புவியியலை புரிந்து கொள்வோம்

August 27, 2016

கேத்தரின்

“பள்ளிக் கல்வியில் பல சுவையான இயல்கள் வேப்பங்காயாக மாறிவிடுகிறது.புவியியலும் அப்படிதான்.நமது இயல்பு வாழ்க்கையோடு பொருந்திய செய்திகள்தான் என்றாலும் பள்ளிப் பாடத்தில் இவை விளக்கும் விதம் மாணவரை விலகச் செய்துவிடுகிறது.புவியியல் செய்திகளை வெகு அழகாக,நேர்த்தியாக,எளிமையாக எல்லோரும் ருசிக்கும் விதமாக கேத்தரின் இந்நூலில் விளக்கி இருக்கிறார்.அழகு தமிழிலே ஆழமான செய்திகளை விளக்கும் திறமை இந்த நூலில் புலப்படுகிறது.அறிவியல் தமிழ் உலகம் பெற்றுள்ள புதுவரவு-கேத்தரின்.தமிழகத்தை குலுக்கிய சுனாமியில் துவங்கி புவியின் உள் அமைப்பை விளக்கி,சூரிய குடும்பத்தில் புவியின் இருப்பிடத்தை சுட்டி,புவியின் மீது கற்பனையாக தீட்டப்படும் அட்சரேகை,தீர்க்க ரேகையைக் கூறி புவியின் இடம்தோறும் காலம் வேறுபடும் என்பதை விளக்கியுள்ளார் கேத்தரின்.மேலும் காற்று,புயல்,மின்னல்,இடி போன்ற இயற்கை நிகழ்வுகளையும்,மண்,கனிவளம் முதலிய புவியியல் வளங்களையும் கூறியுள்ளார் இவர். “”பூமிக்குள் வெப்பம் மற்றும் அழுத்தம் அதிகரிக்கும்போது மாக்மா ஏதாவது ஒரு வழியில் வெளிவர முயல்கிறது. (நமது வீட்டு பிரஷர் குக்கர் மாதிரி)இதுவே எரிமலையாகிறது””என கேத்தரின் விளக்குவது அருமை.எளிமை நடைமுறை,இயல்பு வாழ்க்கை உவமைகள் வழியாக அறிவியலை விளக்குவது என்பது அறிவியல் பரப்புதலின் கோட்பாடு-அழகியல்.இந்த அழகியல் அருமையாக கேத்தரின் இந்த நூலில் எங்கும் காணக் கிடைக்கிறது.எனவேதான் இந்த நூலைப் படிக்கத் துவங்கினால் தொய்வு இன்றி வாசிக்க முடிகிறது. ‘வளம்’என்பதை பலரும் அரசியல் பார்வையில் பார்ப்பதில்லை.கேத்தரின் அவர்கள் வளம் என்பது என்ன என்பதை கேள்வி கேட்டு இன்று இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு வளர்ச்சி இன்றைய தொழில் வளர்ச்சியை சரியாக சாடுகிறார்.வேலைவாய்ப்புதான் இந்தியா போன்ற நாடுகளில் அடிப்படை வளர்ச்சி என்பதைச் சுட்டிக்காட்டும் அவர்””நாம் பயணம் செய்யும் பாதையை மாற்றிட வேண்டும்””எனவும் கூறுவது மெச்சத்தக்கது.த.வி.வெங்கடேஸ்வரன்”

ரூ.30/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *