டுரைகள் ஆழமான கேள்விகளையும் உரையாடல்களையும் வாசகனின் மனதில் உருவாக்குகின்றன. ரூ.160/-

வாசக பர்வம்

எஸ். ராமகிருஷ்ணன் ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மௌனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. அந்த வாசகனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்போது அந்த உறவு மனோரீதியாகவும் மொழிரீதியாகவும் எண்ணற்ற அலைகளை உருவாக்குகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். அவை தகவல்களாலோ வாழ்க்கை விபரக்குறிப்புகளாலோ ஆனவையல்ல. மாறாக அந்த எழுத்தாளர்கள் தனது ஆளுமையைக் கடந்து சென்றவிதம் குறித்த கவித்துவம் மிகுந்த பதிவுகள் இவை. அந்தப் பதிவுகளினூடே அவர் அந்தப் படைப்பாளிகளின் முதன்மையான, சாராம்சமான படைப்புகள் குறித்த மிக நுண்மையான அவதானங்களையும் வெளிப்படுத்துகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய மனம் ததும்பச் செய்யும் வரிகள் இவை. ரூ.165/-

உலக சினிமா

எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் உலக சினிமா குறித்து தொகுத்த இந்த நூலில் சினிமா வரலாறு, உலகின் சிறந்த நூறு படங்கள் பற்றிய அறிமுகம், புகழ் பெற்ற இயக்குனர்களின் நேர்காணல்கள், உலகின் சிறந்த இயக்குனர்களைப் பற்றிய கட்டுரைகள், சினிமா குறித்த ஆழமான பார்வைகள், இந்திய சினிமா, சிறந்த இந்திய இயக்குனர்கள் பற்றிய கட்டுரைகள், குழந்தைகள் திரைப்படங்கள், டாகுமெண்ட்ரி, திரைப்பட விழா, விருதுகள், பற்றிய பதிவுகள் என மிக விரிந்த தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலின் புதிய பதிப்பு புதிய கட்டுரைகளும், புகைப்படங்களும் சேர்க்கப்பட்டி ருக்கிறது. உலக சினிமா பற்றிய ஒரு தலைசிறந்த கையேடு. ரூ.900/-

நம் காலத்து நாவல்கள்

எஸ். ராமகிருஷ்ணன் நாவல்களின் விதி உண்மையில் புதிரானது. அது எந்த மனிதனால் எப்போது வாங்கப் படுகிறது. எப்போது வாசிக்கப் படுகிறது. அவன் அந்த நாவலை என்ன செய்யப் போகிறான் என்பது எவரும் முன் அறிய முடியாதது. அந்த வகையில் ஒரு புதிரை சுமந்து கொண்டு தான் எல்லா நாவல்களும் உலகில் பிரவேசிக்கின்றன. நாவல் நம்காலத்தின் பிரதான இலக்கியவடிவம். உலகெங்கும் நாவலாசிரியர்கள் கொண்டாடப்படுகிறார்கள். நாவல்கள் உலகின் கவனத்தைத் தன் பக்கம் எளிதாகத் திருப்புகின்றன. செவ்வியல் நாவல்களை மறுவாசிப்பு செய்தும் அறியப்படாத நாவல்களை அறிமுகப்படுத்தியும், எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மையில் எழுதிச் செல்லும் காலம் என்ற தொடரை எழுதி அது பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பாக வாக்கியங்களின் சாலை என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்த அவரது தனி நூல் ஒன்று வெளிவந்தது. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து அத்தோடு பிரதான இலக்கிய இதழ்களில் உலக இலக்கியம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் யாவும் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே நூலாக வெளியாகின்றது. ரூ.250/-

சித்திரங்களின் விசித்திரங்கள்

எஸ். ராமகிருஷ்ணன் நவீன ஓவியம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், சினிமாவிற்கும் ஓவியத்திற்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகின்றவர்களுக்கும், ஓவியத்தின் பின்உள்ள கதைகளை, ஓவியனின் வாழ்வை உணர்ந்து கொள்ள முற்படுகின்றவர்களுக்குமான எளிய அறிமுகமே சித்திரங்களின் விசித்திரங்கள். இன்றைய சினிமா அதன் ஒளிப்பதிவு முறையில் அதிகம் ஓவியங்களின் பாதிப்பு கொண்டதாக இருக்கிறது. புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களான ஸ்டேரெரோ, வில்மாஸ் சிக்மண்ட், நிக்விஸ்ட், கார்டன் வில்லிஸ் போன்றவர்கள் தங்களது உந்து சக்தியாக ஓவியர்களையே குறிப்பிடுகிறார்கள். சித்திரங்களின் விசித்திரங்கள் தீராநதியில் தொடராக வெளிவந்து பரந்த வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. ரூ.75/-