பெயரற்ற யாத்ரீகன்

யுவன் சந்திரசேகர் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. பாலினம், தேசம், காலகட்டம் இவற்றில் இருக்கும் வேறுபாடுகளால் பாதிக்கப்படாத ஒரே குரலில் பேசுபவை. தனிமையின் குரல் அது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக, அல்லது சமூகத்தை விட்டுத்தான் விலகிச்செல்ல முடிவெடுத்தன் காரணமாக உருவான தனிமை அல்ல. இயற்கையை, தோன்றி இருந்து மறையும் தனது இயல்பைத் தன்னிச்சையாய் எதிர்கொள்ளும் உயிர்ப்பொருளின் தனிமை. எதன் மீதும் புகாரற்ற, எதையும் நிராகரிக்காத தனிமை. எனவே அடங்கிய குரலில் பேசுகின்றன. ரூ.110/-

கைமறதியாய் வைத்த நாள்

யுவன் சந்திரசேகர் என்றோ மலர்ந்து என்றென்றைக்குமாக மணம்வீசிப் பரந்திருக்கும் பூவின் இதழொன்றில் இப்போது பிறந்து துள்ளுகிறது ஒரு ஈசல். கூட்டத்துடன் இணைந்தும் பிரிந்தும் விலகியும் சடசடக்கும் ஈசலின் சிறகில் பளபளக்கிறது நித்தியத்துவத்தின் ஒரு துளி. ரூ.50/-

நீர்ப்பறவைகளின் தியானம்

யுவன் சந்திரசேகர் ஒரு கதையில் ஒரே கதையை மட்டும் சொல்வதில் நம்பிக்கையற்றவர் யுவன் சந்திரசேகர். வெவ்வேறு நிலக்காட்சிகளையும் சம்பவங்களையும் மனிதர்களையும் தனது கதைமொழியின் விசித்திரமான அடுக்குகளுக்குள் கலந்துவிடுவதன் மூலம் ஒரு புதிய வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறார். வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத இழைகளைக் கண்டடைவதன் மூலம் உருவாகும் புனைவுகளே இத்தொகுப்பில் உள்ள கதைகள். இவை 2007 டிசம்பரில் வெளிவந்த Ôயுவன் சந்திரசேகர் கதைகள்’ முழுத்தொகுப்பிற்குப் பிறகு எழுதப்பட்டவை ரூ.120/-

ஏற்கனவே

யுவன் சந்திரசேகர் சம்பிரதாயமான, வெளிப்படையான இருப்பின் சட்டகத்தைக் கனவினாலும் பிரக்ஞையாலும் தொடர்ந்து கலைத்துக் கொண்டிருப்பவை யுவன் சந்திரசேகரின் கதைகள். கதையின் ஆதார அழகியலையும் சுவாரசியத்தையும் விரித்தபடியே அதன் வழக்கமான வழிமுறைகளைக் கலைத்து மாற்றியமைக்கும் யுவன் சந்திரசேகரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. ரூ.100/-

மணற்கேணி

யுவன் சந்திரசேகர் கவிதை, சிறுகதை, நாவல் என்ற வடிவங்களுக்குள் அடங்காத அல்லது அவற்றின் நிர்ப்பந்தங்களை தாண்டிச் செல்லும் அனுபவங்களையும் நினைவுகளையும் எங்ஙனம் எதிர்கொள்வது என்ற கேள்வியின் விளைவே யுவன் சந்திரசேகரின் இந்த நூறு குறுங்கதைகள். சாதாரணப் பார்வைக்கு எளிதாகத் தப்பிவிடும் சின்னஞ்சிறு பிறழ்வுகள், யாரும் எதிர்கொள்ளக்கூடிய கணங்கள் இக்கதை களின் ஆதாரமாக இருக்கின்றன. மிகக்குறைவான வாக்கியங் களில் உருவாக்கப்படும் கதாபாத்திரங்கள், விவரணைகள், உரையாடல்கள் குறுங்கதை என்ற வடிவத்தின் சாத்தியங்களை உணர்த்துகிறது. இவை குறுங் கதைகளாக எழுதப்பட்டபோதும் அவற்றிற்கிடையே ஓடும் பொது நீரோட்டம் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குகிறது. ரூ.180/-

கானல் நதி

யுவன் சந்திரசேகர் யுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’ கலையின் எல்லையற்ற பிரகாசத்திற்கும் மனித இருப்பின் முடிவற்ற பெரும் துயருக்கும் இடையே ஒரு அக்னி நதியாக உருக்கொள்கிறது. இந்த நதி காலங்காலமாக மனித அனுபவத்தின் மீள முடியாத கனவொன்றை நம் நெஞ்சில் படரச் செய்கிறது. தனஞ்செயனைத் துரத்தும் விதியின் நிழல் எது? அது திரும்பத் திரும்ப சொல்லப்படும் இழந்த காதலின் தணியாத விம்முதல் மட்டும்தானா, அல்லது வீழ்ச்சிகளின் மன முறிவுகளின் யாரும்இனம் காண முடியாத விதியின் ரகசியங்களா? வாதையின் இடையறாது அதிரும் தந்திகளால் முடிவற்ற துயரத்தின் இசையை கசியச் செய்கிறது இந்நாவல். ரூ.200/-

வெளியேற்றம்

யுவன் சந்திரசேகர் வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பீடித்திருக்கும் ஏதேனும் ஒன்றிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள்தாம் அந்த வெளியேற்றத்தை நிகழ்த்துகின்றன. அவை சில சமயம் தண்டனையாகவும் சில சமயம் விடுதலையாகவும் உருக் கொள்கின்றன. ஆனால் இதற்கு அப்பால் தன்னிசையாக வெளியேறிச்செல்லும் ஒருவரின் கதை இது. அவருடைய, அவரைச் சுற்றி வலைப்பின்னலாய்ப் படிந்திருக்கும் எண்ணற்ற மனங்களுடைய கதையும்கூட. ரூ.320/-