விமர்சனம்: எழுத்தாளர் இமையம்
சின்னா ரெட்டி என்பவர் தனியாளாக சிறுத்தையை வெட்டி வீழ்த்தியதையும், அச்சம்பவம் எப்படி ஒரு தீப்பெட்டியின் அட்டைப்படமாக மாறியது என்பதையும் அறிந்து கொள்வதற்காக தமிழ்ச் செல்வனும், அவனுடைய நண்பர்கள் பிரபாஷும், பிரானான்டசும் போகிறார்கள். சின்னா ரெட்டி தமிழ்ச்செல்வனின் தாத்தாவினுடைய பெரியப்பா, சிறுத்தையை வெட்டிய கதையை ஆராயப்போனவர்களுக்கு தமிழ்ச்சமூகத்தின் ஒரு நூற்றாண்டுகால வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் பல்வேறு மனிதர்களால். அதுவும் நினைவோட்டமாக.
சிறுத்தையை வெட்டிய சின்னா ரெட்டி, அவருடைய குடும்பம், உடன் பிறந்தவர்கள், அவர்களுடைய வாரிசுகள், அவர்களுக்கடுத்த வாரிசுகள் என்று வளர்ந்து நான்காவது தலைமுறையைச் சார்ந்த தமிழ்ச்செல்வனின் வழியாக–அவனுடைய பயணத்தின் வழியே நாவல் வளர்கிறது. நான்கு தலைமுறையை சார்ந்த மனிதர்கள் நாவலுக்குள் வருகிறார்கள். தமிழ்ச்செல்வன் தன் பயணத்தை தொடங்குகிறான். அது ஒருமாதகாலம்தான். ஆனால் நாவல் 1910-2009 வரையிலான கால மாற்றங்களையும், அடையாள மாற்றங்களையும் விவரிக்கிறது.
நாவலின் பாத்திரங்களாக சின்னா ரெட்டி, தசரத ரெட்டி, பொன்னுசாமி ரெட்டி, லட்சுமண ரெட்டி, ஆறுமுக முதலி, முத்தம்மா, மங்கம்மா, நாகம்மா, கண்ணம்மா, விசாலாட்சி, நடேசன், புனிதா, குணவதி, தியாகராசன், சிவகுரு, ஹேமலதா, கிருஷ்ணபிரியா, நடராஜன், கணேசன், ஜேம்ஸ் என்று பலர் இருந்தாலும் இவர்கள் நாவலின் முக்கியமான பாத்திரங்கள் அல்ல. தமிழ்ச்சமூகத்தின் ஒரு நூற்றாண்டுகால வாழ்வை அறிந்துகொள்வதற்கு இவர்கள் வழிகாட்டிகளாக, கருவிகளாக மட்டுமே இருக்கிறார்கள்.
நாவலின் முக்கிய பாத்திரங்களாக இருப்பது சமூகத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள், பொருளாதார வளர்ச்சிகள், சினிமா, தொழில் வளர்ச்சிகள்தான். வறுமை, சாதிய கொடுமைகள், உழைப்பு, சுரண்டல்கள், கிராமங்கள் நகரமாவது, பிரிட்டிஷ் அரசு வெளியேறுவது, இந்தியா சுதந்திரமடைவது, பிரிட்டிஸ் ஆட்சியாளர்களை வெளியேற்ற முனைகிற அதே அளவுக்கு அவர்களுடைய பழக்க வழக்கங்களை, மொழியை தங்களுடையதாக மாற்றிக்கொள்ள துடிக்கிற துடிப்பு முக்கியமானது. கிராமங்கள் நீர்த்தேக்கங்களாக மாறுவது, பம்புசெட் வருவது, மின்சாரம் வருவது, தார்சாலை, சினிமா, பத்திரிகை, வருதல், காண்டராக்டர்கள் எம்.எல்.ஏ ஆவது. புதுபுது ஊழல்கள்,சிகரட் குடித்தல், டீகுடித்தல், ரயில், பஸ், லாரி வருதல், பிரமாண்டமான கட்டிடங்கள், ஜவுளிக்கடைகள், ஊசிபோடுவது, உணவு பழக்கவழக்கம் மாறுதல், விவசாயத் தொழில் மாறுதல், உடையில் மாற்றம் என்று கலாச்சார பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் நாவலின் மையம். அரசியலில் ஜஸ்டீஸ் பார்ட்டி, நீதிக்கட்சி, காங்கிரஸ், திராவிடர் கழகம், தி.மு.க., அ.தி.மு.க., நீதிக்கட்சிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி, தி.மு.க., அதற்கடுத்து அ.தி.மு.க., ஆட்சிக்கு வருவது, ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று முதல் அமைச்சராவது, சினிமாத்துறையில் பாலசந்தர் வருவது, பாரதிராஜா, இளையராஜா வருவது, ரஜனிகாந்த் வருவது, தொலைக்காட்சி பெட்டி வருவது, சன் டி,வி, வருவது, ஈழத்தமிழ் பிரச்சினை என்று நாவலில் பல பாத்திரங்கள் இருக்கின்றன. உண்மையில் நாவலின் முக்கியமான பாத்திரங்கள் இவைதான். இவற்றையும் இவை தமிழ்ச்சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களையும் அறிவதற்கு சின்னா ரெட்டியின் வாரிசுகள் பயன்படுகிறார்கள்.
நாவலின் இணை பாத்திரங்களாக, நேரு, இந்திரா காந்தி, ராஜாஜி, கக்கன், சத்தியமூர்த்தி, பெரியார், அண்ணா, கலைஞர், நாகம்மை, மணியம்மை, வீரமணி, எம்.ஜி.ஆர்., பிரபாகரன், காமராஜர் ஜி.டி.நாயுடு, ஆதித்தனார் என்று பல பாத்திரங்கள் இருக்கின்றனர்.
திராவிடர் கழகத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி, தி.மு.கழகத்தின் வளர்ச்சி, சினிமா நாயகர்களின் அபரிமிதமான வளர்ச்சி, தமிழகத்தில் அரசியல் ரீதியாக நடந்த மாற்றங்கள், இந்திரா காந்தியின் மறைவு, எம்.ஜி.ஆரின் மறைவு, பிரபாகாரனின் மறைவுகளுக்குப் பிறகு தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், விளைவுகள் அனைத்தும் சம்பவங்களாக விவரிக்கப்படாமல் நாவலில் மையமான கதாபாத்திரங்களாக விவரிக்கப்பட்டுள்ளன. 1910 முதல் 2010 வரையில் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கிறது. இதனால் வெட்டப்புலி நாவலை வரலாற்று நாவல் என்றும், ஒரு நூற்றாண்டு கால அரசியல் நாவல் என்றும், சமூக ஆவணம் என்றும் கூறலாம்.
ஒரு நூற்றாண்டு கால சமூக மாற்றத்தையும், அரசியல் ஏற்றத்தாழ்வுகளையும், மாற்றங்களையும் எந்த ஒளிவு மறைவுமின்றி தைரியமாகவும், பகிரங்கமாகவும் எழுதியுள்ளார் தமிழ்மகன். இதுவரை எந்த ஒரு தமிழ் எழுத்தாளனுக்கும் இல்லாத தைரியம். தெளிவான சமூக, அரசியல்பார்வை நாவலாசிரியருக்கு இருக்கிறது. கலைஞர் குறித்த, எம்.ஜி.ஆர் குறித்த எதிர்தரப்பு வசைப்பாடல்கள் அப்பட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கலாச்சார பண்பாட்டு துறையில் ஏற்படும் மாற்றங்களை புறக்கணித்துவிட்டு, அரசியல் நடவடிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு எழுதப்படுவதுதான் இலக்கியப்படைப்புகளா? மறைமுகமாக, குறியீட்டுத்தன்மையில் எழுதப்படுவதுதான் இலச்கியமா, கற்பனையில், மூளையை கசக்கி இல்லாத ஒன்றை உருவாக்கிக் காட்டுவதுதான் இலக்கியம். மற்றதெல்லாம் குப்பை. பிரச்சாரம் இலக்கியம் என்று கூறுவதை ஏற்க மறுக்கிறது வெட்டுப்புலி நாவல். இது பிரச்சார நாவலோ குப்பையோ அல்ல. யூகத்தின், கற்பனையின் அடிப்படையில் எழுதப்படுவதைவிட உண்மையின் அடித்தளத்தில் எழுதப்படுவதுதான் நிஜமான இலக்கியம். ஒரு கலைபடைப்பின் வெற்றி, உன்னதம் மேன்மை என்பது அப்படைப்பின் உண்மை தன்மையில் இருக்கிறது வெட்டுப்புலி. இலக்கிய படைப்பு கதை சொல்வதுதான் என்றாலும், கதை சொல்வது மட்டுமே முக்கியமல்ல என்பதை வெட்டுப்புலி நிரூபித்துகாட்டியிருக்கிறது. தமிழ் புனைகதையாசிரியர்கள் யாரும் செய்யாத, செய்ய தயங்கியதை மிகுந்த துணிச்சலோடு எழுதியிருக்கிறார். தமிழில் அரசியல் நாவல் இல்லை என்ற குறையைப் போக்கியிருக்கிறார். வெட்டுப்புலி எழுத்தாளர்களுக்கும் விமர்சர்களுக்கும் சவாலை ஏற்படுத்தி தந்திருக்கிறது. சவாலை ஏற்க ஆட்கள் இல்லையென்றாலும். அரசியல் மேடைகளில் மட்டுமே உச்சரிக்கப்படுகிற வரலாற்று நாயகர்கள் பலர் புனைவிலக்கியத்திற்குள் வந்திருக்கிறார்கள். கதா பாத்திரங்களாக.
தமிழ்ச்சமூகம் எவ்வாறு சினிமா சார்ந்த சமூகமாக மாறியது என்பதை அதன் வரலாற்று பின்னணியோடு விவரிக்கிறது நாவல். சிவகுருவின் வாழ்க்கையோடு சினிமா உலகம் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. தேர்தல் சமயத்தில் ரஜினிகாந்தின் அறிக்கைக்காக மொத்த தமிழ்ச்சமூகமும் காத்திருக்கிறது. தமிழ்ச்சமூகம் சினிமா சார்ந்த சமூகமாக மாறிவிட்டது என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் இருக்க முடியாது. தமிழக அரசியலையும், சினிமாவையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு மாற்றியது எது? ரஜினிகாந்த்க்கு உடல் நிலை சரியில்லை. மருத்துவமனைக்கு போகிறார், சிங்கப்பூரில் இருக்கும்போது தொலைபேசியில் தொடர்புகொள்கிறார். ஜெயலலிதா. தமிழகமெங்கும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. பழனியில் ஒரே நாளில் ஆயிரம் பேர் மொட்டைப் போட்டு அங்க பிரதட்சணம் செய்தார்கள். ஒரு மாதகாலம் வரை குழந்தைகள் பள்ளிக்கு போவததற்காக வருத்தப்படாத பெற்றோர்கள்தான் இவர்கள். ரஜினிகாந்த் பெரியாரோடு இருந்தாரா, அண்ணா, கலைஞரோடு இருந்தாரா, சுதந்திர போராட்ட தியாகியா? தமிழர்கள் தமிழர்களாக இல்லாமல் போனது குறித்து அக்கறையுடன் விவாதிக்கிறது நாவல். சினிமா எப்படி பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறியது? சினிமா எந்தெந்த வகைகளில் தமிழ் சமூகத்தின் அறிய கலைகளை அழித்தொழித்தது, சினிமாவை எப்படி தொலைக்காட்சி ஒழித்தது என்பதை இயல்பான போக்கில் நாவல் பேசுகிறது. உண்மையை பேசுகிறது. மக்களின் வாழ்வை பேசுகிறது.
சின்னா ரெட்டியின் வாரிசுகள் பெரியாரின் தொண்டர்களாக, அண்ணாவின், கலைஞரின் தொண்டர்களாக இருக்கிறார்கள். பெரியாருக்கு உடல் நிலை மோசமாகும்போது லட்சுமண ரெட்டி துடித்துப்போகிறார். பெரியாரின் கொள்கைகளை, தி.மு.க.வின் கொள்கைகளை சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் இம்மி பிசாமல் பின்பற்றுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலிப்பது, கட்சி கல்யாணம் செய்வது என்று அடுக்கடுக்காக சம்பவங்கள் வருகின்றன. சத்தியமூர்த்திக்கு, ராஜாஜிக்கு கருப்புக்கொடி காட்டுகிறார்கள். மனைவியுடன், குடும்பத்தாருடன், ஊரார்களுடன் ஓயாமல் மோதிக்கொண்டிருக்கிறார்கள். சிறைச்செல்கிறார்கள்., இத்தனைக்கும் இவர்கள் திராவிடர் கழகத்திலோ, தி.மு.க.விலோ எந்த பதவியிலுக்கும் இல்லாதவர்கள். குடும்ப அளவில், ஊர் அளவில் மட்டுமே கட்சி கொள்கையை நடைமுறைப்படுத்துகிறார்கள். கட்சிதான் அவர்களுக்கு உயிர். “அடைந்தால் திராவிட நாடு அடையாவிட்டால் சுடுகாடு” போன்ற கோசங்கள்தான் அவர்களுக்கு மூச்சு காற்று.
பெரியாரின் தொண்டர்களாக, அண்ணாவின், கலைஞரின் தொண்டர்களாக இருக்கிறார்கள். தி.மு.க.தோற்கும் ஒவ்வொரு முறையும் அம்மனிதர்கள் படும் துரயம் விவரிக்க முடியாதது. அப்படியான மனிதர்கள் ஒவ்வொரு கிராமத்தில் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். பெரியார், அண்ணா, கலைஞர் என்ற பெயர்களை மந்திரம்போல உச்சாடனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
நேருவின் மரணம் இந்திரா காந்தியை பிரதமராக்கியது. இந்திரா காந்தியின் மரணம் ராஜீவ்காந்தியை பிரதமராக்கியது. ராஜுவின் மரணம் சோனியா காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கியது. ஜெயலலிதாவை தமிழக முதல் அமைச்சராக்கியது. பிரபாகரனின் மரணம் தமிழ் ஈழத்தை வெற்று கனவாக்கியது. கொலைகளும், மரணங்களும் இந்தியாவை, தமிழகத்தை அரசியல் ரீதியாகவும், பிற துறைகளிலும் எவ்விதமான மாற்றங்களை நிகழ்த்தியது. அதனால் ஏற்பட்ட சாதக பாதகமான அம்சங்களைப் பற்றிப் பாரபட்சமின்றி வெட்டுப்புலி பதிவு செய்திருக்கிறது.
நாவலின் ஒரு பகுதி சின்னா ரெட்டியின் குடும்பம் சார்ந்த நான்கு தலைமுறைகளின் வாழ்வை சொல்கிறது. மற்றொரு பகுதி பிராமணியத்தையும், பிராமணர்களையும் எதிர்க்கும் பெரியாரின் தொண்டர்களைப் பற்றி விவரிக்கிறது. மூன்றாவது பகுதி தமிழக அரசியலில் நிகழ்ந்த மாற்றங்கள். நான்காவது பகுதி தமிழக சினிமாவும் அதன் நாயகர்களின் வளர்ச்சியும் விரிக்கப்படுகிறது. இந்த நான்கு பகுதியும் மாறி மாறி விவரிக்கப்படுகிறது. நாவலில் மூன்று தலைமுறைவரை உறுதியாக இருக்கிற சின்னாரெட்டியின் குடும்ப உறுப்பினர்கள் நான்காவது தலைமுறையில் லேசாக மாறத் தொடங்குகிறார்கள். நாவலில் பெரும் பகுதி பிராமணியத்திற்கு எதிராக பேசுவதுமாதிரி நாவல் தோற்றம் தந்தாலும் நாவலின் இறுதி பகுதியில் கிருஷ்ண பிரியா, பிரபாஷின் சகோதரர், தியான மடம் வைத்திருக்கும் அய்யர் ஆகிய மூவரின் மூலம் பிராமணிய கொள்கைகள் பேசப்படுகிறது. நியாயங்கள், தர்க்கங்கள் சரி. நாவலாசிரியர் நடுநிலைக்கு இது சான்று. ஆனால் பிராமணியத்தின் தர்க்கங்களையும், நியாயங்களையும் நாவலாசிரியர் ஏற்றுக்கொள்கிறாரா என்ற கேள்வி வருகிறது.
லட்சுமண ரெட்டியோடு சிரித்து பேசிய குற்றத்திற்காக இரவோடு இரவாக குணவதியும், அவளுடைய சாதியாட்களும் துரத்தியடிக்கப்படுகின்றனர். அதன் பிறகு பறையர்கள் குறித்த பதிவுகள் நாவலில் எங்குமே இடம்பெறவில்லை. தி.க., தி.மு.க. என்று உயிரையே விட்ட தியாகராசன் கடைசியில் அய்யரோடு சேர்ந்து கொண்டு தியானத்தில் ஈடுபடுவது, சினிமா எடுக்கபோய் பிச்சை எடுத்து சாகும் சிவகுரு இவர்கள் மூவரும் வாசகர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறவர்கள். குணவதி, தியாகராசன், சிவகுரு போன்றவர்களுக்கு ஏற்பட்ட துயரம் அவர்களால் அவர்களுக்கு ஏற்பட்டதல்ல. சமூகத்தால் ஏற்பட்டது.
தமிழ்மகனிடம் சமூகம் குறித்த நம்பிக்கையும் அக்கறையும் இருக்கிறது. அவரிடம் அரற்றலோ, ஆவேசமோ, தன்னிரக்கமோ இல்லை. அவரிடம் இருக்கும் இலக்கிய–சமூகவிய்ல பார்வைதான் நூறு வருட வாழ்க்கையை எழுத்தாக மாற்றியிருக்கறிது. வெட்டுப்புலி நாவல் சரளமாக எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் புதுவிதமான முறையில். பிசிறு என்பது அபூர்வமாகவே இருக்கிறது. மூன்றாவது முறையாக முதலமைச்சராகியிருக்கும் ஜெயலலிதா குறித்து ‘ஜெயலலிதா இருக்கிறாரே’ என்ற ஒருவார்த்தையைத் தவிர வேறு குறிப்பு இல்லாதது ஆச்சரியமளிக்கிறது. இடதுசாரி இயக்கங்கள், அவற்றின் செயல்பாடுகள், எட்டு, பத்து எம்.எல்.ஏ. சீட்டுக்காக அவர்கள் ஒவ்வொரு தேர்தலின்போதும் தி.மு.க.., அ.தி.மு.க.., என்று கட்சி மாறுவது என்பது குறித்த எந்தப் பதிவும் நாவலில் இல்லை. பல இடங்களில் காலம் குறித்த தகவல்களில் குழப்பம் இருக்கிறது. ஆனாலும் இந்நாவல் பல நாவல்கள் உருவாக ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும். வெட்டுப்புலி அல்ல – வெட்டும் புலி.
———–
(நன்றி: அம்ருதா மாத இதழ்)
வெட்டுப்புலி – நாவல்
தமிழ்மகன்
உயிர்மை பதிப்பகம்,
11/29 சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை- 18
டிசம்பர் 2009
No Comments