ஏ.பாலசுப்பிரமணியம் மதத்தின் பெயரால் பயங்கர யுத்தங்கள் நடந்துள்ளன.படுகொலைகள் இன்றும் நடக்கின்றன.ஆனால்,நாத்திகர்கள் ஆத்திகர்களைக் கொலை செய்ததாகவோ தங்கள் கருத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்பதற்காக யுத்தம் நடத்தியதாகவோ வரலாறு இல்லை என்கிற வரிகளோடு துவங்கும் இப்புத்தகம் ஒரு ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் இடையில் நடக்கும் உரையாடலின் மூலம் கடவுள் இருக்கிறது என்கிற நம்பிக்கையின் ஆணி வேரை அசைக்கிறது.பித்தப்பை என்னென்ன செய்கிறது என்பதுகூட நமக்கு முழுசாகத் தெரியாது.உடற்கூறு விஞ்ஞானத்தின் அறியாமை காரணமாக நம் உடல் பற்றியே பல தவறான கருத்துக்கள்,மூட நம்பிக்கைகளை நாம் கொண்டிருக்கிறோம்.அப்படி இருக்கும்போது பிரபஞ்சம் முழுவதும் பற்றிய ஞானத்தில் நிச்சயமாகக் குறைபாடுகள் இருக்கும்.ஆனால் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்தார் என்று கூறுவது எப்படி சரியாகும் என்கிற மாதிரி சின்னச் சின்னக் கேள்விகள்.பின் அவற்றுக்கான விடைகள்,பின் அதைத் தொடரும் அடுத்த கேள்வி என்கிற பாணியில் நகர்ந்து செல்லும் இப்புத்தகம் நாத்திகத்தை முரட்டடியாக அல்லாமல் அறிவியல் அடிப்படையில் ஆத்திகரும் ஒப்புக் கொள்ளும் வண்ணம் எடுத்துச் சொல்கிறது.இப்பிரபஞ்சத்தில் என்றென்றும் பொருள் இருந்தே வந்திருக்கிறது.படைப்பு என்பதே இல்லை.ஆகவே படைத்தவனும் இல்லை என்று கச்சிதமாக உரையாடல் நிறைவுபெற புத்தகம் முடிகிறது.வெறும்16பக்கங்களில் இவ்வளவு விஷயங்களை இவ்வளவு எளிமையாகச் சொல்லி இருப்பது நூலாசிரியரின் மேதமையன்றி வேறென்ன? ரூ.10/- Tags: அறிவியல், ஏ.பாலசுப்பிரமணியம், பாரதி புத்தகாலயம்
No Comments