துயில்

எஸ். ராமகிருஷ்ணன் வாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள்தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன. இத்தரிசனத்தை ஒரு புனைவாக, கலையாக மாற்றுவதில் பெரும் வெற்றியடைந்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இப்புதிய நாவல். நம்மைக் காலகாலமாகத் தொடர்ந்துவரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறதவரை பிணியின் துயரினை ஒருபோதும் நம்மால் கடக்கவே முடியாது என்ற மகத்தான உண்மையை துயில் ஆழமாக நிறுவுகிறது. வெவ்வேறு காலங்களில் நிகழும் இந்நாவலில் அத்தியாயங்களுக்கு இடையே மனித வாழ்வு அடையும் கோலங்கள் ஏற்படுத்தும் துயரமும் பரவசமும் எல்லையற்றவை. மனித உடலை இந்திய மரபும் மேற்கத்திய மரபும் ஏற்கும் விதத்தில் அகவயமான, புறவயமான இரண்டுபாதைகள் இருப்பதை அடையாளம் காணும் எஸ்.ராமகிருஷ்ணன் அவற்றின் சாராம்சமான வாழ்வியல் நோக்கின் மையத்திற்கே நெருங்கிச் செல்கிறார். இந்த அளவிற்கு காட்சி பூர்வமான, தத்துவார்த்தத்தின் கவித்துவம் செறிந்த பிரிதொரு நாவல் தமிழில் எழுதப்பட்டதில்லை. ரூ.460/-

சஞ்சாரம்

எஸ். ராமகிருஷ்ணன் கலைகள் என்பது எப்போதும் உன்னதங்களின் மீது கட்டப்படும் மகத்தான அனுபவங்கள் அல்ல. கலைகள் தரும் மன எழுச்சிக்குப்பின்னே அதைப் படைப்பவர்களின் இருண்ட நிழல்கள் அசைந்துகொண்டிருக்கின்றன. இந்த நாவல் வறுமைக்கும் அவமானங்களுக்கும் வீழ்ச்சிக்கும் நடுவே கலையின் மாபெரும் வெளிச்சத்தை ஏந்தி நடந்த மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. கரிசல் பூமியின் சங்கீதம் என்பது ஓசைகளால் ஆனதல்ல, அது வாசனைகளால் நிரம்பியது என்பதுதான் இந்த நாவலின் மையப் படிமம். அது ஆற்ற முடியாத மனித துயரத்தின் வாசனை. மனித மனதின் பிரகாசமான தருணங்களின் வாசனை. எந்த ஒரு அகங்காரத்தையும் அதிகாரத்தையும் மனம் உடையச் செய்து கரையவைக்கும் வாசனை. அந்த வாசனையின் வழியே இந்த நாவல் தமிழ்வாழ்க்கையின் இதுவரை சொல்லப்படாத கதைகளைச் சொல்கிறது. சாதிய சமூகத்தின் வெறுப்புக்கும் கீழ்மைகளுக்கும் நடுவே தமிழ்ச் சமூகத்தின் கலைகளின் மீது படிந்த புழுதிகளையும் வெளிச்சங்களையும் இந்த நாவலில் எழுதிச்செல்லும் எஸ்.ராமகிருஷ்ணன் எந்த ஒரு அவலமும் மனிதனின் கலை சார்ந்த கனவுகளை அழித்துவிடமுடியாது என்பதை ஒரு பிரமாண்டமான சித்திரமாக உருவாக்கிக் காட்டுகிறார். ரூ.375/-  

ஆண்பால் பெண்பால்

எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண் – பெண் பாகுபாடு போல இல்லை, மனிதர்களில் உள்ள பால் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துகள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி, எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு கையெழுத்து, குரல், சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம். ஆண்பால் பெண்பால் நாவல் அந்த அற்புத முரண்பாட்டை படைப்பிலக்கியத்தின் வழியே அறிவியல் பூர்வமாகவும் உணர்த்துகிறது.

தாரகை

தமிழ் அரசியலில் சூழலில் சினிமா ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. நடிகர்கள் இல்லாமல் கடந்த அரை நூற்றாண்டாக தமிழக அரசியல் இல்லை. ஓரிரு படங்கள் ஓடிவிட்டாலே நடிகர்கள் தங்களை தமிழகத்தை ஆளும் தகுதி வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். தாரகை நாவலில் நாயகி தீபிகாவும் தமிழக அரசியல் கட்சி ஒன்றின் தலைவி ஆகிறாள். யாருமற்ற அனாதையாக தமிழ் சினிமா உலகில் அடி எடுத்துவைத்து, பாதையில் பயணத்து, அவள் அடையும் இடம்… வெற்றிடமா? வெற்றி மகுடமா? ரூ. 165/-

வெட்டுப்புலி அல்ல – வெட்டும் புலி

 விமர்சனம்: எழுத்தாளர் இமையம் சின்னா ரெட்டி என்பவர் தனியாளாக சிறுத்தையை வெட்டி வீழ்த்தியதையும், அச்சம்பவம் எப்படி ஒரு தீப்பெட்டியின் அட்டைப்படமாக மாறியது என்பதையும் அறிந்து கொள்வதற்காக தமிழ்ச் செல்வனும், அவனுடைய நண்பர்கள் பிரபாஷும், பிரானான்டசும் போகிறார்கள். சின்னா ரெட்டி தமிழ்ச்செல்வனின் தாத்தாவினுடைய பெரியப்பா, சிறுத்தையை வெட்டிய கதையை ஆராயப்போனவர்களுக்கு தமிழ்ச்சமூகத்தின் ஒரு நூற்றாண்டுகால வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் பல்வேறு மனிதர்களால். அதுவும் நினைவோட்டமாக. சிறுத்தையை வெட்டிய சின்னா ரெட்டி, அவருடைய குடும்பம், உடன் பிறந்தவர்கள், அவர்களுடைய வாரிசுகள், அவர்களுக்கடுத்த வாரிசுகள் என்று வளர்ந்து நான்காவது தலைமுறையைச் சார்ந்த தமிழ்ச்செல்வனின் வழியாக–அவனுடைய பயணத்தின் வழியே நாவல் வளர்கிறது. நான்கு தலைமுறையை சார்ந்த மனிதர்கள் நாவலுக்குள் வருகிறார்கள். தமிழ்ச்செல்வன் தன் பயணத்தை தொடங்குகிறான். அது ஒருமாதகாலம்தான். ஆனால் நாவல் 1910-2009 வரையிலான கால மாற்றங்களையும், அடையாள மாற்றங்களையும் விவரிக்கிறது. நாவலின் பாத்திரங்களாக சின்னா ரெட்டி, தசரத ரெட்டி, பொன்னுசாமி ரெட்டி, லட்சுமண ரெட்டி, ஆறுமுக முதலி, முத்தம்மா, மங்கம்மா, நாகம்மா, கண்ணம்மா, விசாலாட்சி, நடேசன், புனிதா, குணவதி, தியாகராசன், சிவகுரு, ஹேமலதா, கிருஷ்ணபிரியா, நடராஜன், கணேசன், ஜேம்ஸ் என்று பலர் இருந்தாலும் இவர்கள் நாவலின் முக்கியமான பாத்திரங்கள் அல்ல. தமிழ்ச்சமூகத்தின் ஒரு நூற்றாண்டுகால வாழ்வை அறிந்துகொள்வதற்கு இவர்கள் வழிகாட்டிகளாக, கருவிகளாக மட்டுமே இருக்கிறார்கள். நாவலின் முக்கிய பாத்திரங்களாக இருப்பது சமூகத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள், பொருளாதார வளர்ச்சிகள், சினிமா, தொழில் வளர்ச்சிகள்தான். வறுமை, சாதிய கொடுமைகள், உழைப்பு, சுரண்டல்கள், கிராமங்கள் நகரமாவது, பிரிட்டிஷ் அரசு வெளியேறுவது, இந்தியா சுதந்திரமடைவது, பிரிட்டிஸ் ஆட்சியாளர்களை வெளியேற்ற முனைகிற அதே அளவுக்கு அவர்களுடைய பழக்க வழக்கங்களை, மொழியை தங்களுடையதாக மாற்றிக்கொள்ள துடிக்கிற துடிப்பு முக்கியமானது. கிராமங்கள் நீர்த்தேக்கங்களாக மாறுவது, பம்புசெட் வருவது, மின்சாரம் வருவது, தார்சாலை, சினிமா, பத்திரிகை, வருதல், காண்டராக்டர்கள் எம்.எல்.ஏ ஆவது. புதுபுது ஊழல்கள்,சிகரட் குடித்தல், டீகுடித்தல், ரயில், பஸ், லாரி வருதல், பிரமாண்டமான கட்டிடங்கள், ஜவுளிக்கடைகள், ஊசிபோடுவது,…

மானுடப் பண்ணை

தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பாகத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சினைகள் கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன. தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லடக்கணக்கான இளைஞர்களின் ‘சோக’ வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால். தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளன்குகிறது. ரூ.160/- உயிர்மை பதிப்பகம்