வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது… இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டுடெடுத்த எழுத்துக்களும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துக்களும் ஒன்றுபோல இருப்பது ஏன்? இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன? தென்கோடி தமிழ் நாட்டில் இருந்து மெசபடோமியா – கிரேக்கம் என நடந்த வர்த்தகம் என்ன சேதியைச் சொல்கிறது?… நினைவிலே தமிழ் உள்ள மிருகமாக நாம் இருக்கிறோம். ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் அதைத்தான் பேசுகிறது. ரூ.150

வெள்ளாவி

விமல் குழந்தைவேல் நீண்ட நெடுந்தொலைவு போய் புலம்பெயரியாய் ஐக்கிய இராச்சியத்தில் வதியும் விமலின் ஆன்மா இரவுக்காட்சி படம் பார்த்துவிட்டு சாறனை தூக்கிக் கட்டியபடியும் கோவில் சுவர்களில் குந்தியிருந்து ஊர்ப்புதினங்களைப் பேசியும், எழுவட்டுவான் மைதானத்தில் உதைபந்து விளையாட்டுக்குப் பிறகான மிகுமாலை அமைதியில் இஞ்சிப் பிளோன்டியொன்றின் உசாரில் காலை நீட்டி உட்கார்ந்து வியர்வை காய்ந்து பனிபெய்து நனைக்கும் வரைக்கும் பகிடி பேசிச் சிரித்தாயும், கோளாவில் மணல் தெருக்களில் சைக்கிளையும், துயரம் நொறுக்கும் வாழ்வையும் தள்ளியபடியும் இழந்த வாழ்வின் சாரங்களை இன்றும் சுவைத்துக் கொண்டிருக்கின்றது. இறந்த வாழ்வின் மகோன்னதத் தருணங்களை, திரும்பவொருத்தரம் நமக்கு வாய்க்க வைத்திருக்கிறார் விமல். ரூ.125/-

பாபுஜியின் மரணம்

நிஜந்தன் மனிதனின் சமூக,உளவியல் தெளிவையும், தெளிவின்மையையும் ஒரு வளைகோட்டில் காட்டுகிறது இந்த நாவல். கோட்டின் ஏற்ற இறக்கங்கள் பாத்திரங்களின் நிறங்களை மாற்றிக் காட்டுகின்றன. எப்போதும் நிறம் இழக்கும் சமூகத்தை எதிர்கொள்ளும் நிறமற்ற மனிதனின் சிக்கல்களை இந்த நாவல் சாத்தியப்படுத்துகிறது. சொற்கள் ஆக்கப்படாத மனப் புதைவுகளை வாழ்வின் முடிவில் வெளிப்படுத்தும் மனிதப் போக்கை பதிவு செய்கிறது இந்த நாவல். ரூ.120/-

பெண் இயந்திரம்

சுஜாதா நவீனயுகப் பெண்களை, அவர்களின் துயரங்களை, சவால்களை, துல்லியமாகச் சித்தரித்த படைப்பாளிகளில் சுஜாதாவின் இடம் முக்கியமானது. அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் நாடகங்களிலும் – இந்த பாத்திரங்கள் பெண்ணின் புதிய அடையாளத்தை, சக்தியை தீர்க்கமாக வெளிப்படுத்துவதைக் காணலாம். பெண்களின் மீது படியும் வேதனைகளையும் குற்ற நிழல்களையும் அவர் மிகுந்த பரிவுடனும் மிகையின்றியும் சித்தரிப்பதற்கு மற்றொரு உதாரணம் பெண் இயந்திரம். சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு புதிய பதிப்பாக இந்த நாவல் வெளிவரும் சந்தர்ப்பத்தில் நம் காலத்தின் மகத்தான கலைஞனின் வெற்றிடம் நம்மை அழுத்துகிறது. ரூ.90/-

பதவிக்காக

சுஜாதா இந்திய ஜனநாயகம் என்பது எவ்வளவு குரூரமான போலி நாடகம் என்பதைக் கடந்தகால, நிகழ்கால சரித்திரம் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சுஜாதாவின் இந்த நாவல் குற்றமும் துரோகமும் எவ்வாறு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறுகின்றன என்பதை விறுவிறுப்புடன் சித்தரிக்கிறது. அரசியல் சூதாட்டம் பற்றித் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த நாவல் இது. ரூ.300/-

நிலா நிழல்

சுஜாதா குடும்பம், கிரிக்கெட்,கல்வி, காதல், நண்பர்கள் என்று வெவ்வேறு நிலைகளில் பயணிக்கும் முகுந்தனைக் கொண்டு செலுத்தும் ஆதார உணர்ச்சி எது? சுஜாதாவின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றான நிலா நிழல், குழந்தைப் பருவத்தை இழந்து இளமையை அடையும் காலத்தின் வேட்கையையும் கனவையும் கவித்துவத்துடன் வரைந்து செல்கிறது. ரூ.115/-

எப்போதும் பெண்

சுஜாதா இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின் பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன், பக்தியும் தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள். ரூ.140/-

சுவை, மணம், நிறம்

  உறவுகளும் மூர்க்கப் பிறழ்வுகளும் மனங்களும் அவற்றின் மாயைகளும் நிதர்சனம் போன்ற போக்கில் வாழும் மனிதர்களைப் பற்றியது இந்தக் கதை. விழுந்தால் எழலாம், எழுந்தால் விழலாம் போன்ற ஒரு விளையாட்டின் விதிகளைத் தன்னிடம் கொண்ட மனித மனங்களை மீண்டும் இந்தக் கதை பதிவு செய்கிறது. மதிப்பீடுகள் குலைந்து போன ஒரு சமூகத்தை இந்தக் கதை பிரதிபலிக்க முயல்கிறது. பிரக்ஞையின் அரசியலை முன்னிறுத்துகிறது இந்தக் கதை. ரூ.150/-

கானல் வரி

தமிழ் நதி தன் வாழ்வனுபவத்தின் ஊடாகக் காதல் என்கிற பிணைப்பு பற்றிய பல புரிதல்களோடும், கருத்துகளோடும், தன்நண்பர்களின் அனுபவப் பகிர்தல்கள் ஏற்படுத்திய சிந்தனைகளோடும் – ஊடகங்கள், இலக்கியப் பதிவுகள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கங்களோடும் – இவை அனைத்தின் கூட்டுணர்வுகள் ஏற்படுத்திய தளத்தில் நின்று நிகழ்காலம், நிகழ் உலகக் காதல், காதல் கொண்ட மனிதர்கள், காதலின் பகைப்புலன்கள் பற்றிய தன் சிந்தனைகளைக் கதையாகப் படைத்திருக்கிறார் தமிழ்நதி. அதனாலேயே பல பரிமாணங்களில் இக்கதையின் வாசிப்புத் தளமும் வெளியும் விரிவடைகிறது. அதுவே இந்த நாவலை அடர்த்தி பெறவும் வைத்திருக்கிறது. பிரபஞ்சன் முன்னுரையிலிருந்து. ரூ.50/-

யாமம்

எஸ். ராமகிருஷ்ணன் எண்ணற்ற உள்மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புதத்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையினை எழுதுகிறது. கீழைத்தேய மரபின் வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்நாவல் எதார்த்தம், புனைவு என்ற எல்லைகளைக் கடந்து கவித்துவத்தின் அதீத மன எழுச்சியை உருவாக்குவதுடன் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையேயும் பெருகும் வாழ்வின் பரவசங்களையும் மகத்துவங்களையும் விவரிக்கிறது. ரூ.320/-