பாஸ்வேர்டு
Tamil Magan / October 2, 2016

பாஸ்வேர்டு நட்டநடு சாலையின் மஞ்சள் கோட்டில் அவனும் அவளும் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் கொக்கியில் மாட்டிய ரயில்பெட்டிகள் போல வாகனங்கள் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தன. ஐந்து நிமிடங்களுக்கு மேலாக சாலையைக் கடக்க வழிகிடைக்காமல் நின்றிருந்தனர். அது சாலையைக் கடப்பதற்கான தடம் அல்ல. வாகனங்களுக்கு இடையே அரிதாக இடைவெளி விழும்போது, தற்கொலை முயற்சி போல பாய்ந்து சென்று சாலையைக் கடந்துவிட வேண்டும். ஆனால், இடையில் வெளியே இல்லாத வாகனச் சுவர். சற்று தூரத்தில் சிக்னல் இயந்திரம் இருந்தது; ஆனால் அது வேலை செய்யவில்லை; போக்குவரத்து போலீஸாரும் இல்லை. இரண்டு பேருக்குப் பரிதாபப்பட்டு வாகனங்கள் நிற்பதாகவும் இல்லை.  ஒருவரை ஒருவரை ஒருவர் வழித்துணைபோல பார்த்துக்கொண்ட அந்தத் தருணத்தில்தான் அவர்களுக்குள் பார்வை அறிமுகம் நிகழ்ந்தது. “சிட்டி பேங்க் நான்கு மணி வரைக்கும்தானே?’’ என அவள் கேட்டபோதுதான் அவனும் ஒரு புன்னகையோடு தயார் ஆனான். அவளும் புன்னகைத்தாள். அவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு. இன்னைக்கு லாஸ்ட் நாள் வேற’’ என்றான். அந்த வாகனத்  திரளில் மனிதர்கள் இருவர் பேசுவதற்கான சூழ்நிலை இயல்பாகவே உருவாகியது. உடனடியாக அவள் ஒரு காரியம் செய்தாள். அவளுடைய கைப்பையில் இருந்து செல்போனை எடுத்தாள். வேகமாக சில பட்டன்களை அழுத்தினாள். பொறுமை இன்றி காத்திருந்தாள். அவள் முகத்தில் புன்னை மலர்ந்தது. “ஆன்லைன்லயே கட்டிட்டேன்.’’ செல்போன் குறுஞ்செய்தியைப் பார்த்தபடி, பொதுவாக சொன்னாள். ஆனால், அதைக் கேட்பதற்கு அங்கு அவன் ஒருவன் மட்டும்தான் இருந்தான். அவள் முடிவெடுத்த வேகம், தொழில்நுட்பத்தை சட்டென பிரயோகித்த திறமை, விழிகளைச் சுழற்றியபடி சொன்ன பாணி… எதனாலோ அவனுக்கு அவளைப் பிடித்துப்போனது. அவள் மஞ்சள் நிறப் புடவை கட்டியிருந்தாள். அதே நிறத்தின் சகோதர வேறுபாடுதான் அவளுடைய நிறம். அவ்வளவு மலர்ச்சியான விழிகள். கேமிரா படம் எடுப்பதுபோல் அதன் இமைகள் மெல்ல மூடித் திறந்தன. சுருள் சுருளான கருப்பான தலைமுடி, வாகன ஓட்டத்துக்கு ஏற்ப காற்றில் அலைபாய்ந்தது. மஞ்சள் நகப்பூச்சு. நீளமான விரல்கள்….