Description
மருத்துவர் கு.சிவராமன்
நாம் தொலைத்து வருவது நல்ல உணவு, நல்ல உடலுறுதி, நல்ல உள்ள மகிழ்வு, நல்ல சுற்றுச்சூழல். பாரம்பரிய எச்சங்களை, அறம்சார் அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுப்பது மட்டும்தான் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை. – மருத்துவர் கு.சிவராமன். இயற்கையை மீறி நடக்கும் செயல்கள் யாவும் சிறப்புடன் அமைந்ததில்லை என்று சரித்திரம் சொல்கிறது. அது உணவுக்கும் பொருந்தும், மருத்துவத்திற்கும் பொருந்தும். உடலே உயிர்.. உணவே மருந்து என்ற திட நுட்பமான உண்மை விளங்கினால் நோயற்ற வாழ்வு நிச்சயம். அவசர கதியான உலகில் மனித வாழ்வியலில் எங்கு நோக்கினும் கலப்படம் என்பது இரண்டற கலந்துவிட்டது. இதன் விளைவு புதிய புதிய நோய்களின் உற்பத்தி. இயற்கை விதிகளை மீறி சூழலை மாசுபடுத்துவதின் விளைவாக விளையும் பாதிப்புகள் மனிதகுல அழிவுக்கு வழிவகுக்கும். இந்த பேரபாயத்தை நாம் உணர வேண்டும். உணவும், சூழலும், மருத்துவமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ‘பாரம்பரிய அனுபவங்களைக் கட்டவிழ்க்க, பாரபட்சமற்ற பாரம்பரிய மருத்துவப் புரிதலும் வேண்டும்; நவீன விஞ்ஞான ஆய்வுகளும் வேண்டும். இரண்டில் எது குறைந்தாலும் விடை கிடைக்காது. இங்கே முட்டுக்கட்டையாக இருப்பது இரண்டின் ஒருங்கிணைந்த பார்வையும் இல்லாததுதான்’ என்கிறார் மருத்துவர் கு.சிவராமன். இயற்கையோடு இணைந்த வாழ்வே பெருவாழ்வு. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக, கலப்படம் அற்றதாக இருக்க வேண்டும். அதனை உற்பத்தி செய்யும் நிலத்தை பாதுகாக்க வேண்டும். நமக்கெல்லாம் சோறுபோடும் விவசாயி வயிறு நிரம்ப வேண்டும். இதற்கு நாம் என்ன செய்யவேண்டும். ‘சுற்றமும் சூழலும் நட்பும்’ என்ற இந்தப் புத்தகத்தில் நம் நிகழ்கால வாழ்வுக்கும், எதிர்கால வாழ்வாதாரத்திற்கும் அடிப்படை என்ன என்பதை சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். ‘நலவாழ்வுக்கு நல்ல தூக்கமும் அக மகிழ்வும் இயல்பாய் நிகழும் வாழ்வியல் வேண்டும். அதற்கு வாழ்வின் உயரங்களை விட சம நிலங்களைப் பற்றிய புரிதல் வேண்டும். பாரம்பரியம் பலகாலமாய்க் கற்றுக் கொடுத்தது அதைத்தான்’ எனும் கு.சிவராமன் நம் வாழ்வை நெறிப்படுத்தும் முறைகளையும் வகுத்தளிக்கிறார். வாருங்கள் நாமும் அவரோடு இணைவோம். நம் பாரம்பரியம் காக்க…
ரூ.80/-
Reviews
There are no reviews yet.