கள்ளி

வா.மு. கோமு வா.மு. கோமுவின் எழுத்துகள் குதூக்கலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்க்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வும் மதிப்பீடு களும் கனவுகளும் வெகு இயல்பாகத் தோற்றம் கொள்கின்றன. மத்திய தரக் கலாச்சார மதிப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, தமிழ் வாழ்வின் அறியப்படாத எதார்த்தம் ஒன்றினை வா.மு.கோமு சித்தரிக்கிறார். இந்த எதார்த்தம் சில நேரம் அதிர்ச்சி அளிப்பது; சில நேரம் நம் அந்தரங்க முகத்தைத் திறந்து காட்டுவது; ஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது. ரூ.120/-

மரம்

ஜீ. முருகன் ஆண்-பெண் உறவுகள் குறித்த கலாச்சார புனைவுகளையும் கவித்துவ பாசாங்குகளையும் தொடர்ந்து கலைப்பவை ஜீ.முருகனின் கதைகள். இந்த உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள், பாவனைகள், பிறழ்வுகள், பயங்கள், மீறல்கள் வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழியில் வரைகிறது மரம். மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடியதல்லஎன்பதை இந்த நாவலின் பாத்திரங்கள் நிரூபணம் செய்கின்றன. ரூ.140/-

ஜீ.சௌந்தரராஜனின் கதை

எஸ். செந்தில் குமார் வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகளும் லட்சியங்களும் கனவுகளும் தனி மனிதனிடம் வந்தடையும்போது அவற்றிற்கு எதிரான வாழ்வைத்தான் வாழ வேண்டியதாக இருக்கிறது. ஒருவரது வாழ்வில் நிழலைப் போலத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இயல்பானவையும் இயலாமையும் ஜீ.சௌந்தரராஜனின் கதையில் முழுக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்களது நிழல்களை மறைத்துக் கொண்டுதான் ஜீ. சௌந்தரராஜனின் கதையின் கதாபாத்திரங்கள் வீதிகளிலும் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரூ.90/-

வார்ஸாவில் ஒரு கடவுள்

தமிழவன் இந்த நாவல் போலந்து நாட்டின் தலைநகர் வார்ஸாவைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும் ஒரு தமிழனின் பார்வையில் அமைகிறது. ஐரோப்பியக் கலாச்சாரத்திற்குள் ஒரு கிழக்கத்தியக் கலாச்சார முகமிருப்பதையும் இந்தக் கலாச்சாரத்தின் விவரிக்க முடியாத புதிர்களையும் இந்நாவல் எளிய, புதுமையான கதையமைப்பின் மூலம் முன்வைக்கிறது. ரூ.275/-

கொலையுதிர் காலம்

சுஜாதா அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது. ரூ.250/-

கண்ணகி

சு.தமிழ்ச்செல்வி பெண்ணின் பெரும் துயரம் என்பது சு.தமிழ்ச்செல்வியினுடைய புனைவில் ஒரு வெளி. அவரே இத்துயருக்கான மாற்று வெளியை தமது புனைவின் வழி உருவாக்கிக் கொள்கிறார். இச்சமூகத்தில் இருந்தும் அவரது கற்பனை மற்றும் விழைவுகளிலிருந்தும் உருவாக்கப்படும் இவ்வெளி புதிய இல்லற அறங்களையும் பெண்ணிய நெடிகளையும் உள்ளீடாகக் கொண்டு இயங்குபவை. தமிழ் பண்பாட்டு கட்டுமானத்திற்கு பெரிதும் உதவியவள் சிலப்பதிகார பெருங்கதையாடல் உருவாக்கிய கண்ணகி. இப்பண்பாட்டு உருவாக்கத்தில் அசைவை ஏற்படுத்தும் மாற்று வாசிப்பை சாத்தியப் படுத்துகிறாள் இப்புனைவில் செயல்படும் நவீன கண்ணகி. ரூ.120/-

வட்டத்துள்

வத்ஸலா வத்ஸலாவின் நாவல் வெறும் அம்மா-மகள் கதை மட்டுமல்ல. ஏராளமான இதர பாத்திரங்கள் ஆசிரியையுடைய அகன்ற சொல்லோவியத்தில் அவரவர்களுடைய பங்கைப் பெறுகிறார்கள். பொதுவாக சுயநலம் என்ற குணம் இந்த நாவலின் பாத்திரங்களின் மூலமாக வெளிப்படுகிறது. தொடக்கத்தில் வரும் சொற்களும் சிந்தனைகளும் இறுதியிலும் வந்து வட்டத்தைப் பூர்த்தி செய்கின்றன.(அசோகமித்திரன் முன்னுரையிலிருந்து) ரூ.175/-

ஆஸ்பத்திரி

  சுதேசமித்திரன் நாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேசமித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. இத்தனை வெளிப்படையான எழுத்து தமிழில் அபூர்வமானது. வாசகனைக் கூசச்செய்யும் உண்மை கொண்டு அறைவது. நேரடித்தன்மையும் நியாயமும் கொண்டது. மொழியைக் கையாளும் திறனும் தீவிரமும் கொண்டது எனவே தனித்தன்மையானது. (நாஞ்சில் நாடன் முன்னுரையிலிருந்து) ரூ.80/-

மேகமூட்டம்

நிஜந்தன் எப்போதும் நிறம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வின் ஓட்டத்தைஇந்நாவல் பிரதிபலிக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் சம்பவங்கள் வாழ்தலின் சலிப்பையும் நம்பிக்கையையும் மாறி மாறி எழுப்புகின்றன. நெகிழும் தன்மை கொண்ட பாத்திரங்கள் உருவாக்கும் நாடகக் காட்சிகளும்இறுக்கமான விவரணைகளும் இந்த நாவலை ஒரு புராணீகத்தன்மை கொண்ட புனைவாக மாற்றுகிறது. ரூ.90/-

கானல் நதி

யுவன் சந்திரசேகர் யுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’ கலையின் எல்லையற்ற பிரகாசத்திற்கும் மனித இருப்பின் முடிவற்ற பெரும் துயருக்கும் இடையே ஒரு அக்னி நதியாக உருக்கொள்கிறது. இந்த நதி காலங்காலமாக மனித அனுபவத்தின் மீள முடியாத கனவொன்றை நம் நெஞ்சில் படரச் செய்கிறது. தனஞ்செயனைத் துரத்தும் விதியின் நிழல் எது? அது திரும்பத் திரும்ப சொல்லப்படும் இழந்த காதலின் தணியாத விம்முதல் மட்டும்தானா, அல்லது வீழ்ச்சிகளின் மன முறிவுகளின் யாரும்இனம் காண முடியாத விதியின் ரகசியங்களா? வாதையின் இடையறாது அதிரும் தந்திகளால் முடிவற்ற துயரத்தின் இசையை கசியச் செய்கிறது இந்நாவல். ரூ.200/-