Description
கரிசல் தேசத்து சம்சாரிகளுக்கு மாடுகளோடு உள்ள உறவு கொஞ்சம் உசத்தி தான். மாட்டின் காலில் கானை வந்திருந்தால் அதை குறிப்பால் சம்சாரிக்கு உணர்த்தி காலைக் காட்டும். தண்ணீரில் உப்பு கரைத்து எடுத்து வந்து கழுவி அதன் வலியை தீர்க்கும் வித்தை தெரிந்தவன் சம்சாரி. அதிலும் சுப்பனாசாரி போன்ற மாட்டுக்கு கை வைத்தியம் பார்க்கக்கூடிய, மாடுகளின் பால் தனிப்பட்ட வாஞ்சை கொண்ட மனிதர்கள் இருந்த காலம் அது என்கிறார் ஆசிரியர். கூப்பிடாமலேயே மாடு கண்ணுப் போடும் நாள் அன்று வருகை தந்து, சுளுவாய் பிரசவம் பார்த்து, ஏதும் நோய் நொடி என்றால் பார்த்து பார்த்து அதைக் கவனிப்பதும் வெறும் டீ தண்ணியை மட்டும் கூலியாக பெற்றுக் கொண்டு காரியமாற்றும் அற்புத மனிதர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்தப் புதினம்.
இந்த ‘வெள்ளாமை’ புதினத்தில் ஒரே ஒரு எதிர்மறை சிந்தனை கொண்ட ஆளைக் கூட பார்க்க முடியவில்லை என்பது மிகச் சிறப்பு எந்த ஒரு இடத்திலும் எதிர்மறைச் சொற்களோ, வஞ்சம், பொறாமை, ஆணவம், ஆத்திரம் மிக்க சொற்களைக் கையாளும் மனிதர்களோ இன்றி படைக்கப்பட்டிருக்கும். ஆசிரியரின் கைவண்ணத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. என்ன ஒரு நேர்மறை சிந்தனை உள்ள மனது அவருக்கு? வில்லன் இல்லாத ஒரே ஒரு நாவல் இந்த வெள்ளாமை தான். கரிசல் மண்ணின் தாராள குணம் போலவே அந்த மண்ணின் மைந்தர்களும் கருணை உள்ளமும் பெருந்தன்மையும் மிக்கவர்கள்.





Reviews
There are no reviews yet.