முதல் இந்திய நாவல்கள்

முதல் நாவலாசிரியர்கள் அவர்களுடைய சூழ்நிலை எப்படியிருப்பினும் மனக்கசப்போ குரோதமோ இல்லாமல்தான் எழுதியிருக்கிறார்கள். சமூகம் குறித்துக் கடுமையான விமரிசனங்களை முன்வைத்தாலும் பொதுவாக மனிதர்கள்மீது பரிவுணர்ச்சியே கொண்டிருந்தார்கள். இதை இயல்பாகச் செய்தார்கள். நாவல் வடிவம் ஒருவாறாக நிலைபெற்று அதற்கு விற்பனை சாத்தியம் உண்டு என்று விளங்கிய பிறகுதான் வாசகனை நாடிப் போகும் போக்கு தொடங்கியது. ஆதலால் முதல் நாவல்களில் எவ்வளவு குறைகள் இருந்தாலும் உயரிய இலட்சியங்களை மனதில் கொண்டே அந்த நாவல்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. – அசோகமித்திரன் ரூ.110/-

நினைவின் நதியில்

இந்நூலில் நான் இருந்துகொண்டே இருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை. ஏனென்றால் இது சுந்தர ராமசாமியின் வரலாறு அல்ல. அவரைப்பற்றிய என் நினைவுகள்தான். நான் அவரை எதிர்கொண்ட புள்ளிகள் மட்டுமே இந்நூலில் உள்ளன. என் வயதின் முதிர்ச்சியின்மை, இயல்பான அசட்டுத்தனங்கள், அறி வார்ந்த தேடல், ஆன்மீகமான தத்தளிப்புகள் ஆகியவை யும் இணைந்தே இந்நூல் உருவாகியிருக்கிறது. 2005இல் எழுதப்பட்ட இந்நூலை இன்று வாசிக்கும் போது இது Ôஜே.ஜே. சில குறிப்புகள்Õ போன்ற ஒரு புனை வாகவும் வாசிக்கப்படலாமென தோன்றுகிறது. பல இடங்களில் நானே புன்னகை செய்துகொண்டேன். சில இடங்களில் ஆழ்ந்த மனநெகிழ்ச்சியையும் அடைந்தேன்.- உதாரணமாக, சுந்தர ராமசாமி ஆலமரத்தைப் பார்க்கும் இடம். அது ஒரு மிகச்சிறந்த நாவலின் தருணத்துக்கு நிகரானது. – ஜெயமோகன் ரூ.220/-

புறப்பாடு

அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அர்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனு பவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது. அதை வெளியே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச் சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே. அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வரிசையை அமைத்து விடுகின்றன. நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன். அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒன்று தென்படும். அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டுவருகிறதோ அதை எழுதிச் செல்வேன். அதன் வழியாக அப்போது அதாவது எழுதும் கணத்தில்  ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன். – ஜெயமோகன் ரூ.380/-

என் பயணம்

இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் பேட்டிகளும் வெவ்வேறு காலத்தில் உருவானாலும் இவை அனைத்திற்கும் ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. இவை எல்லாமே என்னைப் பற்றியது. இத்தொகுப்பு ஏதாவது ஒரு வகையில் வாசகனுக்கும் என் எழுத்துக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்த வேண்டும். இத்தொகுப்பை மட்டுமே காண முடிந்தவர்களுக்கு ஒரு தமிழ் எழுத்தாளனின் எழுத்துப் பயணம் குறித்து ஒரு கண்ணோட்டம் தரக்கூடுமானால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். – அசோகமித்திரன் ரூ.140/-

பார்வைகள்

உயர்ந்த மதிப்பீடுகளை நாடுபவர்களுக்கு உயர்ந்த கலையும் வசப்படும். இக்கட்டுரைகள் எல்லாமே நல்ல மதிப்பீடுகளை நாடிய படைப்பாளிகள் பற்றியவை. தமிழின் இன்றைய இலக்கிய மேன்மைக்கு இவர்களின் பங்கு கணிசமானது. – அசோகமித்திரன் ரூ.170/-

காலக்கண்ணாடி

‘கணையாழி’ பத்திரிகையோடு அதன் தொடக்க இதழிலிருந்து 1988வரை நான் தொடர்புகொண்டிருந்த 23 ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரை மற்றும் குறிப்புகளில் என் கைவசமிருந்தவற்றின் தொகுப்பு ‘காலக்கண்ணாடி.’ ஒரு பத்திரிகை அது இயங்கும் சமூகத்தின் சமகால நடப்புகளின் இயக்கத்தையும் விளைவுகளையும் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டவை இவை. இத்தொகுப்பில் சில இடங்களில் காணப்படும் ஒரு&வரி அறிவிப்புகள், சில பிரசுரங்களின் முகவரி மற்றும் விலை பற்றிய விவரங்கள் அந்தந்த காலகட்டத்தைத் தகவல்பூர்வமாக விளக்கக்கூடும் எனச் சேர்க்கப்பட்டவை. என் சிறுகதை, நாவல் முதலியனவும் இத்தகைய முயற்சிகள்தான். என் வரையில் எல்லாமே நான் எழுதிவரும் முடிவுறாத ஒரு நீண்ட படைப்பின் பகுதிகளாகவே தோன்றுகின்றன. – அசோகமித்திரன் ரூ.220/-

சங்கச்சித்திரங்கள்

சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி யாக மட்டுமே அந்தப் பேரழகை, பேரன்பை உணர முடிகிறது …எனக்குத் தெரியும், இவை தென்மதுரையும் கபாட புரமும் கண்ட தொல்முத்துகள் என. நாளை விண் வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும், இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப் பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் சுண்டுவிரலில் எடுத்து கண்ணெதிரே தூக்கிப்பார்ப்பது எவ்வளவு பேரனுபவம் …! – ஜெயமோகன் ரூ.200/-

அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்

அ. முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கை தரிசனத்தை. Ôஇன்னல்களும் சிக்கல்களும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுட வாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத் துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே. – அ.முத்துலிங்கம் ரூ. 90/-  

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்

தமிழ் இலக்கிய ஆய்வுகள், பரவச மொழிதலாகவும் உயர்வு நவிற்சியாகவுமே பல காலம் இருந்து வந்துள்ளன. கடந்த அரை நூற்றாண்டாக ஆய்வுகள் புதிய திசையில் நடைபெறத் தொடங்கியுள்ளன. புனைவாகிய இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ஆய்வுகள் மற்றொரு புனைவாகவே இருந்த நிலைமாறி, கல்வெட்டுகள், செப்பேடுகள் துணைகொண்டும் மானுட இயல் முதலான பல புதிய துறை அறிவு கொண்டும் புதிய சொல்லாடலைக் கட்டமைத்துள்ளன. தமிழ் ஆய்வைப் புதிய தடத்தில் செலுத்திய முன்னோடிகளைப் பின்பற்றி, பிரபஞ்சன் ஆதித் தமிழ் இலக்கியம் பற்றிய கருத்துகளை முன்வைக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. ரூ.130/-

சினிமா: அலைந்துதிரிபவனின் அழகியல்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அழகியல் அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத் தன்மையைக் கடுமையாகச் சாடும் சாருநிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். பரவலாக அங்கீகரிக்கப்பட்ட படங்கள், இயக்குனர்களைக் காட்டிலும் மாற்று சினிமா மொழியை உக்கிரமாகக் கையாண்ட கத்ரீன் ப்ரேலா, ஒட்டிஞ்ஜர், பசோலினி, ஹொடரோவ்ஸ்கி போன்றவர்களே சாருவின் அக்கறைக்குரியவர்களாக இருக்கிறார்கள். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது. ரூ.170/-