இன்னும் சில சிந்தனைகள்

சுஜாதா தன் அன்றாட அனுபவங்களிலிருந்தும் வாசிப்பிலிருந்தும் சுஜாதா நம்மிடையே உருவாக்கும் மனப்பதிவுகள் சுவாரஸ்யம் நிறைந்தவை. புதிய கேள்விகளை எழுப்புபவை. தமிழ் வாழ்வின் அபத்தங்கள் சுஜாதாவின் இக்கட்டுரைகளில் தொடர்ந்து எதிர்கொள்ளப்படுகின்றன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த ஓராண்டில் சுஜாதா அம்பலம் இணைய இதழில் எழுதி இப்போது முதன் முறையாக நூல் வடிவம் பெறுகின்றன. ரூ.115/-

என் இலக்கிய நண்பர்கள்

ந. முருகேச பாண்டியன் படைப்பாளிகளின் தனிப்பட்ட ஆளுமைகள் குறித்த பதிவுகள் தமிழில் அரிதாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ந.முருகேச பாண்டியன் தன் இலக்கிய நண்பர்கள் குறித்த சுவாரஸ்யமான மனப்பதிவுகளை இந்நூலில் முன் வைக்கிறார். நகுலன், சுந்தர ராமசாமி, கலாப்ரியா, பிரபஞ்சன், வண்ணநிலவன், கோணங்கி, விக்கிரமாதித்யன் உள்ளிட்ட பதினைந்து படைப்பாளிகள் குறித்து எழுதப்பட்ட இக்கட்டுரைகள் அப்படைப்பாளிகளின் வாழ்வையும் எழுத்தையும் நெருங்கிச் செல்ல பெரிதும் துணைபுரிகின்றன. ரூ.70/-

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

சு. தியடோர் பாஸ்கரன் சு. தியடோர் பாஸ்கரனின் இந்நூல் நமது சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அபூர்வமான தகவல்களை சுயமான பார்வையுடன் முன் வைக்கிறது. இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. வனஉயிர்கள், தாவரங்களின்அழிவு தொடர்பாக தியடோர் பாஸ்கரன் முன்வைக்கும் எச்சரிக்கைகள் இயற்கையின் மீதான பேரன்பிலிருந்தும் இயற்கையின் நீதி, அறம் குறித்த தார்மீகக் கேள்விகளிலிருந்தும் பிறக்கின்றன. சுற்றுச் சூழல் பிரச்சினைகள் தொடர்பாகத் தமிழில் எழுதப்பட்ட அரிய ஆவணம் இது. ரூ.120/-

கண்ணீரைப் பின் தொடர்தல்

ஜெயமோகன் சென்ற அரைநூற்றாண்டாகத் தமிழில் இந்திய இலக்கியங்கள் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு அவற்றுக்கு மதிப்புரைகள் கூட வருவதில்லை. இந்நூலில் ஜெயமோகன் அவரது மனம் கவர்ந்த இருபத்திரண்டு நாவல்களை நுட்பமாகவும் விரிவாகவும் ஆராய்கிறார். வங்க நாவல்களான ஆரோக்கிய நிகேதனம் (தாராசங்கர் பானர்ஜி), பதேர்பாஞ்சாலி (விபூதிபூஷண் பந்த்யோபாத்யாயா), நீலகண்ட பறவையைத்தேடி (அதீன் பந்த்யோபாத்யாய), கன்னட நாவல்களான மண்ணும் மனிதரும் (சிவராம காரந்த்), ஒரு குடும்பம் சிதைகிறது (எஸ்.எல்.பைரப்பா), உருது நாவலான அக்னி நதி (குர் அதுல் ஐன் ஹைதர்), குஜராத்தி நாவலான வாழ்க்கை ஒரு நாடகம் (பன்னாலால் பட்டேல்) போன்றவற்றை உலகப் பேரிலக்கியங்கள் எதற்கும் நிகரானவை என ஒரு நல்ல வாசகன் சொல்வான்.இந்நூல்கள் பற்றிய ஆய்வுகள் வாசித்தவர்களுக்கு அவற்றின் நுட்பங்களைக் காட்டும், வாசிக்காதவர்களுக்கு அந்நூல்களின் சிறப்பை உணர்த்தும், நாவல்களை வாசிப்பது போன்றே உத்வேகத்துடன் வாசிக்கவைக்கும் மொழிநடை கொண்ட நூல் இது. ரூ.125/-

வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்

எஸ். வி. ராமகிருஷ்ணன் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய வாழ்க்கையின் அழுத்தமான காட்சிகளையும் யதார்த்தத்தையும் வெகுநேர்த்தியாகச் சித்தரிப்பவை எஸ்.வி.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். கடந்தகாலத்தின் மெல்லிய ஏக்கம் ததும்பும் நினைவுகளையும் கடந்து சென்ற ஒரு பண்பாட்டு வாழ்க்கையின் பதிவுகளையும் இக்கட்டுரைகள் ஒரு தலைமுறையின் கனவுச் சித்திரங்களாக நம் நெஞ்சில் எழச் செய்கின்றன. ‘அது அந்தக் காலம்’ தொகுப்பின் மூலம் பெரும் கவனம் பெற்ற எஸ்.வி.ராமகிருஷ்ணனின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு இது. ரூ.65/-

தமிழ் மண்ணின் சாமிகள்

மணா தமிழ் அடையாளங்கள் சிதையும் ஒரு காலகட்டத்தில் நமது சிறு தெய்வ வழிபாடுகள் குறித்த விரிவான பதிவுகளை முன் வைக்கிறது இந்நூல். உலகமயமாதலும் மதவாதமும் சிறு பிராந்தியப் பண்பாடுகளை வேகமாக அழித்துவரும் வேளையில் இந்நூல் தமிழ் மண்ணின் பன்முகப் பண்பாட்டு வேர்களைத் தேடிச் செல்கிறது. ரூ.50/-

ஊர்மணம்

மணா மரங்கள் தம் வேர்களால் நிலத்தைப் பற்றிக் கொண்டிருப்பது போல மனிதர்கள் தம் நினைவுகளால் ஊர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது வெறும் ஊர்ப்பெருமையல்ல. தான் ஒருபோதும் நீங்கிவரமுடியாத ஒரு அடையாளம். தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் குறித்த அம்மண்ணின் மைந்தர்கள்-பல்வேறு துறைசார்ந்த பிரபல ஆளுமைகள்-தங்கள் மனப்பதிவுகளை இந்நூலில் முன்வைக்கிறார்கள். ரூ.70/-

கலகம் காதல் இசை

சாரு நிவேதிதா உலக இசைப் பரப்பின் சில மகத்தான வடிவங்களையும் கலைஞர்களையும் பற்றி விவாதிக்கும் இந்நூல் மலையாளத்தில் மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவந்து பெரும் கவனத்தைப் பெற்றது. இவை இசையின் பரவசத்தையோ கலைஞர்களின் மகோன்னதத்தையோ பாடும் நூல் அல்ல. மாறாக அந்தந்தச் சமூக, பண்பாட்டு, அரசியல் வெளிகளில் இந்தக் கலைஞர்கள் ஏற்படுத்திய குறுக்கீட்டினையும் அதன் ஊடாக அந்தச் சமூகங்களின் உளவியல் மற்றும் அரசியல் பண்பாட்டினையும் முன்வைக்கிறது. ரூ.70/-

தமிழகத் தடங்கள்

மணா இந்தக் கட்டுரைத் தொகுதி மூலம், மணா, தமிழ்நாட்டின் சில பெரும் மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களின் சாதனை என்று சொல்லத்தகும், சமூகத்தை முன்நகர்த்திய அவர்களின் அர்ப்பணிப்பைச் சொல்லுகிறார். நம் நன்றி மறந்த சுபாவங்களைச் சாடுகிறார். ஆனால் மிக மென்மையாக நம் கனவுகளை விஸ்தரிக்கிறார். நம் நல்ல சுபாவங்களை நீட்சி பெற வைத்திருக்கிறார். (பிரபஞ்சன்) ரூ.90/-

தப்புத் தாளங்கள்

சாரு நிவேதிதா உலக நாடுகளில் பரவலாக லத்தீன் அமெரிக்க இலக்கியமே பெரிதும் அறியப்பட்டதாக இருந்து வருகிறது. ஆனால் அதைவிடவும் காத்திரமான இலக்கியம் அரபி மொழியிலிருந்துதான் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன் மகத்தான படைப்புகளையும் படைப்பாளிகளையும் பற்றிய அறிமுகங்களை இந்நூலின் பல கட்டுரைகள் முன்வைக்கின்றன. இஸ்லாமியக் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய ஆன்மீகம் இவற்றின் விழுமியங்களை நாம் அறிந்துகொள்ளத் தடையாக இருப்பது எது என்பது பற்றிய விவாதத்தை இந்த நூல் ஆரம்பித்து வைத்தால் அதுவே இக்கட்டுரைகள் எழுதப்பட்டதற்கான நியாயத்தை நிறைவு செய்யும். ரூ.135/-