தேர்தல் களம்
August 26, 2016
1. வேளாண்சமூகத்தை புறக்கணித்த திமுக – அதிமுக 87-88 ல் விதை, உரம், பூச்சிமருந்து, வாடகை, கூலி ஆகிய உற்பத்திச் செலவை அடிப்படையாக வைத்து தற்போது விலை தீர்மானிக்கப்படுகிறது. இதை விட விவசாயிகளுக்கு வேறு துரோகம் இருக்க முடியுமா? தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மைத்துறையின் பங்கு 2001-02ம் ஆண்டில் 17.54 சதவீதமாக இருந்தது 2009-10ல் 8.78 சதவீதமாகவும் 2014-15ல் 7.25 ஆகவும் குறைந்துள்ளது… 50 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் உள்ள தமிழ்நாட்டில் அ.தி.மு.க அரசு ஆண்டுக்கு ஐந்தாயிரத்து 500 கோடி அளவுக்குத்தான் விவசாயிகளுக்கு கடன் வழங்க ஒதுக்கினார்கள். இதனால் வங்கிகளில் கடன் பெற முடியாமல், தனியாரிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை’ என்ற துயர முடிவை எட்டினர். கரும்பு அனுப்பிய 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணத்தை கொடுக்க வேண்டும். இல்லையெனில் 15 சதவீத வட்டியுடன் பாக்கியைத் தர வேண்டுமென்று சட்டம் குறிப்பிடுகிறது. ஆனால் கரும்பையும் கொடுத்துவிட்டு காசுக்கு ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள் விவசாயிகள் தமிழ்நாட்டில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாகவும் அதை நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் வீதம் வழங்க இருப்பதாகவும் 2006 சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க வாக்குறுதியளித்தது. அடுத்த சில மாதங்களில் வழக்கம் போல், பின்வாங்கி 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இல்லை என கையை விரித்தார் கருணாநிதி… ஆண்டுக்கு சராசரியாக 70 நாட்கள் மட்டுமே விவசாயத்தில் வேலை கிடைக்கிறது. மீதி நாட்களுக்கு? விவசாயத்தில் கிடைக்கும் வேலையை மட்டுமே நம்பி எந்தவொரு விவசாயத் தொழிலாளியும் வாழ முடியாது என்பது இன்று ஏற்பட்டிருக்கும் புதிய நிலைமை. கடந்த 48 ஆண்டு காலமாக மாறி, மாறி திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வாக்களித்தோம். மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படவில்லை. ஆண்டவர்களின் வாழ்வில் தான் வசந்தம் வீசியது. மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவ்வளவு காலமும் வலுவான மாற்று அணி என்பது உருவாகவில்லை. இப்போது உருவாகியுள்ள வலுவான மாற்று அணியை தவறவிட்டால் இன்னும் எத்தனை காலம் ஆகுமோ? 2. நெறிபிறழ் முதலாளித்துவம் (crony capitalisam) ஊழலின் ஊற்றுக்கண் – எஸ். விஜயன் 2G ஊழலில் நாட்டு மக்களின் இழப்பு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி… 2G நாயக, நாயகிகளின் மீதான குற்றச்சாட்டு 200 கோடி… எங்கு சென்றது மிச்சமுள்ள பல்லாயிரம் கோடி? ஆண்ட கட்சிகளும், அவர்களது ஊதுகுழல்களும் பேசாத பொருளை, பேசி விளக்க வந்துள்ள பிரசுரம் 3. சமையல் வாயு – அம்பானிகளின் சூதும் அதிமுக, திமுக-வின் பாராமுகமும் – எஸ். விஜயன் நடுத்தர மக்களின் பெரும் பிரச்சனையாய் மாறிவரும் “சமையல் வாயு…” விலையேற்றத்துக்கும், பிரச்சனைக்களுக்கும் அடிப்படைக் காரணம் என்ன? சர்வதேசத் சந்தையில் 3 டாலரை குறைவாக விற்கும் எரிவாயுவிற்கு 8 டாலரை அள்ளி அம்பானிக்கு வழங்கும் பாஜக, காங்கிரஸ் வாய்மூடி மௌணம் காக்கும் அதிமுக, திமுக… உண்மை விவரங்களின் விளக்கமாக உள்ள பிரசுரம். 4. கணக்குப் பார்ப்போம்.. கணக்குத் தீர்ப்போம் – உ.வாசுகி “ஆறுபோல பேச்சு… சொன்னதெல்லாம் போச்சு” அப்படி வித்தார பிரச்சாரப் பேச்சுகளைத் தாண்டி, ஆண்டவர்களின் கணக்கென்ன? அவர்களால் மாண்டவர்களின் கணக்கென்ன? என்பதை எளியமொழியில் எடுத்துக் கூறி கணக்குப் பார்க்கவும் கணக்குத் தீர்க்கவும். 5. அதிமுக+திமுக=மின்வெட்டு கே. விஜயன் தமிழகம் சொல்லப்படாத மின்வெட்டுகளிலும் மின்தடைகளிலும் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது… மின்மிகை மாநிலம் என்ற அபத்தப் பிரச்சாரம் ஒரு புறம். ஆட்சியைவிட்டு அகற்றப்பட மின்தட்டுப்பாடு ஒரு காரணமாய் இருக்கும்போது… தடையற்ற மின்சாரம் என்ற பசப்பல் பிரச்சாரம் மறு புறம் தமிழகத்தின் மின்பற்றாக்குறைக்கு உணமையான காரணம் இவர்கள்தாம் என்பதை புள்ளி விவரங்களுடன் விளக்கும் பிரசுரம். 6. கழகங்களால் கைவிடப்பட்ட மக்கள் நல்வாழ்வு இன்று, நாளை என்ற மூன்றும் மனிதனுக்குரியவை. சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள், நம்பிக்கைகள், நல்வாழ்வு வணிகமயமாக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் லாபம் தேடும் தொழிலாக மாற்றப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் மருத்துவமனைகள் விபத்தில் சிக்கிய (மூளை மரணம் அடையும்) நோயாளியிடமிருந்து உடல் உறுப்புகளை அறுவடை (Harvesting the Organs) செய்கின்றன. இந்த அறுவடை இப்பொழுது விவசாய அறுவடை போல் நடந்து வருகிறது. கார்ப்பரேட் மருத்துவமனைகள் முதலீட்டிற்கான லாபத்தைத் தேடும் பொழுது அது நோயுறா நிலையை ஒரு போதும் ஆதரிக்காது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அது ஒரு போதும் விரும்பாது. அது நோயாளிச் சந்தையை சுருக்கும் நடவடிக்கையாகும். எனவே, சந்தையை வளர்க்கும் நடவடிக்கையையே அது மேற்கொள்ளும். கலைஞர், அதாவது அய்யா காப்பீட்டுத் திட்டத்தில் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ரூ.200 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அம்மா காப்பீட்டுத் திட்டத்தில் 750 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி 3 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை உருவாக்கி இருக்க முடியும். கடந்த 30 ஆண்டுகளில் மத்திய அரசின் மக்கள் நல்வாழ்விற்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து தேசிய மொத்த வருவாயில் (GDP TM ) 1.5% க்கு குறைவாகவே இருந்துவந்துள்ளது. 7. திமுக-அதிமுக: கிரானைட் மலையை விழுங்கியவர்க்ள் • அதிமுக ஆட்சி நடைபெற்ற 2001 – 2006 ஆண்டுகளில் 77 குத்தகை அனுமதிகளும், திமுக ஆட்சி நடைபெற்ற 2006-2011 ஆண்டுகளில் 68 குத்தகை அனுமதிகளும் வழங்கி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன • கிராமங்களை விட்டு ஏழை மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்றப்பட்டனர். கிராமங்களை விட்டு ஏழை மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்றப்பட்டனர். மதுரை கிழக்கு தாலுகாவிற்கு உட்பட்ட சிவலிங்கம், டி.குந்தாங்கல், லாங்கிட் நகர் மற்றும் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ரெங்கசாமிபுரம், இ.மல்லம்பட்டி ஆகியவை அவற்றில் சில. பி.ஆர்.பி கிரானைட், பி.ஆர்.பழனிசாமி, பி.ராஜசேகர், கே.ராஜவேலு, கே.சி.கார்த்திக், பி.கே.செல்வராஜ், ஆர்.ஆர்.கிரானைட் ஆகியோர் இந்த கிராமங்களில் நடைபெற்ற சட்டவிரோத கிரானைட் கொள்ளையில் தொடர்புடையோரில் சிலர். • மதுரை மாவட்டத்தில் பி.ஆர்.பி நிறுவனத்தினர் 3865.382 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கி பதிவுசெய்துள்ளனர். இங்குள்ள பதிவாளர் அலுவலகங்களில் சுமார் 2807 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மிகப்பெரும் எண்ணிக்கையிலான ஏழை விவசாயிகள் நிலமற்றவர்களாக்கப்பட்டிருப்பதை சொல்ல வேண்டியதில்லை. • மேற்கண்ட அட்டவணையில் உள்ளதில் மிகப்பெரும்பகுதி நிலம் 906.40.5 ஹெக்டர் (2266 ஏக்கர்) நிலங்கள் பி.ஆர்.பி. கிரானைட் மற்றும் அதன் சார்பிலானவர்களுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது. அது தவிர தேனி மாவட்டத்தில் 868.09 ஏக்கர் நிலங்களை அவர்கள் வாங்கியுள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் வாங்கப்பட்டுள்ள நிலத்தின் அளவு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஏக்கர் இருக்கலாம். • தலித் மக்களுக்கு மட்டுமேயான பஞ்சமி நிலங்கள் சட்டவிரோதமாக வாங்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் குடியிருப்பே இடம் மாற்றப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள பஞ்சமி நிலங்களில் 4.3 சதவீதம் மட்டுமே இப்போது தலித்துகளிடம் உள்ளன. 8. இணைய வழி வர்த்தகம் சில்லரை வர்த்தகத்திற்கு சவக்குழி சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது மோடி தலைமையிலான பாஜக அரசு. ஆனால் அதிகாரத்திற்கு வந்த பின்னர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு வாய்க்கரிசி போட்டிருக்கிறது. மாறாக சில்லரை வர்த்தகத்தில் நூறு சதவிகித நேரடி அந்நிய முதலீட்டிற்குக் குறுக்கு வழியில் அனுமதி வழங்கியிருக்கிறது. இணைய வழியில் இந்திய சில்லைரை வணிகத்தை சமாதிகட்ட மோடி அரசின் முதல் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் மாதம் தோறும் 50 லட்சம் புதிய இணைய பயன்பாட்டாளர்கள் என இணையவழி வர்த்தகம், உலகத்தை இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. மனித சமூகத்தின் ஒரு சிறு பகுதிக்கு பயனையும், மறுபுறம் பெரும் பகுதிக்கு அழிவையும் தரும் ஏகபோக நிலையை நோக்கி நகரும் ஏற்பாடு மட்டுமே மிகவும் ஆபத்தானது. அதுதான் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்திய சூழலைப் பொறுத்தளவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பைத் தரக்கூடிய ஒரே தொழில் சில்லரை வர்த்தகம். வெள்ளம் வருவது தெரிந்தே, சுழலை நோக்கி நம்மை `உந்தித் தள்ளுகிறது’ மோடி அரசு. எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இதற்கு உறுதுணையாய் இருக்கின்றன திமுக, அதிமுக கட்சிகள். உந்தித் தள்ளுபவர்களை உதைத்துத் தள்ளி, எதிர்நீச்சல் போட்டுத் திரும்புகிறோமா? அல்லது சுழலில் சிக்கி மடியப் போகிறோமா. 9. அன்புமணி தடுப்பூசி ஏமாற்றம் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு சில கேள்விகள் பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதன் மூலம் லட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் உயிர் காக்கும் தடுப்பூசிகள் கிடைக்காது என்று தெரிந்தும் ஏன் இந்த நிறுவனங்களை மூடத்துணிந்தீர்கள் ? நீங்கள் பொதுத்துறை நிறுவனங்களை மூடியபின் தடுப்பூசிகளை பல்வேறு தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலையில் வாங்க வழிவகுத்தீர்களே; இதில் உங்களுக்கு என்ன லாபம்? எவ்வளவு லாபம்? இப்போதாவது சொல்வீர்களா? டாக்டர். அன்புமணி அவர்களே! Green Signal Bio Pharma வின் சுந்தர பரிபூரணத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? அவர் பெயரில் ஒரு தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை நிறுவுவதற்காகவே மக்களுக்கு எதிராக குழந்தைகளின் உயிரை அடகு வைத்து நிறுவனங்களை மூடும் முடிவை எடுத்துள்ளீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் ? டாக்டர். இலங்கேஸ்வரன் அவர்களை பாஸ்ட்டர் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்து Green Signal Bio Pharmaவோடு கூட்டுத்துறையில் ஒரு தடுப்பூசி நிறுவனத்தை ஆரம்பிக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்ற கூற்றுக்கு உங்கள் விளக்கம் என்ன? வெளிப்படைத் தன்மையின்றி உண்மையின்றி இந்தியாவின் இறையாண்மையை அடகு வைத்து செயல்பட்ட நீங்கள் போட்ட கையெழுத்தே சந்தி சிரித்துக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டில் எந்த முதல் கையெழுத்தை போட வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? 10. வழிப்பறி சுங்கச் சாவடிகளும் தடுக்க வக்கற்ற அரசுகளும். 1995 க்கு முன்னர் வரை மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ்தான் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இயங்கி வந்தது. அதன் பின்னர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் உலக வங்கியின் உத்தரவுப் படி `எல்லாம் தனியார் மயம்‘ என்ற கோட்பாட்டின் கீழ் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக பிரிக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. 1999ல் மத்தியில் பாஜகவின் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது இந்த தங்க நாற்கர சாலைத் திட்டம் துவங்கப்பட்டது. சாலை விரிவாக்கத்தின்படி வரவேற்க வேண்டிய திட்டம்தான். ஆனால் மக்களிடம் 24 மணி நேரமும் இடைவிடாமல் வழிப்பறி செய்யும் நடைமுறையும் அனைத்துப் பகுதிகளிலும் அப்போதுதான் துவங்கியது. தொன்று தொட்டு புழங்கி வந்த மண்ணில் இருந்து சம்பந்தப்பட்ட மக்களை அந்நியப்படுத்தியிருக்கிறது. அவர்கள் அந்த சாலையை பயன்படுத்தக்கூட கட்டாயப்படுத்திக் கட்டணம் வசூலிக்கிறது. இந்த கொடுமை வேறெங்கும் உண்டோ ? நாடு முழுவதும் உள்ள 386 சுங்கச் சாவடிகளில் 75 விழுக்காடு தனியாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை மேம்பாடு, பராமரிப்பு, கட்டண வசூலிப்பு என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்கிறது. அதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகின்றன. ஆனால் இந்த ஒப்பந்தப்படிதான் தனியார் நிறுவனங்கள் செயல்படுகிறதா? போட்ட முதலீட்டை லாபத்துடன் எடுப்பதற்கான காலக்கெடு என்ன? எப்போது நாட்டிற்கு அந்த சாலைகள் அர்ப்பணிக்கப்படும் என்ற எந்த வரைமுறையும் இல்லை. நெடுஞ்சாலைகளில் உள்ள அரசு சுங்கங்களில் 1 கி.மீ தொலைவிற்கு சுங்கம் ரூ 1.40 என்றால், தனியார் நிறுவனம் அதே ஒரு கி.மீ தொலைவிற்கு ரூ.3 வசூலிக்கின்றனர். இது எப்படி மாறுபடுகிறது. சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஒரு சாலையில் ஆண்டிற்கு 1 லட்சம் வாகனங்களுக்கு மேல் சென்றால். அந்த சாலையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை குறைத்து வசூலிக்க வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால் அனைத்து தனியார் சுங்கச் சாவடிகளும் போதிய வாகனங்கள் வருவதில்லை என பொய்க்கணக்குகளை அமைச்சர், உயர் அதிகாரிகள் துணையுடன் சமர்ப்பிக்கின்றனர். இதனைக் கண்காணிக்க எந்த ஏற்பாடும் இல்லை. 2007ம் ஆண்டிற்கு முன்பு வரை சாலை அமைத்த கட்டணம் வசூலிக்க எல்லா வரவு செலவுகளையும் கணக்கீட்டு 6 ஆண்டுகள் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று இருந்தது, ஆனால் 2007ல் ஒரு சட்டத்தின் மூலம் 6 ஆண்டுகள் வசூலிக்கலாம் என்று இருந்ததை 25 ஆண்டுகள் என்று திருத்தி அமைக்கப்பட்டது. இது எந்த அடிப்படையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டது என்பது இன்று வரை பரமரகசியமாகவே இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருந்து வருகிறது. இந்நிலையில் வாகனங்கள் குறைவாக இருப்பதால் போதிய வருமானம் இல்லை என்று தனியார் கார்ப்பரேட்கள் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமல்ல – இது போன்ற தனியார் நிறுவனங்களின் தில்லாலங்கடி மோசடிகள் அவ்வப்போது அம்பலமாகி வருகிறது என்பதுதானே உண்மை. சிறிய வாகனத்திற்கு ரூ.35ம், நடுத்தர சரக்கு வாகனத்திற்கு ரூ.70ம் பேருந்து லாரி போன்றவற்றிற்கு ரூ.110ம், கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்கு ரூ.210ம் வசூலிக்கப்படுகிறது. நாம் தோராயமாக ஒரு வாகனத்திற்கு ரூ.70 என கணக்கிட்டால் 90,000 * 70 = 63,00,000 ஒரு நாள் வசூல் 63,00,000 * 30 = 18,90,00,000 ஒரு மாத வசூல் 18,90,00,000 * 12 = 226,80,00,000 ஒரு வருட வசூல் 22680,00,000 * 10 = 226800,00,000 பத்து வருட வசூல் வெறும் 80 கோடியை முதலீடு செய்துவிட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்த பணத்தை கணக்கிட்டாலே 2268 கோடிகள். ஒரு டோலில் இவ்வளவு கோடி என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது?
ரூ.60/-
No Comments