காந்தியோடு பேசுவேன்

எஸ். ராமகிருஷ்ணன் எஸ். ராமகிருஷ்ணனின் பதிமூன்றாவது சிறுகதைத் தொகுதி. இந்த தொகுப்பின் விஷேசம் மகாத்மா காந்தி, டால்ஸ்டாய் என மகத்தான ஆளுமைகளின் வாழ்க்கையை தனது கதைகளின் பின்புலமாக்கியிருக்கிறார். ஆங்கிலோ இந்தியப் பெண், உலகத்திரைப்படவிழா, இசைதட்டின் முள்ளாக மாறிய ஒரு மனிதனின் வாழ்க்கை என மாறுபட்ட கதைக்களன்களுடன் புதிய கதை சொல்லும் முறையில் இக்கதைகள் புனைவின் முடிவற்ற சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுகின்றன. புதிய உரையாடல்களை சிந்தனையின் ஆழத்தில் துவக்கி வைக்கின்றன. ரூ.120/-

மழைமான்

எஸ். ராமகிருஷ்ணன் மொழியிலும் கதை சொல்லும் முறையிலும் தனக்கென தனித்துவமான ஒரு எழுத்து முறையை உருவாக்கிக்கொண்ட அரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு இது. இக்கதைகள் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது என்பதை அடையாளம் காட்டுகின்றன. நாம் வீழ்ச்சியின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அறம் அழிவது அன்றாட செயல்பாடாகி வருகிறது. இந்த அவலத்தையே எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் சுட்டிக்காட்டுகின்றன. கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ள இக்கதைகள் தமிழ் சிறுகதை உலகம் இதற்கு முன் அறியாத சாதனையாகும். ரூ.110/-

புத்தனாவது சுலபம்

எஸ். ராமகிருஷ்ணன் மனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையும் வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள். மனித மனிதன் சொல்லித் தீராத விசித்திரங்களிலிருந்து பிறக்கும் அபத்த நிலைகளின் வழியே ஹபுறக்கணிப்பின் தனிமையின், அவமதிப்பின் எல்லையற்ற கனத்த இருளின் வழியே இக்கதைகளின் பாத்திரங்கள் நடந்து செல்கின்றன. அவை சிதறுண்ட குடும்பங்களின், உடைந்துபோன மனங்களின் வழியே தமது சொற்களை உருவாக்கிக் கொள்கின்றன. புருனோ துவங்கி அஷ்ரப் வரை இந்தக் கதைகளில் வரும் மனிதர்களை தமிழ் சிறுகதையுலகம் முன் கண்டறிந்ததேயில்லை. தனித்துவமிக்க கதைமொழி, நுட்பமான கதையாடல், வாழ்வின் பேருண்மைகளைச் சுட்டிக்காட்டிச் செல்லும் உரையாடல்கள் என்று இக்கதைகள் சமகால தமிழ் சிறுகதை உலகிற்குப் புதிய திசையை அறிமுகம் செய்து வைக்கின்றன ரூ.150/-

நீரிலும் நடக்கலாம்

எஸ். ராமகிருஷ்ணன் இந்தச் சிறுகதைகள் மௌனத்தில் உறைந்துபோன மனிதர்களின் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுகின்றன. ஒரு கதையில் ஆன்டன் செகாவ் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவர் சந்திக்கும் மனிதன் வழியே செகாவ் கொள்ளும் அனுபவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தமிழ் இலக்கியத்தில் செகாவை ஒரு கதாபாத்திரமாக வைத்து எழுதப்பட்ட முதற்கதை இதுவே. குறுங்கதை, நீள்கதை, தனிமொழி, உரையாடல் மட்டுமே கொண்ட கதை, மிகைபுனைவு, மறுகதை, விந்தை என எத்தனையோ மாறுபட்ட கதைகூறும் முறைகளில் புனைவின் முடிவில்லாத சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நவீன தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பை முற்றிலும் புதியதொரு புனைவுத்தளத்திற்குக் கொண்டு சென்றிருப்பதே இத்தொகுப்பின் தனிச்சிறப்பு. ரூ.130/-  

யாமம்

எஸ். ராமகிருஷ்ணன் எண்ணற்ற உள்மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புதத்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையினை எழுதுகிறது. கீழைத்தேய மரபின் வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்நாவல் எதார்த்தம், புனைவு என்ற எல்லைகளைக் கடந்து கவித்துவத்தின் அதீத மன எழுச்சியை உருவாக்குவதுடன் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையேயும் பெருகும் வாழ்வின் பரவசங்களையும் மகத்துவங்களையும் விவரிக்கிறது. ரூ.320/-

உறுபசி

எஸ். ராமகிருஷ்ணன் நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது. ரூ.110/-

நெடுங்குருதி

எஸ். ராமகிருஷ்ணன் வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு. தலைமுறைகளாக இக்கனவைக் கடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங்களும் நிலைகொள்ள முடியாத தத்தளிப்புகளும் ஆசாபாசங்களின் இருளும் வெளிச்சமும் இந்நாவலில் முடிவற்ற குருதிப் பெருக்காகின்றன. பொருளற்ற வாழ்வும் மரணமும் தங்கள் வசியக் குரலால் வேம்பலையை நோக்கி மனிதர்களை அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு பிரமாண்டமான கனவின் திரைமீது அறியப்படாத யதார்த்தம் ஒன்றை எழுதுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இந்நாவல். வாசகர்களின் பெரும் கவனத்திற்கும் தீவிர வாசிப்பிற்கும் உரியதாக இருந்த நெடுங்குருதி இப்போது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. ரூ.410/-

துயில்

எஸ். ராமகிருஷ்ணன் வாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள்தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன. இத்தரிசனத்தை ஒரு புனைவாக, கலையாக மாற்றுவதில் பெரும் வெற்றியடைந்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இப்புதிய நாவல். நம்மைக் காலகாலமாகத் தொடர்ந்துவரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறதவரை பிணியின் துயரினை ஒருபோதும் நம்மால் கடக்கவே முடியாது என்ற மகத்தான உண்மையை துயில் ஆழமாக நிறுவுகிறது. வெவ்வேறு காலங்களில் நிகழும் இந்நாவலில் அத்தியாயங்களுக்கு இடையே மனித வாழ்வு அடையும் கோலங்கள் ஏற்படுத்தும் துயரமும் பரவசமும் எல்லையற்றவை. மனித உடலை இந்திய மரபும் மேற்கத்திய மரபும் ஏற்கும் விதத்தில் அகவயமான, புறவயமான இரண்டுபாதைகள் இருப்பதை அடையாளம் காணும் எஸ்.ராமகிருஷ்ணன் அவற்றின் சாராம்சமான வாழ்வியல் நோக்கின் மையத்திற்கே நெருங்கிச் செல்கிறார். இந்த அளவிற்கு காட்சி பூர்வமான, தத்துவார்த்தத்தின் கவித்துவம் செறிந்த பிரிதொரு நாவல் தமிழில் எழுதப்பட்டதில்லை. ரூ.460/-