இந்திய பிரிவினை சினிமா

யமுனா ராஜேந்திரன் இந்திய வரலாற்றில் வன்முறையின் கொடுங்கனவுகளால் ஆனது இந்தியப் பிரிவினையின் வரலாறு. அவமானகரமான துயரங்களும் கழுவ முடியாத குற்றத்தின் கறைகளும் கொண்ட இந்த வரலாறு இன்று மீண்டும் மீண்டும் வெவ்வேறு ரூபங்களில் புதிப்பிக்கப்படுகிறது. இந்தப் புதுப்பிக்கப்படும் ரத்த வேட்கை சொந்தச் சகோதர சகோதரிகளை வேட்டைப் பொருளாக்கிக் கொள்கிறது. இந்து முஸ்லீம் பிரச்சினையை இந்தியப் பிரிவினையின் தடத்தில் தேடிச் செல்லும் படங்கள் குறித்த விரிவான பார்வைகளை முன்வைக்கிறது இந்த நூல். கரம் ஹவா, எர்த் மம்மோ, தமஸ், டிரெயின் டு பாகிஸ்தான், காமோஸி பாணி, ஹேராம் எனப் பல்வேறு படங்களில் வெளிப்படும் பிரிவினையின் ஆதாரமான துயரங்களையும் அழிவையும் பரிசீலிக்கும் யமுனா ராஜேந்திரன் சினிமாவில் அடிப்படைவாத அரசியல் செயல்படும் விதத்தையும் விவாதிக்கிறார். ரூ.50/-

பெர்லின் இரவுகள்

பொ. கருணாகரமூர்த்தி பெர்லின் நகரின் இரவு வாழ்க்கையை ஒரு காரோட்டியின் கண்கள் வழியே சித்தரிக்கிறது பொ.கருணாகரமூர்த்தியின் பெர்லின் இரவுகள். இந்த இரவுகளைக் கடந்து செல்லும் மனிதர்களும் நிகழ்வுகளும் உருவாக்கும் மனச்சித்திரங்கள் வேடிக்கையும், வினோதமும் மன நெகிழ்ச்சியும் கொண்டவை. விலகி நிற்கும் ஒரு பார்வையாளனின் மொழியில் சொல்லப்படும் கருணாகரமூர்த்தியின் பெர்லின் இரவுகள் அதன் துல்லியமான புனைகதை மொழியால் பெரும் பரவசத்தை ஏற்படுத்துகின்றன. ரூ.75/-

ஆழ்நதியைத் தேடி

ஜெயமோகன் தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? என்னுடைய இளம் வாசக நண்பர் ஒருவரிடமிருந்து வந்த வினா இது. தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? அவருக்கு விளக்கும் முகமாக எனக்கு நானே அதை வரையறை செய்யவும் இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் அது எவ்வண்ணம் செயல்படுகிறதென நோக்கவும் முயன்றேன். அவருக்கு எழுதிய கடிதங்களை மீண்டும் கட்டுரையாக எழுதினேன். இது அது. ஆன்மீகம் குறித்த எந்த ஒரு விவாதத்தைப் போலவே இதுவும் வாசகன் தன் பதில்களைத் தானே தேடிச் செல்லும் பயணத்துக்கு உதவக்கூடிய கூடுதல் வினாக்களை எழுப்பவும், எழுப்பப்பட்ட வினாக்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும் மட்டுமே உதவும் என்று எண்ணுகிறேன். பதில்களை முன்வைப்பது அல்ல இதன் நோக்கம்; சில திறப்புகளை உருவாக்க முயல்வதே. அது நிகழுமென எண்ணுகிறேன். ரூ.60/-

விழித்திருப்பவனின் இரவு

எஸ். ராமகிருஷ்ணன் நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு. இப்படைப்பாளிகள் குறித்த பொதுவான இலக்கிய பிம்பங்களைத் தாண்டி அவர்களது கனவும் பைத்திய நிலையும் கொண்ட வேட்கைகளை, தேடல்களை விரிவாகப் பதிவு செய்யும் இக்கட்டுரைகள் உயிர்மை இதழில் தொடராக வெளிவந்து பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன. வெறும் தகவல் குறிப்புகளாக அல்லாமல் தீவிர மன எழுச்சியையும் படைப்பாளியின் சவால்கள் குறித்த உக்கிரமான கேள்விகளையும் எழுப்பும் இந்நூல் ஒரு ஆய்வாளனின் கடும் உழைப்பும் ஒரு படைப்பாளியின் தீவிர அழகியலும் கொண்டதாகத் திகழ்கிறது. ரூ.150/-

ஏழாம் சுவை

ஜெயந்தி சங்கர் ஒவ்வொரு பண்பாடும் தனக்கெனச் சில அந்தரங்கமான வழிமுறைகளையும் ரகசிய சடங்குகளையும் தனித்துவமான கொண்டாட்டங்களையும் கொண்டதாகத் திகழ்கிறது. இந்தப் பண்பாட்டுத் தனித்துவங்களையும் அதே சமயம் அவற்றிகிடையிலான வியப்பூட்டும் ஒற்றுமைகளையும் பேசுகின்றன இக்கட்டுரைகள். ஆசியப் பண்பாட்டு உலகம் குறித்த பல்வேறு தகவல்களை எளிமையும் சுவாரசியமும் மிகுந்த நடையில் எழுதிச் செல்கிறார் ஜெயந்தி சங்கர். ரூ.65/-

சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்

ஜெயமோகன் இது சுந்தர ராமசாமி குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது என்றே எண்ணுகிறேன். இந்நினைவுகள் எனது ஒரு காலகட்டத்தின் சித்திரங்களாகவே என் பார்வைக்குப் படுகின்றன. இது சுந்தர ராமசாமி அல்ல, என்னுடைய சுந்தர ராமசாமி என்று படுகிறது. இதேபோலப் பல சுந்தர ராமசாமிகள் இருக்கலாம். அவர்களும் எழுத்தில் வரக்கூடும். அது வரவேற்கத்தக்கதே. நம் காலகட்டத்து மாபெரும் ஆளுமைகளில் ஒன்று அவர். சிலைகளை உருவாக்க வேண்டாம். அவை சரியும். ஆனால் மூதாதையரை உண்டு செரித்துக் கொள்வோம். அது நம் வேருக்கு நீர்.(ஜெயமோகன் ), சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில், ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ராவைப் பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும் உக்கிரமான உரையாடல்களும் மிகுந்த இந்நூலின் முதல் பகுதி உயிர்மை இதழில் வெளிவந்தபோது வாசகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சு.ராவின் நினைவுகளைப் பல்வேறு தளங்களில் விரித்து எழுதிய இந்நூல் அவரைப் பற்றிய படைப்பூக்கமுள்ள ஓர் ஆவணமாகத் திகழ்கிறது. ரூ.100/-

பிம்பங்கள் அடையாளங்கள்

அ. ராமசாமி வெகுசனப் பண்பாட்டிற்கும் வெகுசன ஊடகங்களுக்கும் இடையிலான உறவுகள் குறித்த பரிசீலனைகளைத் தீவிரமாக முன்வைக்கிறது அ.ராமசாமியின் இந்நூல். அன்றாட வாழ்வின் கேளிக்கைகளுக்குள் ஊடுருவி நிற்கும் நுண் அதிகாரத்தையும் அரசியலையும் கட்டுடைக்கும் அ.ராமசாமி கிரிக்கெட், பட்டிமன்றம், சினிமாக்கலாச்சாரம், கிராம-நகரப் பண்பாட்டுமுரண்கள், பாடத்திட்ட அரசியல் என நம் காலத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்த தனது பார்வைகளை முன்வைக்கிறார். ரூ.90/-

தமிழ் அன்றும் இன்றும்

சுஜாதா சுஜாதா 2003-2004 காலப்பகுதியில் அம்பலம் இணைய இதழில் ஓரிரு எண்ணங்கள் என்ற தலைப்பில் எழுதிய இக்கட்டுரைகள் முதன்முதலாக அச்சில் வெளிவருகின்றன. தமிழ்க் கணினி, புறநானூறு, பிரபந்தம், ஸ்ரீரங்கம், தமிழ் சினிமா முதலானவை குறித்த கட்டுரைகளும் சமீபத்தில் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சுஜாதா அளித்த பதில்களும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ரசிகமணி டி.கே.சி, சாவி, பி.வி.பார்த்தசாரதி, புத்தகப் பித்தன், மௌனி குறித்த நினைவுகள், பார்வைகள் இத்தொகுப்பிற்கு வளம் சேர்க்கின்றன. ரூ.145/-

கடவுள்களின் பள்ளத்தாக்கு

சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் சுஜாதா எழுதி, எத்தொகுப்பிலும் இதுவரை இடம்பெறாத கட்டுரைகள் இவை. பயணம், சினிமா, அரசியல், சமூகம், வாழ்க்கை, எனப் பல்வேறு தளங்களில் விரியும் இக்கட்டுரைகள் சுஜாதாவுக்கே உரித்தான கூர்மையான நோக்குடனும் அங்கதத்துடனும் எழுதப்பட்டுள்ளன. மனதில் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்களை வரையும் Ôபெண்களுக்கு நானும்Õ கட்டுரையிலிருந்து பரவலான விவாதங்களை எழுப்பிய ‘பில்கேட்ஸ் விரித்த டாலர் வலை’ வரை பல்வேறு தொனிகளைக் கொண்ட கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ரூ.165/-

நதிமூலம்

மணா கலை, இலக்கியம், அரசியல் துறைகளில் தனிப்பெரும் அடையாளங்களாகத் திகழும் பிரபல ஆளுமைகள் கடந்து வந்த பாதைகளைச் சித்தரிக்கும் இந்த நூல் குமுதத்தில் தொடராக வெளிவந்த காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றது. மணாவின் சுவாரசியமான நடையில் அரிய தகவல்களுடன் எழுதப்பட்ட கட்டுரைகள். ரூ.90/-