அரவான்

எஸ். ராமகிருஷ்ணன் இந்த நாடகங்கள் வாழ்வைத் தீவிர நிலையில் எதிர்கொள்ளும் தருணங்களின் வெளிப்பாடு, தனக்குத்தானே ஒருமனிதன் உரையாடிக் கொள்ளும் நெருக்கடியிலிருந்துதான் நாடகம் பிறக்கிறது. அதிகாரத்தை எதிர் கொள்வதும், வரலாற்றை, கலாச்சாரப் புனைவுகளைக் கட்டுடைப்பதும், மனப் பிறழ்வுகளின் மீது மையம் கொள்வதும் என இந்த நாடகங்கள் புதிய நிகழ்வெளிக்கான சாத்தியங்களை உருவாக்கு கின்றன. எஸ். ராமகிருஷ்ணனின் ஒன்பது நாடகங்கள் கொண்ட தொகுப்பு இது. இந்த நாடகங்கள் நிகழ்த்தப்பட்டபோது மிகுந்த வரவேற்பு பெற்றதோடு சங்கீத நாடக அகாதமியின் தேசிய நாடகவிழாவிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள அரவான் நாடகம் மலையாளம் மற்றும் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.90/-

சுஜாதாவின் நாடகங்கள்

சுஜாதா சுஜாதாவின் நாடகங்களின் முழுத் தொகுப்பு இது. அவரது புகழ் பெற்ற நாடகங்களான அன்புள்ள அப்பா, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, ஊஞ்சல், பாரதி இருந்த வீடு, அடிமைகள் உள்ளிட்ட 22 நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. வாசிக்கப்பட்டபோதும் நிகழ்த்தப்பட்டபோதும் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் ஆழ்ந்த மனக்கிளர்ச்சியை இந்த நாடகங்கள் ஏற்படுத்தின. உரையாடல்களின் கூர்மையும் கதாபாத்திரங்களிடையே நிகழும் தீவிர மாறுதல்களும் உறவுகளின் விசித்திரங்களும் இந்த நாடகங்களை நவீன வாழ்க்கை முறையின் துல்லியமான சித்திரங்களாக்குகின்றன. ரூ.500/-

என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது

செழியன் ‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அடையாளப்படுத்தப்பட்டவர். தேசிய விடுதலைப் போராட்ட இலக்கியத்தில் முன்னோடியானவையாக அமைந்த கவிதைகளில் செழியனின் கவிதைகளும் அடங்கும். இதுவரை இவரது ஐந்து சிறுகவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அரசியல் முக்கியத்துவம் பெற்ற ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவருடைய நான்கு நாடகங்கள் டொரன்டோ, கனடாவிலும், ‘வேருக்குள் பெய்யும் மழை’ இலண்டனிலும் மேடை ஏற்றப்பட்டுள்ளன. மனித வாழ்வின், மனித உறவுகளின் சிறு சிறு கணங்கள்கூட காவிய வலிமை பெற்ற உயர்பெரும் பொழுதுகளாக மாற்றம் பெறுகின்ற அற்புத உலகமாக நாடகங்கள் அமைய முடியும். இத்தகைய புரிந்துணர்வும் புலப்பதிவும் ஒருங்கே அமையப் பெற்றவர் செழியன். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து டொரன்டோ கனடாவில் வாழ்கின்ற செழியனின் படைப்புகளுக்குப் புலம்பெயர்ந்த வாழ்வு புதிய வண்ணங்களை வழங்கியிருக்கிறது. புதிதாக இவர் ‘வானத்தைப் பிளந்த கதை’ என்கின்ற அனுபவத் தொடரை எழுத ஆரம்பித்துள்ளார். ரூ.50/-