மங்கலத்து தேவதைகள்

வா.மு. கோமு பூமியில் மனித இருப்பின் ஆதாரமான உடல்களில் பொங்கிடும் பாலியல் வேட்கை, எங்கும் நிழல் போல பற்றிப் படர்வதை நுட்பமான மொரியில் வா.மு.கோமு நாவலாக்கியுள்ளார். உடலை முன்வைத்து நிகழ்த்தப்படும் கொண்டாட்டங்களும் துக்கங்களும் அளவற்றுப் பெருகும் நவீன வாழ்வில், ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் பாலியல் அனுபவங்கள் ரகசியப் பிரதியாகவே மனதுக்குள் புதைந்துள்ளன. இதுவரை தமிழ்ப்பண்பாடு, பாரம்பரியம் என மொழியின் வழியில் கட்டமைக்கப்பட்டுள்ள எல்லாவகையான புனைவுகளையும் சிதைத்து, வா.மு.கோமு புனைந்திடும் புனைவுலகு, வாசிப்பின் வழியாக அதிர்வை ஏற்படுத்துகின்றன. தமிழ்ர் வாழ்க்கையில் ஆண்-பெண் உறவு இன்று எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டுவது இந்நாவலின் தனித்துவம். ந.முருகேசபாண்டியன் ரூ.260/-  

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

அ.முத்துலிங்கம் தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீனத் தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார். இந்த நாவலின் சில பகுதிகள் தனி ஆக்கங்களாக வெளி வந்திருந்தபோதும் இந்த வடிவத்தில் அவை தமது உள்ளிணைப்புகளால் ஆழ்ந்த ஓர்மையை வெளிப்படுத்துகின்றன. அவரது புனைவின் நிழல் எதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது. ரூ.170/-

காமரூபக் கதைகள்

சாரு நிவேதிதா சாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்பவிரும்புவதில்லை. பயத்திற்கும் நிஅச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை அது சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல்கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது. ரூ.290/-

வெளியேற்றம்

யுவன் சந்திரசேகர் வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பீடித்திருக்கும் ஏதேனும் ஒன்றிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள்தாம் அந்த வெளியேற்றத்தை நிகழ்த்துகின்றன. அவை சில சமயம் தண்டனையாகவும் சில சமயம் விடுதலையாகவும் உருக் கொள்கின்றன. ஆனால் இதற்கு அப்பால் தன்னிசையாக வெளியேறிச்செல்லும் ஒருவரின் கதை இது. அவருடைய, அவரைச் சுற்றி வலைப்பின்னலாய்ப் படிந்திருக்கும் எண்ணற்ற மனங்களுடைய கதையும்கூட. ரூ.320/-

தேகம்

சாரு நிவேதிதா வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை எப்போது மனிதர்கள் கண்டுபிடித்தார்களோ அன்றிலிருந்து சித்ரவதையின் தொழில்நுட்பம் நுணுக்கமாகத் தொடர்ந்து மாறுதலடைந்து வந்திருக்கிறது. சித்ரவதைகள்மூலம் ஒரு உடலை இன்னொரு உடல் முழுமையாக வெற்றிகொள்ளும்போது நிகழ்வது, ஒரு புராதனமான மிருக இச்சையா அல்லது அதற்குள் ஒரு நீதிமுறை செயல்படுகிறதா என்கிற கேள்வியை எதிர்கொள்கிறது இந்த நாவல். சாரு நிவேதிதா இந்த நாவல்மூலம் காட்டும் உலகம் கடும் மன அதிர்ச்சியை ஏற்படுத்துவதன் காரணம், அந்த உலகத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதுதான். ரூ.90/-

ரசிகன்

ஆர். அபிலாஷ் கேளிக்கைக் கலாச்சாரத்தின் வழியாகத் தன்னைத் தானே தண்டித்துக்கொள்பவனின் கதை இது. இன்னொருபுறம் இந்நாவல் முழுமையான தன்னுணர்வு பெற்ற மனிதன் தன் வாழ்வின் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கும் நிலைமைக்கு வருகையில் எப்படியான பதற்றத்தை, நெருக்கடிகளைச் சந்திக்கிறான் என்பதையும் சித்தரிக்கிறது. ரூ.350/-

உண்மைக்கு முன்னும் பின்னும்

சிவகாமி தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகாரவர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை- ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிறியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உண்டு என்றாலும் புனைவு, எல்லைகள் கடந்து நிதர்சனமாகத் தெரியும் காட்சிகளுக்குப் பின்னால் ஊடாடிக்கிடப்பவற்றின் பின்னே இருக்கும் மர்மங்களை இந்த நாவல் அழுத்தமாக சித்தரிக்கிறது. ஆனந்தாயி, பழையன கழிதலும், குறுக்கு வெட்டு, ஆசிரியை குறித்து ஆகிய சிவகாமியின் நான்கு புதினங்களைத் தொடர்ந்து இப்போது வெளிவருகிறது உண்மைக்கு முன்னும் பின்னும். ரூ.270/-

மாலு

சுப்ரபாரதி மணியன் வேலை வாய்ப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கவும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் தமிழர்களின் அனுபவங்களையும், துயரங்க ளையும் மலேசிய நாட்டுப் பின்னணியில் இந்நாவல் விவரிக்கிறது. மரணதண்டனைக்கு எதிரான குரலையும் எழுப்புகிறது. ரூ.80/-

அவ்வுலகம்

வெ.இறையன்பு இறையன்புவின் இந்த நாவல் மகத்தான மனித வாழ்வை அற்ப காரணங்களுக்காகச் சீரழித்துக்கொள்ளும் மனிதர்களின் அறியாமையைப்பற்றிப் பேசுகிறது. தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் மனிதர்கள் ஒரு நாள் பதிலளிக்க முடியாத கேள்விகளின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்பதைப்பற்றிப் பேசுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இருள் எனத் தோன்றும் மரணமே மனிதனுக்கு மகத்தான வெளிச்சத்தைக் கொண்டுவரும் அற்புதத்தைப் பற்றிப் பேசுகிறது. ரூ.140/-

ஐந்து முதலைகளின் கதை

சரவணன் சந்திரன் தங்கத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றின் முக்கிய பகுதியாக இருக்கிறது. பின்னர் இயற்கை வளங்களையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் தேடி நாடு நாடாகச் சென்றவர்கள், புதிய வேட்டை நிலங்களைக் கண்டடைந்தார்கள். ஐந்து முதலைகளின் கதை, நவீன தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் இதுவரை சொல்லப்படாத நிலங்கள், நாடுகள் வழியே ஒரு புதிய கதையைச் சொல்கிறது. செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் தேடி புதிய தடங்களில் பயணம் செய்யும் மனிதர்களின் சவால்களும், தன்னையே பணயம் வைத்து ஆடுகிற சூதாட்டங்களும் இந்த நாவலை மிகுந்த சுவாரசியமுடையதாக்குகின்றன. மனிதர்களின் ஆழம் காண முடியாத மனோவிசித்திரங்களை சரவணன் சந்திரன் மிக நுட்பமாக சித்தரிக்கிறார். ரூ.150/-