சினிமா: அலைந்துதிரிபவனின் அழகியல்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அழகியல் அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத் தன்மையைக் கடுமையாகச் சாடும் சாருநிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். பரவலாக அங்கீகரிக்கப்பட்ட படங்கள், இயக்குனர்களைக் காட்டிலும் மாற்று சினிமா மொழியை உக்கிரமாகக் கையாண்ட கத்ரீன் ப்ரேலா, ஒட்டிஞ்ஜர், பசோலினி, ஹொடரோவ்ஸ்கி போன்றவர்களே சாருவின் அக்கறைக்குரியவர்களாக இருக்கிறார்கள். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது ரூ.170/-

ஒழுங்கின்மையின் வெறியாட்டம்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதாவின் நேர்காணல்கள் பாசங்குகளற்ற வகையில் உறுதியான வாதங்களை முன்னிறுத்துபவை. போலியான அனுசரணைகளை பேணாதவை. நிறுவப்பட்ட மதிப்பீடுகள், அபிப்ராயங்களுக்கு எதிராக உரத்த குரலில் பேசுபவை. ஒரு காலகட்டத்தின் சமரசமற்ற எதிர்க்குரல். அதனாலேயே அது தனியன் ஒருவனின் குரலாகவும் இருக்கிறது. ரூ.130/-

ஊரின் மிக அழகான பெண்

சாரு நிவேதிதா சாருநிவேதிதா மொழிபெயர்த்த புனைகதைகள் அடங்கிய இத்தொகுப்பு அதன் தேர்வு சார்ந்தும் மொழியாக்கம் சார்ந்தும் மிகவும் முக்கியமானவை. லத்தீன் அமெரிக்க, அரேபிய நாடுகளிலிருந்து இக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது தற்செயலானதல்ல. லத்தீன் அமெரிக்காவின் அரசியல் போராட்டம் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த காலத்தில், தமிழில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தையும் இன்று இஸ்லாமிய நாடுகள் வல்லரசுகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அரேபிய இலக்கியத்தையும் மொழிபெயர்க்கும் சாரு நிவேதிதாவின் தேர்வுகள் இலக்கிய முக்கியத்துவமும் அரசியல் முக்கியத்துவமும் ஒன்று சேர்ந்தவை என்பதற்கு இந்த நூல் ஒரு சாட்சியாகத் திகழ்கிறது. ரூ.190/-

கலகம் காதல் இசை

சாரு நிவேதிதா உலக இசைப் பரப்பின் சில மகத்தான வடிவங்களையும் கலைஞர்களையும் பற்றி விவாதிக்கும் இந்நூல் மலையாளத்தில் மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவந்து பெரும் கவனத்தைப் பெற்றது. இவை இசையின் பரவசத்தையோ கலைஞர்களின் மகோன்னதத்தையோ பாடும் நூல் அல்ல. மாறாக அந்தந்தச் சமூக, பண்பாட்டு, அரசியல் வெளிகளில் இந்தக் கலைஞர்கள் ஏற்படுத்திய குறுக்கீட்டினையும் அதன் ஊடாக அந்தச் சமூகங்களின் உளவியல் மற்றும் அரசியல் பண்பாட்டினையும் முன்வைக்கிறது. ரூ.70/-

தப்புத் தாளங்கள்

சாரு நிவேதிதா உலக நாடுகளில் பரவலாக லத்தீன் அமெரிக்க இலக்கியமே பெரிதும் அறியப்பட்டதாக இருந்து வருகிறது. ஆனால் அதைவிடவும் காத்திரமான இலக்கியம் அரபி மொழியிலிருந்துதான் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன் மகத்தான படைப்புகளையும் படைப்பாளிகளையும் பற்றிய அறிமுகங்களை இந்நூலின் பல கட்டுரைகள் முன்வைக்கின்றன. இஸ்லாமியக் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய ஆன்மீகம் இவற்றின் விழுமியங்களை நாம் அறிந்துகொள்ளத் தடையாக இருப்பது எது என்பது பற்றிய விவாதத்தை இந்த நூல் ஆரம்பித்து வைத்தால் அதுவே இக்கட்டுரைகள் எழுதப்பட்டதற்கான நியாயத்தை நிறைவு செய்யும். ரூ.135/-

வரம்பு மீறிய பிரதிகள்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின்றன. அதே சமயம் எழுத்தின் வரம்புகளை உடைத்தெறிந்த ழார் பத்தாய், கேத்தி ஆர்க்கர், ஹோஸே மரியா ஆர்கெதா, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, க்ரிஸ்டினா பெரி ரோஸி, அல் முகமது ஷுக்ரி போன்றோரின் படைப்புகள் குறித்து மிக ஆழமான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது. ரூ.170/-

ஆஸாதி…ஆஸாதி…ஆஸாதி

சாரு நிவேதிதா தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கபட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச் சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாருநிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்ட வட்டமாக நிறுவுகின்றவை. தனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம்காலமாக அதிகார வன்முறைக்கும் சீரழிவிற்கும் எதிராக எழுப்பபட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீக கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார். இவற்றில் பல கட்டுரைகள் மலையாள இதழ்களில் வெளிவந்தது தற்செயலான ஒன்றல்ல. நமக்கு சொல்வதற்கும் கேட்பதற்கும் இன்னும் அதிக வெளி தேவைப்படும் சூழலில் இந்த எழுத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ரூ.200/-

மூடுபனிச்சாலை

சாரு நிவேதிதா கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, தமிழ் மொழிக்கு நேர்ந்துள்ள அவல நிலை, ஈழத் தமிழர் பிரச்சினை, திபெத், சீனா, ஹாங்காங், ஹவாய், வில்லுப் பாட்டு, இந்தோனேஷிய இயக்குனர் கரீன் நுக்ரஹோ, வி.எஸ்.நைப்பால், சல்மான் கான், அவர் வேட்டையாடிய மான் மற்றும் ஐஸ்வர்யா ராய், பெர்லின் நிர்வாண சங்கத்தில் பெரியார் எடுத்துக் கொண்ட புகைப்படம், மினரல் வாட்டரில் குளிக்கும் சினிமா நடிகர்கள், ஆவியுலக அனுபவங்கள், கூவாகம், குஜராத் படுகொலைகள் என்று பல்வேறு இடங்களில் பயணம் செய்கின்றன இக்கட்டுரைகள். இவை எந்த கருத்தியலுக்கும் விசுவாசமாக நின்று சமூக நிகழ்வுகளை சித்தரிப்பவை அல்ல. மாறாக ஒரு சுயேச்சையான எழுத்தாளனின் பார்வையிலிருந்து இந்த சமூக சித்திரங்கள் உருவாகின்றன. ரூ.95/-

கடவுளும் நானும்

சாரு நிவேதிதா ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விலையும் அவர் அறுதியாக ஆன்மீகம் என்பதை தன்னை வெளி நடத்தும் வெளிச்சமாகக் காண்கிறார். ரூ.70/-

அதிகாரம் அமைதி சுதந்திரம்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா சமகால சமூக அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. அரசியல் அறவுணர்வும் தார்மீக நியதிகளும் தொடர்ந்து சீரழிக்கப்படும் ஒரு காலகட்டத்தில் இந்த நூல் நமது சமூக விழிப்புணர்விலிருந்து தீவிர எதிர்கொள்ளலை வேண்டி நிற்கின்றன. ரூ.65/-