ஹேம்ஸ் என்னும் காற்று

தேவதச்சன் தேவதச்சனின் கவிதைகள் அன்றாட வாழ்க்கையின் எளிய தருணங்களை கவித்துவத்தின் மந்திர விரல்களால் தொட்டு திறப்பதன் மூலம் நமது இருப்பின் மகத்தான தரிசனங்களை கண்டடைகின்றன. அவரது மொழி கானகத்தில் எங்கோ தெரியும் சுடரைப்போல நம்மைத் தூண்டி அருகில் அழைக்கிறது. நெருங்கிச் செல்லச் செல்ல அது எங்கோ விலகிச் சென்றுவிடுகிறது. நவீன கவிதை மொழியைத் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் தேவதச்சனின் இடையறாத இயக்கத்திற்கு இத்தொகுப்பும் ஒரு சான்று. ரூ.35/-

வெயில் தின்ற மழை

நிலா ரசிகன் இரவின் நிசப்தமும் மழையின் ஈரமுமாய் விரியும் நிலாரசிகன் கவிதைகள் தனிமையின் விம்முதல்களைக் கொண்டு வருகின்றன. ஒரு பறவை உதிர்த்து விட்டுப்போன ஒரு எளிய இறகாகத் தனது இருப்பை உணரும் அந்தர நிலையை எய்தும் இக்கவிதைகள் ஒரு நம்பிக்கைக்குரிய இளம் கவிஞனின் தடயங்களைக் காட்டுகின்றன. ரூ.50/-

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை

பொன். வாசுதேவன் கண்ணாடியில் நகரும் பிம்பங்களைப் போல இருந்தும் இல்லாததுமாய் நகர்ந்துகொண்டிருக்கும் உறவுகளின் நிழல்களைத் தொடர்ந்து செல்கின்றன பொன் வாசுதேவனின் இக்கவிதைகள். இச்சைகளுக்கும் கனவுகளுக்கும் நிராசைகளுக்கும் இடையே எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபடியே தனக்கென ஒரு பிரத்யேக வெளியை அவை உருவாக்கிக் கொள்கின்றன. ரூ.70/-

தீக்கடல்

நர்சிம் அரூபமான உணர்வுகளைக் காட்சிபடுத்துவதிலும் புலப்படாத அனுபவங்களை சித்திரமாக்குவதிலும் இன்றைய இளம் கவிஞர்கள் அடையக்கூடிய வெற்றிகளுக்கு நர்சிம் எழுதும் இக்கவிதைகள் ஒரு உதாரணம். தனது ததும்புதல்களையும் தவிப்புகளையும் அவர் வெகு கச்சிதமான மொழியில் முன் வைக்கிறார். ரூ.40/-

K அலைவரிசை

முகுந்த் நாகராஜன் கவிதைக்காகவே உற்பத்தி செய்யப்படும் கவித்துவ தருணங்களைப் பிடிவாதமாக உதறி மேலெழுபவை முகுந்த் நாகராஜன் கவிதைகள். ஒரு கவிஞனின் தேர்வில் வராத வாழ்வின் எளிய தருணங்களைத் தேடித் தேடி கண்டடைந்து அவற்றைத் தன் சூட்சுமமான மனதின் ரசவாதத்தால் கவித்துவ தருணங்களாக மாற்றுகிறார். தனக்கென ஒரு புதிய மொழியைக் கண்டடைபவனே அசலான கவிஞன் எனில் கடந்த பத்தாண்டுகளில் சுயமான கவிஞனாக முகுந்த் நாகராஜன் அறியப்படுகிறார். ரூ.40/-

இசைக்குமிழி

ஹவி ஹவியின் கவிதைகள் உடைந்துபோன கண்ணாடிச் சித்திரங்கள் வழியே பிரதிபலிக்கும் வாழ்க்கையின் நிறங்களைப் படிமங்களாக்க முயற்சிக்கின்றன. நவீன மனிதன் அச்சத்துடன் விலக்கிப் பார்க்கும் ரகசியங்களின் திரைச் சீலைகளுக்குப் பின்னே அசையும் ரகசிய நிழல்களை இக்கவிதைகள் எதிர்கொள்கின்றன. அப்போது அவை அடையும் தடுமாற்றங்கள், பயங்கள், குழப்பங்கள் இந்தக் கவிதைகளை நமது சமகாலத்தின் உணர்வுகளாக மாற்றுகின்றன. ரூ.60/-

இவளுக்கு இவள் என்றும் பேர்

கார்த்திகா நவீன வாழ்க்கை முறையின் இரும்புப் பாதங்கள் நடந்து சென்ற வழியெங்கும் இயற்கையுடன் இயைந்த புராதன இதயத்தைக் கைவிட்டபடியேதான் நாம் பின்தொடர்ந்து சென்றோம். கார்த்திகாவின் கவிதைகள் நிலத்தோடும் பருவத்தோடும் பிணைந்த தமிழ்க் கவிதை மரபில் தன்னை இனம்கண்டு இயற்கையின் வினோதக் கொண்டாட்டத்தில் கரைகின்றன. புத்துணர்ச்சி மிக்க அவதானங்களால் கவனிப்பிற்குரிய கவிஞராகிறார். ரூ.50/-

அவிழும் சொற்கள்

ரவிக்குமார் ரவிக்குமார் அவர்களை அரசியல் பதிவாளராக, காலத்தின் பிரதிபலிப்பாளராக, கட்டுரையாளராக பலர் அறிந்திருப்பார்கள். சட்டமன்ற உறுப்பினராக அவரது செயல்பாடுகளில் இருக்கக்கூடிய அக்கறை, அதிக கவனம் செலுத்தப்படாத பிரச்சினைகளில் அவர் எடுத்துக் கொள்ளும் ஆர்வம், அவரது மென்மையான மனதின் வெளிப்பாடுகளாகவே இருந்திருக்கின்றன. அந்த வெளிப்பாட்டின் இன்னொரு பரிமாணமாக இந்தக் கவிதைகளைப் பார்க்க முடிகிறது. வழமையான ஆண் மொழியிலிருந்து, அழகியலில் இருந்து விடுபட்டு எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் இவை. பெண்ணை தோழியாய், சக பயணியாய் புரிந்து கொள்ள வேண்டும் கவிதைகள் இவை. இதன் வரிகளில் இழையோடும் மென்மை ஒரு பூ மலர்வதைப் போல் விரிந்து, அதன் ரகசிய அறைகளை, அடுத்த தலைமுறைக்கான விதைகளை, வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறது. கனிமொழி ரூ.50/-

நீராலானது

மனுஷ்ய புத்திரன் ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்டமாக அமைந்திருக்கிறது. அது ஏற்புக்கும் மறுப்புக்குமிடையே இடையறாது வளரும் நீர்த்திரையென அசைந்து கொண்டிருக்கிறது. ரூ.150/-

பயனற்ற கண்ணீர்

சிவகாமி இத்தொகுதியிலுள்ள 66 கவிதைகளுமே தனித்தனியே வளமான சிந்தனைச் சிதறல்கள். சிவகாமியின் பல்நோக்குப் பார்வை செயலூக்ம் கொடுக்கவல்லது. இது மொழி பெயர்க்கப்படுமானால் தமிழுக்கு அகில இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்கலாம். தனிப்பட்ட முறையில் பெண்கவிஞர்கள் என்றாலே பெருமூச்சும் உடலும்தான் முதன்மைப் பொருளாகும் (sighs and thighs) என்னும் அறிவற்ற குற்றச்சாட்டிலிருந்து பெண் எழுத்துக்களை மீட்டிருப்பது பெருமை அளிக்கிறது. இந்தக் கவிதைகளில் பெண்ணின் வேதனை மற்ற பல பொருள்களோடு இசைத்துத் தரப்பட்டிருக்கிறது…. காதம்பர் ரூ.60/-