ஒரு பனங்காட்டு கிராமம்

மு. சுயம்புலிங்கம் எண்பதுகளுக்குப் பிறகு பிரதேச அடையாளங்களையும் வட்டார மொழியினையும் நோக்கி நகர்ந்த தமிழ்க் கதை மொழியில் மண்ணின் ஈரத்தோடும் கவிச்சையோடும் எழுந்து வந்தவர் மு. சுயம்புலிங்கம். கரிசல் மண்ணின் வெக்கையும் பெருமூச்சும் மனிதர்களின் கசங்கிப்போன முகங்களும் இக்கதைகளெங்கும் கடந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நம்பிக்கைக்கும் போராட்டத்திற்கும் துயரத்திற்கும் இடையே மிகச் சுருக்கமான, கச்சிதமான மொழியில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. ரூ.90/-

புனைவின் நிழல்

மனோஜ் கனவின் மர்மவெளிகளாலும், பைத்திய நிலையின் புதிர்களாலும் கட்டப்பட்டவை மனோஜின் இக்கதைகள். கனவுக்கும் நனவுக்குமிடையே, யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் இடையே எப்போதும் பெருகிக்கொண்டிருக்கும் ரகசிய நதியை இக்கதைகள் தொடர்ந்து தேடிச் சென்றவண்ணமிருக்கின்றன. அனுபவத்தின் மிக சூட்சுமமான முடிச்சுகளை அவிழ்த்தபடி காலத்தின், சரித்திரத்தின் எல்லையற்ற விகாசத்தில் இக்கதைகள் சஞ்சரிக்க முயல்கின்றன. பாசாங்கற்ற, புத்தம் புதிய கதைமொழியொன்றை இக்கதைகள் உருவாக்க விழைகின்றன. ரூ.70/-

மண் பூதம்

வா.மு. கோமு வா.மு.கோமு தன்னுடைய வித்தியாசமான, துணிச்சலான சிறுகதை மற்றும் கவிதை முயற்சிகளுக்காகப் பெரிதும் கவனம் பெற்று வருபவர். கலாச்சாரரீதியான மனத் தடைகளை, மொழியின் குதூகலமும் அங்கதமும் கொண்ட இவரது மொழி வெகு இயல்பாகத் தாண்டிச் சென்றுவிடுகிறது. எதார்த்த உலகின் அழுத்தமான காட்சிப்படுத்தல்கள் சட்டென அதீதப் புனைவுகளுக்குள் கரைந்து ஒரு புதிய அனுபவத்தை இக்கதைகள் உருவாக்குகின்றன. ரூ.90/-

வெய்யில் உலர்த்திய வீடு

எஸ். செந்தில் குமார் தமிழ் வாழ்க்கையின் வினோதமான, உலர்ந்த பக்கங்களை எழுதிச் செல்லும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் எஸ்.செந்தில்குமார் தனித்த அடையாளம் கொண்டவர். கதையின் உள் மடிப்புகளைக் கலைத்து விரித்துக்கொண்டே செல்லும் இவரது மொழி இடையறாத வளையங்கள் உருவாகும் நீர்ப் பரப்பாக மாறிவிடுகிறது. அதனால் கதைகள் தாம் துவங்கிய திடப் புள்ளியிலிருந்து விலகி அனுபவங்களின் குழம்பிய வண்ணங்களைக் காட்சிப் படுத்துகின்றன. ரூ.75/-

நடந்து செல்லும் நீரூற்று

எஸ். ராமகிருஷ்ணன் அன்றாட வாழ்வின் சொல்லப்படாத துக்கங்களும் தொடப்படாத தனிமைகளும் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகளை ஆற்றுப் படுத்த முடியாத கேவல்களின் சித்திரங்களாக மாற்றுகின்றன. ஆழம் காண முடியாத இருளில். உடைந்த மனோரதங்களுடன் வாழ்வைக் கடந்து செல்லும் இக்கதைகளின் பாத்திரங்கள் யார்மீதும் எந்தப் புகார்களும் கொண்டவையல்ல. மாறாக அவை தம் மறைவிடங்களில் தீமைகளின் இடையறாத பேச்சினைக் கேட்டபடி இருக்கின்றன. ரூ.70/-

நிழல்வெளிக் கதைகள்

ஜெயமோகன் பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் எல்லா மொழிகளிலும் தொன்றுதொட்டே இருந்து வருகின்றன. மேலும் மேலும் உருவாகிவருகின்றன. அச்சம், வியப்பு, அருவருப்பு, எனும் உணர்வுகள் இக்கதைகளில் உச்சம் கொள்கின்றன. உண்மையில் இவை மானுட மனத்தின் ஆழங்களில் எழும் அலைகளின் மறுவடிவங்களே. ஆகவேதான் உலகமெங்கும் இலக்கியத்தில் பேய்க் கதைகள் முக்கியமான இடம் வகிக்கின்றன. இக்கதைகள் பீதியும், பரபரப்பும் உருவாகும்படி எழுதப்பட்டவை. ஆனால் தீவிர வாசிப்பில் மனிதமனதின் அறிய முடியாத ஆழங்களை நோக்கி இட்டுச் செல்பவை. ரூ.70/-

ஜெயமோகன் சிறுகதைகள்

ஜெயமோகன் மனித வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கிய அந்தரங்கமான உணர்ச்சிபூர்வமான தேடலை உள்ளடக்கிய கதைகள் இவை. அத்தேடலை அன்றாட வாழ்க்கையிலிருந்து தத்துவத்திலும், வரலற்றிலும், அறிவியலிலும் விரித்துக் கொள்பவை. ஆகவே பலவகையான கதைக்கருக்களும் கதைக்களங்களும் கூறுமுறைகளும் கொண்ட வண்ணமயமான கதையுலகமாக உள்ள தொகுப்பு இது. எல்லாக் கதைகளும் அடிப்படையில் கதை என்ற வடிவைத் தக்கவைத்தபடி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்ட நவீன ஆக்கங்கள். இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத பல கதைகளை உள்ளடக்கிய முழுமையான தொகுப்பு இது. ரூ.300/-

சாம்பல் நிற தேவதை

ஜீ. முருகன் ஜீ.முருகனின் இத்தொகுப்பில் உள்ள கதைகள் மனித மனங்களின் இருள்வெளிகளை ஆழமாக ஊடுருவிச் செல்பவை. ரகசிய வேட்கைகளின் சூது மிகுந்த பாவனைகளை இக்கதைகள் தீவிரமான எள்ளலுடன் கலைக்கின்றன. ஜீ.முருகன் (1967) திருவண்ணாமலை மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இவருடைய மற்றச் சிறுகதைத் தொகுப்புகள்: சாயும் காலம், கறுப்பு நாய்க்குட்டி. கவிதைத் தொகுப்பு:காட்டோவியம். நாவல்: மின்மினிகளின் கனவுக் காலம். ரூ.70/-

ஊமைச்செந்நாய்

ஜெயமோகன் சென்ற நான்கு வருடங்களில் நான் எழுதிய கதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன.இத்தொகுதியில் உள்ள கதைகளில் இப்போது நான் காணும் பொது அம்சம் ‘கதை’தான்.இவற்றில் நுட்பமான யதார்த்தத்தளம் சார்ந்த ஆக்கங்கள் உண்டு. மிகைபுனைவுகளும் உண்டு. ஆனால் முழுக்க முழுக்க படைப்பூக்கத்தின் தற்செயலை நம்பி எழுதப்பட்டவை. அதனாலேயே ஆசிரியனும் விளக்கிவிட முடியாத பல தருணங்கள் கொண்டவை. செவ்வியலின் அடிப்படையான ஓர் இயல்பை இவற்றில் வாசகர் காணமுடியும். வரிகள்தோறும் செறிந்திருக்கும் கவித்துவ உட்குறிப்புகள்.தமிழ் நவீனகவிதைகள் அடைந்தவற்றைவிட அதிகமான கவித்துவப்படிமங்களை இந்த உரைநடை முன்வைத்துச் செல்கிறது. ரூ.100/-

மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா எழுதிய சிறுகதைகளின் முழுத் தொகுதி இது. தமிழில் புதிய புனைவு மொழியை பரீட்சித்துப் பார்த்தவர்களில் சாருவின் இடம் மிகவும் முக்கியமானது. அவற்றில் பல கதைகள் வெளிவந்த காலத்தில் அதிர்ச்சிகளையும் விவாதங்களையும் உருவாக்கின. லீனியர், நான் லீனியர், எதார்த்தம், புனைவுகள் எனப் பல்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இக்கதைகள் நவீனச் சிறுகதை மொழிக்குப் புது ரத்தம் பாய்ச்சுபவை. இக்கதைகளின்மீது ‘அதிகாரபூர்வமான’ இலக்கிய மதிப்பீட்டாளர்கள் பாராட்டிய மௌனமும் காட்டிய கோபமும் இக்கதைகளின் எதிர்த் தன்மைக்குக் கிடைத்த அங்கீகாரமே. பழக்கப்பட்ட கதையின் பாதைகளைப் புறக்கணித்து மொழியின் அபாயகரமான பாதைகளில் பயணிக்கின்றன இக்கதைகள். ரூ.190/-