ஐந்து முதலைகளின் கதை

சரவணன் சந்திரன் தங்கத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றின் முக்கிய பகுதியாக இருக்கிறது. பின்னர் இயற்கை வளங்களையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் தேடி நாடு நாடாகச் சென்றவர்கள், புதிய வேட்டை நிலங்களைக் கண்டடைந்தார்கள். ஐந்து முதலைகளின் கதை, நவீன தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் இதுவரை சொல்லப்படாத நிலங்கள், நாடுகள் வழியே ஒரு புதிய கதையைச் சொல்கிறது. செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் தேடி புதிய தடங்களில் பயணம் செய்யும் மனிதர்களின் சவால்களும், தன்னையே பணயம் வைத்து ஆடுகிற சூதாட்டங்களும் இந்த நாவலை மிகுந்த சுவாரசியமுடையதாக்குகின்றன. மனிதர்களின் ஆழம் காண முடியாத மனோவிசித்திரங்களை சரவணன் சந்திரன் மிக நுட்பமாக சித்தரிக்கிறார். ரூ.150/-

புத்துமண்

சுப்ரபாரதி மணியன் சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கிய ஒருவரின் லௌகீக வாழ்க்கையின் சரிவையும் சமூக வாழ்க்கையில் அங்கீகரிக்கப்படாததையும் அடுத்த தலைமுறை குறித்த அவரது அக்கறை சார்ந்த செயல்பாடுகளையும் இந்த நாவல் எடுத்துக்காட்டுகிறது. ரூ.100/-

சென்னைக்கு மிக அருகில்

விநாயக முருகன் பிம்பங்களுக்கும் நிஜங்களுக்கும் ஓயாத போராட்டம். பிம்பங்கள் சரிந்து அம்பலமாகும்போது அந்த நிர்வாணத்தைப் பணமாக மாற்ற விழையும் ஊடகங்கள், குடும்பங்களுக்குள் ஊடகங்கள் ஏற்படுத்தும் பண்பாட்டு உளவியல் சிக்கல்கள், விபரீதமான உறவுகளுக்குப் பின்னால் படியும் குற்றங்கள், தொழில் போட்டியில் யாரோ சில மனிதர்கள் எங்கோ பின்னிவைத்த சிலந்தி வலையில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி விவசாயிகள் என அனைவரும் ஒரு புள்ளியில் சேரும் இடமும் விலகும் இடமுமே இந்த நாவலின் மையக்கரு. ரூ.320/-

துயில்

எஸ். ராமகிருஷ்ணன் வாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள்தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன. இத்தரிசனத்தை ஒரு புனைவாக, கலையாக மாற்றுவதில் பெரும் வெற்றியடைந்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இப்புதிய நாவல். நம்மைக் காலகாலமாகத் தொடர்ந்துவரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறதவரை பிணியின் துயரினை ஒருபோதும் நம்மால் கடக்கவே முடியாது என்ற மகத்தான உண்மையை துயில் ஆழமாக நிறுவுகிறது. வெவ்வேறு காலங்களில் நிகழும் இந்நாவலில் அத்தியாயங்களுக்கு இடையே மனித வாழ்வு அடையும் கோலங்கள் ஏற்படுத்தும் துயரமும் பரவசமும் எல்லையற்றவை. மனித உடலை இந்திய மரபும் மேற்கத்திய மரபும் ஏற்கும் விதத்தில் அகவயமான, புறவயமான இரண்டுபாதைகள் இருப்பதை அடையாளம் காணும் எஸ்.ராமகிருஷ்ணன் அவற்றின் சாராம்சமான வாழ்வியல் நோக்கின் மையத்திற்கே நெருங்கிச் செல்கிறார். இந்த அளவிற்கு காட்சி பூர்வமான, தத்துவார்த்தத்தின் கவித்துவம் செறிந்த பிரிதொரு நாவல் தமிழில் எழுதப்பட்டதில்லை. ரூ.460/-

சஞ்சாரம்

எஸ். ராமகிருஷ்ணன் கலைகள் என்பது எப்போதும் உன்னதங்களின் மீது கட்டப்படும் மகத்தான அனுபவங்கள் அல்ல. கலைகள் தரும் மன எழுச்சிக்குப்பின்னே அதைப் படைப்பவர்களின் இருண்ட நிழல்கள் அசைந்துகொண்டிருக்கின்றன. இந்த நாவல் வறுமைக்கும் அவமானங்களுக்கும் வீழ்ச்சிக்கும் நடுவே கலையின் மாபெரும் வெளிச்சத்தை ஏந்தி நடந்த மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. கரிசல் பூமியின் சங்கீதம் என்பது ஓசைகளால் ஆனதல்ல, அது வாசனைகளால் நிரம்பியது என்பதுதான் இந்த நாவலின் மையப் படிமம். அது ஆற்ற முடியாத மனித துயரத்தின் வாசனை. மனித மனதின் பிரகாசமான தருணங்களின் வாசனை. எந்த ஒரு அகங்காரத்தையும் அதிகாரத்தையும் மனம் உடையச் செய்து கரையவைக்கும் வாசனை. அந்த வாசனையின் வழியே இந்த நாவல் தமிழ்வாழ்க்கையின் இதுவரை சொல்லப்படாத கதைகளைச் சொல்கிறது. சாதிய சமூகத்தின் வெறுப்புக்கும் கீழ்மைகளுக்கும் நடுவே தமிழ்ச் சமூகத்தின் கலைகளின் மீது படிந்த புழுதிகளையும் வெளிச்சங்களையும் இந்த நாவலில் எழுதிச்செல்லும் எஸ்.ராமகிருஷ்ணன் எந்த ஒரு அவலமும் மனிதனின் கலை சார்ந்த கனவுகளை அழித்துவிடமுடியாது என்பதை ஒரு பிரமாண்டமான சித்திரமாக உருவாக்கிக் காட்டுகிறார். ரூ.375/-  

சினிமா: அலைந்துதிரிபவனின் அழகியல்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அழகியல் அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத் தன்மையைக் கடுமையாகச் சாடும் சாருநிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். பரவலாக அங்கீகரிக்கப்பட்ட படங்கள், இயக்குனர்களைக் காட்டிலும் மாற்று சினிமா மொழியை உக்கிரமாகக் கையாண்ட கத்ரீன் ப்ரேலா, ஒட்டிஞ்ஜர், பசோலினி, ஹொடரோவ்ஸ்கி போன்றவர்களே சாருவின் அக்கறைக்குரியவர்களாக இருக்கிறார்கள். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது. ரூ.170/-

ராஸ லீலா

சாரு நிவேதிதா   நவீனத்துவத்தின் அத்தனை பாதிப்புகளையும் அப்பட்டமாக போட்டு உடைத்த நாவல். சம காலத்தின் அத்தனை சுவாரஸ்யங்களையும் அபத்தங்களையும் பேசும் உற்சாகமாகமான படைப்பிலக்கியம்.  

கலகம் காதல் இசை

சாரு நிவேதிதா உலக இசைப் பரப்பின் சில மகத்தான வடிவங்களையும் கலைஞர்களையும் பற்றி விவாதிக்கும் இந்நூல் மலையாளத்தில் மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவந்து பெரும் கவனத்தைப் பெற்றது. இவை இசையின் பரவசத்தையோ கலைஞர்களின் மகோன்னதத்தையோ பாடும் நூல் அல்ல. மாறாக அந்தந்தச் சமூக, பண்பாட்டு, அரசியல் வெளிகளில் இந்தக் கலைஞர்கள் ஏற்படுத்திய குறுக்கீட்டினையும் அதன் ஊடாக அந்தச் சமூகங்களின் உளவியல் மற்றும் அரசியல் பண்பாட்டினையும் முன்வைக்கிறது.

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

சாரு நிவேதிதா எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வெளிவந்து இருபதாண்டுகள் ஆகிறது. இப்போதும் இந்த நாவல் கொண்டாடப்படுவதாகவும் சகித்துக் கொள்ளமுடியாததாகவும் இருப்பதற்கு காரணம் தமிழ்ப் புனைகதை மொழியை அது சிதறடித்து ஒரு புதிய கதை சொல்லல் முறையை உருவாக்கியது தான். அந்த வகையில் தமிழில் பின் நவீனத்துவ நோக்கில் எழுதப்பட்ட முதல் நாவலாக இதையே குறிப்பிட இயலும். மனித உடல் மற்றும் மனதின் மீது நமது கலாச்சார வாழ்க்கை செலுத்தும் வன்முறைக்கு எதிராக, இலக்கியத்தில் அது உருவாக்கும் ஒழுக்கவியல் சார்ந்த அழகியலுக்கு எதிராக இந்த நாவல் ஒரு மாற்று மொழியையும் புனைவு வெளியையும் படைக்கிறது. ரூ. 60/-

ஊரின் அழகான பெண்

சாருநிவேதிதா மொழிபெயர்த்த புனைகதைகள் அடங்கிய இத்தொகுப்பு அதன் தேர்வு சார்ந்தும் மொழியாக்கம் சார்ந்தும் மிகவும் முக்கியமானவை. லத்தீன் அமெரிக்க, அரேபிய நாடுகளிலிருந்து இக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது தற்செயலானதல்ல. லத்தீன் அமெரிக்காவின் அரசியல் போராட்டம் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த காலத்தில், தமிழில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தையும் இன்று இஸ்லாமிய நாடுகள் வல்லரசுகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அரேபிய இலக்கியத்தையும் மொழிபெயர்க்கும் சாரு நிவேதிதாவின் தேர்வுகள் இலக்கிய முக்கியத்துவமும் அரசியல் முக்கியத்துவமும் ஒன்று சேர்ந்தவை என்பதற்கு இந்த நூல் ஒரு சாட்சியாகத் திகழ்கிறது. ரூ. 190/-