நகுலன் வீட்டில் யாருமில்லை

எஸ். ராமகிருஷ்ணன் நகுலன் வீட்டில் யாருமில்லை நகுலன் வீட்டில் யாருமில்லை நகுலன் வீட்டில் யாருமில்லை எனும் குறுங்கதை வடிவம் உலகெங்கும் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக எழுதப்பட்ட போதும் தமிழில் அத்தகைய முயற்சிகள் போதுமான அளவு நடைபெறாத சூழலில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு வெளிவருகிறது.. இக்கதைகள் குறுங்கதைகளுக்கே உரிய கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டுள்ளன. மிகக் கூர்மையான அங்கதத்தினையும் தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தும் இக்கதைகள் மரபான நம்பிக்கைகள், தொன்மங்கள், கவித்துவமான உருவகங்கள் வழியே நவீன வாழ்வு குறித்து தீவிரமான பிரக்ஞையைக் கொண்டிருக்கின்றன. இதில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை முதல்முறையாக இந்தப் புத்தகத்தில்தான் அச்சேறுகின்றன. ரூ.110/-

அயல் சினிமா

எஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்த நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா எனப் பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கியத் திரைப்படங்களையும் ஆராய்கிறது. சினிமா வெறும் நுகர்பொருள் என்பதைத் தாண்டி கலாச்சாரம் மற்றும் சமூக அரசியல் மாற்றங்களை நுட்பமாகப் பதிவுசெய்யும் வடிவமாகத் தன்னை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதையே இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன. சமகால உலக சினிமாவைப் புரிந்து கொள்ளவும் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் விரும்பும் அனைவருக்கும் மிக நெருக்கமானது இந்த நூல். ரூ.100/-

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள்

எஸ். ராமகிருஷ்ணன் இவை பதேர்பாஞ்சலி பற்றிய எனது மனப்பதிவுகள். இந்தக் குறிப்புகள் பல நேரங்களில் மனதில் தோன்றி மறைந்தவை. ஆய்வு பூர்வமாகவோ, கோட்பாட்டு அடிப்படையிலோ இவை அணுகப்படவில்லை. ஒரு எளிய சினிமா பார்வையாளன் என்ற ரீதியில் பதேர் பாஞ்சாலி எனக்குள் உருவாக்கிய விளைவுகளைத் தொகுத்திருக்கிறேன் என்றே சொல்லலாம். பதேர் பாஞ்சாலியைப் பற்றிய ரேயின் கருத்துகளை, அதன் உருவாக்கத்தைப் பற்றிய தகவல்களை, கட்டுரைகளை வாசிக்கத் துவங்கிய பிறகு அந்தப் படம் குறித்த அனுபவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கியது. ஆகவே எனது வாசிப்பு அனுபவமும் இந்த நூலின் பகுதியாகவே இடம்பெற்றிருக்கிறது. ஒரு திரைப்படத்தை எப்படி அணுகுவது என்பதற்கான சில சாத்தியங்களை உருவாக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். அதை நோக்கியே இந்தப் பதிவுகள் அமைந்திருக்கின்றன. பதேர் பாஞ்சாலி படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு உலகம் முழுவதும் சத்யஜித்ரே கௌரவிக்கப்பட்டார். அதை நினைவுகொள்ளும் விதமாகவும் ஒரு அரிய இந்திய சினிமாவைப் புரிந்து கொள்வதற்கான எனது எத்தனிப்பாகவும் இந்த நூலைக் கருதுகிறேன். ரூ.135/-

கால் முளைத்த கதைகள்

எஸ். ராமகிருஷ்ணன் உலகம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு இன்றுவரை முழுமையான விளக்கம் கிடைக்கவில்லை. விஞ்ஞானம் புதிய புதிய கருதுகோள்களோடு விளக்கங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப் போல வசீகரமாகியிருக்கின்றன. உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வாசிப்பதற்காகவும் திரும்பச் சொல்வதற்குமே இந்தமுயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ரூ.130/-

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்

எஸ். ராமகிருஷ்ணன் புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவன் ரகசிய நூலகம் ஒன்றிற்குள் பிரவேசிக்கிறான். அங்கே அவனுக்கு நடக்கும் வினோத சம்பவங்கள் தான் இந்த கதை. ரூ.50/-

அண்டசராசரம்

எஸ். ராமகிருஷ்ணன் இந்திய தேசிய ராணுவத்திற்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியில் இருந்த பணமும் சேமிப்பும் அவரது மரணத்தின் பிறகு என்னவாகின என்ற புதிர் இன்றும் தொடர்ந்துகொண்டே வருகிறது. அந்த புதிரை அடிப்படையாக கொண்ட துப்பறியும் கதை இது ரூ.60/-

எப்போதுமிருக்கும் கதை

எஸ். ராமகிருஷ்ணன் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இலக்கிய இதழ்களில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்தும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீதான தனது அவதானிப்புகள் மற்றும் விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.இந்த நேர்காணல்கள் படைப்பாளியின் தனிப்பட்ட பார்வைகள் என்பதைத் தாண்டி புனைகதை குறித்த ஆழ்ந்த விசாரணையை முன்வைக்கின்றன. புதியதொரு கதையியலை நோக்கி வாசகனை அழைத்துச் செல்லும் முனைப்பும் உலக இலக்கியத்தின் பரந்த வாசிப்பு அனுபவமும் முழுமையாக வெளிப்படுகின்றன என்பதே இந்த நேர்காணல்களின் சிறப்பம்சம். ரூ.65/-

பேசிக்கடந்த தூரம்

எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்கள், கேள்வி-பதில்கள் என்பது எழுத்திற்கு அப்பால் எழுத்தாளனின் ஆளுமையை அடையாளம் காட்டும் முயற்சிகள். சொந்த வாழ்க்கை அன்றாட அனுபவங்களை, படித்த, கேட்ட, பார்த்த நிகழ்வுகளை சமூகம் குறித்த உரத்த சிந்தனைகளை, சமகால இலக்கியப் போக்குகளைப் புனைவின் நிழல்படாமல் பேசி அறிந்து கொள்ளும் ஒரு சவாலே நேர்காணல்கள். இது எஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த நேர்காணல்களின் தொகைநூல். முன்னதாக, எப்போதுமிருக்கும் கதை என்ற அவரது நேர்காணல்களின் இரண்டாவது தொகுப்பு நூல். பேச்சிற்கும் எழுத்திற்கும் இடைவெளியற்றவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்பதையே இந்த நேர்காணல்கள் அடையாளம் காட்டுகின்றன. ரூ.130/-

அரவான்

எஸ். ராமகிருஷ்ணன் இந்த நாடகங்கள் வாழ்வைத் தீவிர நிலையில் எதிர்கொள்ளும் தருணங்களின் வெளிப்பாடு, தனக்குத்தானே ஒருமனிதன் உரையாடிக் கொள்ளும் நெருக்கடியிலிருந்துதான் நாடகம் பிறக்கிறது. அதிகாரத்தை எதிர் கொள்வதும், வரலாற்றை, கலாச்சாரப் புனைவுகளைக் கட்டுடைப்பதும், மனப் பிறழ்வுகளின் மீது மையம் கொள்வதும் என இந்த நாடகங்கள் புதிய நிகழ்வெளிக்கான சாத்தியங்களை உருவாக்கு கின்றன. எஸ். ராமகிருஷ்ணனின் ஒன்பது நாடகங்கள் கொண்ட தொகுப்பு இது. இந்த நாடகங்கள் நிகழ்த்தப்பட்டபோது மிகுந்த வரவேற்பு பெற்றதோடு சங்கீத நாடக அகாதமியின் தேசிய நாடகவிழாவிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள அரவான் நாடகம் மலையாளம் மற்றும் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.90/-

விழித்திருப்பவனின் இரவு

எஸ். ராமகிருஷ்ணன் நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு. இப்படைப்பாளிகள் குறித்த பொதுவான இலக்கிய பிம்பங்களைத் தாண்டி அவர்களது கனவும் பைத்திய நிலையும் கொண்ட வேட்கைகளை, தேடல்களை விரிவாகப் பதிவு செய்யும் இக்கட்டுரைகள் உயிர்மை இதழில் தொடராக வெளிவந்து பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன. வெறும் தகவல் குறிப்புகளாக அல்லாமல் தீவிர மன எழுச்சியையும் படைப்பாளியின் சவால்கள் குறித்த உக்கிரமான கேள்விகளையும் எழுப்பும் இந்நூல் ஒரு ஆய்வாளனின் கடும் உழைப்பும் ஒரு படைப்பாளியின் தீவிர அழகியலும் கொண்டதாகத் திகழ்கிறது. ரூ.150/-