Description
யெஸ்.பாலபாரதி
மனித வாழ்வு பெரும் ரகசியங்களை உள்ளடக்கியது. மனிதத்தன்மை என்று பொதுவெளியில் நாம் சொல்லும் வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. மனம் சார்ந்த நிலையில் மனிதனின் தன்மைகள் மாறுபடுகின்றன. மனிதனின் இயல்புகளிலும் இந்த மாற்றங்கள் எதிரொலிக்கின்றன. சமீப காலமாக ஆட்டிசம் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆட்டிசம் என்பது மனிதனின் மூளை செயல்திறன் குறைபாடா? ஆட்டிச நிலையாளர்கள் மாற்றுத்திறனாளிகளா? இல்லவே இல்லை. ஆட்டிசம் என்பது ஒரு வகை நிலை. ஆட்டிச நிலையாளர்களை அவர்களது முகத்தை வைத்து அல்லது செயல்பாடுகளை வைத்து அடையாளம் காணலாம். சிலரை எந்தவித அடையாளங்களுக்கும் உட்படுத்த முடியாது. அத்தகைய தன்மைவாய்ந்த ஆட்டிச நிலையாளர்களில் சிலரது ‘ஐக்யூ பவர்’ ரொம்ப பவர்ஃபுல்லானது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அவர்களிலும் சாதாரண மனிதர்கள் இருக்கின்றனர். இருப்பினும் ஆட்டிச நிலையாளர்கள் குறித்து சரியான புரிதல் இன்னும் சமூகத்தில் வளரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆட்டிச நிலை சிறுவன் ஒருவன் வீட்டைவிட்டு காணாமல் போவது குறித்த கதைதான் இந்தக் குறு நாவல். ஆட்டிசம் பற்றி இதுவரை ஒரு சில கதைகளும், நாவல்களும், சில திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஆனால், ஆட்டிச நிலையில் உள்ளவர்களைச் சுற்றியுள்ளவர்களின் செயல் நிலை அல்லது மன நிலையைப் பற்றிய புரிதல்களுடன்தான் இவை வெளியாகி உள்ளன. ஆட்டிச நிலையில் உள்ளவர்களின் அக உணர்வைப் பிரதிபலிக்கும் முதல் நாவல் இந்தத் ‘துலக்கம்’தான். ‘பொதுவாக ஆண்கள் அழத்தொடங்கி விட்டால் பெண்கள் ஆதரவாக இருக்க முனைகிறார்கள். பெண்கள் அழ ஆரம்பித்தால்… ஆண்கள் எரிச்சலடைந்து கத்துகிறார்கள். இப்படி இருப்பதற்கு ஆண்கள் அழுதால் அது அவமானம் என்றும், பெண்கள் அழுவது சகஜம் என்றும் கற்பிதங்கள் நிலவுவது கூட காரணமாக இருக்கலாம்…’ இதுபோன்ற அர்த்தமுள்ள, அழுத்தமுடைய வரிகள் நாவல் முழுவதும் வியாபித்து உள்ளன. விறுவிறுப்பான நடை நாவலுக்கு மெருகூட்டியிருக்கிறது. எழுத்தின்கண் சமூக மாற்றத்தை எதிர்நோக்கும் இளம் எழுத்தாளரான யெஸ்.பாலபாரதி, ஆட்டிச நிலையாளர்களின் அக உணர்வை இந்த நாவலில் பிரதிபலித்துள்ளார் என்பதை நாவலைப் படித்து நிச்சயம் அறிந்துகொள்வீர்கள்.
ரூ.85/-
Reviews
There are no reviews yet.