சுஜாதாவின் குறுநாவல்கள் 2

சுஜாதா சுஜாதா குறுநாவல்கள் இரண்டாம் தொகுதியில் முதல் தொகுதியைப் போலவே பத்துக் குறுநாவல்கள் இடம்பெறுகின்றன. பெருநகர் சார்ந்த மனோபாவங்களையும் நெருக்கடிகளையும் ஒரு வலைப்பின்னல் போன்ற கதையமைப்பினால் எழுதிச் செல்லும் சுஜாதாவின் இந்தக் குறுநாவல்களில் பல அவை வெளிவந்த காலத்திலிருந்து தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருபவை. இந்தத் தொகுதியில் உள்ள குறுநாவல்களை மொத்தமாக வாசிக்கும் போது நவீன வாழ்க்கை என்ற சிக்கலான பொறியமைப்பிற்குள் தன்னிச்சையின்றிக் கொண்டு செலுத்தப்படும் மனிதர்களின் போராட்டங்கள் உக்கிரமாக எழுதப்படுகின்றன. இந்தப் பொறியமைப்பிற்குள் சுய தேர்வுகளுக்கு இடமில்லை. தற்செயல்கள், அபத்தங்கள் வழியே மீள முடியாத சுழல்களுக்குள் சிக்கிக் கொள்கிறவர்கள்தான் சுஜாதாவின் பெரும்பாலான கதாபாத்திரங்கள். ரூ.350/-

சுஜாதாவின் குறுநாவல்கள் 1

சுஜாதா இந்த முதல் தொகுதியில் இடம்பெறும் குறுநாவல்களில் பெரும்பாலானவை குற்றம், பிறழ்வு, மனித நடத்தையின் விசித்திரத்தோடு தொடர்புடையவை. அவை குற்றங்களின் மனோரீதியான ஊற்றுகளைத் தேடிச் செல்பவை. மனிதர்களின் பிறழ்வுகளை அவர்களின் அந்தரங்க மற்றும் சமூக வாழ்வின் பின்புலத்தில் வைத்துப் பார்க்க முயல்பவை. தம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்கள் வழியே செலுத்தப்படும் மனிதர்களின் செயல்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவை. இந்தக் குற்றங்களுக்குப் பின்னே இருக்கும் காரணங்கள் எளிமையானவை. பாலியல் சார்ந்த பிறழ்வுகள், அந்தரங்க ஆசைகளுக்கும் சமூக நியதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள், மனித மனதின் அடியாழத்தில் நீக்கமுடியாத குற்ற வேட்கை, எல்லா உறவுகளுக்குள்ளும் காத்திருக்கும் துரோகத்தின் நிழல், ஆளுமைச் சிதைவுகளை உருவாக்கும் புறச்சூழல்கள், நவீன வாழ்க்கை முறையின் விசித்திரங்கள், குழப்பங்கள், நிராசைகள், பேராசைகள், இயலாமைகள் என இவை அனைத்தும் எந்த ஒரு எளிய சாதாரண மனிதனையும் எந்தக் கணத்திலும் குற்றம் என்ற எல்லைக்குள் கொண்டு செலுத்தக்கூடியவை என்பதையே இந்தக் குறுநாவல்கள் பேசுகின்றன. இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் யாரும் எதிர்மறை கதாபாத்திரங்கள் அல்லர். இக்கதைகளில் குற்றங்களுக்குப் பலியாகிறவர்கள் போலவே அந்தக் குற்றங்களை இழைப்பவர்களும் வாழ்வின் துர்க்கனவுகளுக்குப் பலியானவர்களே. ரூ.380/-

சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி

சுஜாதா சுஜாதாவின் படைப்புகளை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் ஏற்கனவே அவருடைய குறுநாவல்களை இரண்டு தொகுதிகளாக கடந்த ஆண்டு பதிப்பித்தது. அந்த வரிசையில் அவரது குறுநாவல்களின் மூன்றாவது தொகுதி இது. இந்தத் தொகுதியில் கணேஷ் – வசந்த் இடம்பெறும் குறுநாவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் துப்பறியும் கதைகள் அல்லது குற்றம் சார்ந்த கதைகளின் இயல்பில் பெரும் மாறுதல்களைக் கொண்டுவந்தவர் சுஜாதா. குற்றங்களின் உளவியல் ரீதியான பின்புலங்கள் தர்க்க ரீதியான, அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த அணுகுமுறை ஆகியவை அவரது துப்பறியும் கதைகளை தனித்துவம் உள்ளதாக்குகின்றன. அந்தக் குற்றக்கதைகளில் இடம் பெறும் துல்லியமான பின்புலம் சார்ந்த விவரணைகளும் பாத்திர உருவாக்கமும் சம்பவங்களின் யூகிக்க முடியாத நூதனமான திருப்பங்களும் இந்தக் கதைகளை மர்மக்கதைகள் என்கிற எல்லையைத் தாண்டி முக்கியத்துவம் பெறச்செய்கின்றன. ரூ.500/-

சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி

சுஜாதா சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கணேஷ்-வசந்த் குறுநாவல்களில் இது இரண்டாவது. கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்கள் ஒரு மர்மக்கதை ஆசிரியரின் உத்தேசங்களை நிறைவேற்றும் சாகசப்புனைவுகள் அல்ல. மாறாக, தர்க்க ஒழுங்கும் மனித இயல்பின் முரண்பாடுகளும் பலகீனங்களும் கொண்டவை. இந்த அம்சமே சுஜாதாவின் துப்பறியும் கதாபாத்திரங்களை பிற சாகச கதாபாத்திரங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை. இதன் காரணமாகவே கணேஷ்-வசந்த் வாசகர்களின் மனதில் இவ்வளவு நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குற்றத்தோடும் வன்முறையோடும் கொண்டிருக்கும் உறவைவிட, மனித இயல்புகள் சார்ந்து வெளிப்படுத்தும் நுட்பங்களே அதிகமானவை. சுஜாதாவின் அங்கதம் மிகுந்த நடை அதன் உச்சங்களைத் தொடுவது கணேஷ்-வசந்த் கதைகளிலேயே என்பதற்கு இந்தக் குறுநாவல் தொகுதியும் ஒரு உதாரணம். சுஜாதாவின் எழுத்து நடையைப்போலவே கணேஷ் -வசந்த் கதாபாத்திரங்களும் முதுமை அடைவதே இல்லை. ரூ.300/-

பெண் இயந்திரம்

சுஜாதா நவீனயுகப் பெண்களை, அவர்களின் துயரங்களை, சவால்களை, துல்லியமாகச் சித்தரித்த படைப்பாளிகளில் சுஜாதாவின் இடம் முக்கியமானது. அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் நாடகங்களிலும் – இந்த பாத்திரங்கள் பெண்ணின் புதிய அடையாளத்தை, சக்தியை தீர்க்கமாக வெளிப்படுத்துவதைக் காணலாம். பெண்களின் மீது படியும் வேதனைகளையும் குற்ற நிழல்களையும் அவர் மிகுந்த பரிவுடனும் மிகையின்றியும் சித்தரிப்பதற்கு மற்றொரு உதாரணம் பெண் இயந்திரம். சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு புதிய பதிப்பாக இந்த நாவல் வெளிவரும் சந்தர்ப்பத்தில் நம் காலத்தின் மகத்தான கலைஞனின் வெற்றிடம் நம்மை அழுத்துகிறது. ரூ.90/-

பதவிக்காக

சுஜாதா இந்திய ஜனநாயகம் என்பது எவ்வளவு குரூரமான போலி நாடகம் என்பதைக் கடந்தகால, நிகழ்கால சரித்திரம் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சுஜாதாவின் இந்த நாவல் குற்றமும் துரோகமும் எவ்வாறு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறுகின்றன என்பதை விறுவிறுப்புடன் சித்தரிக்கிறது. அரசியல் சூதாட்டம் பற்றித் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த நாவல் இது. ரூ.300/-

நிலா நிழல்

சுஜாதா குடும்பம், கிரிக்கெட்,கல்வி, காதல், நண்பர்கள் என்று வெவ்வேறு நிலைகளில் பயணிக்கும் முகுந்தனைக் கொண்டு செலுத்தும் ஆதார உணர்ச்சி எது? சுஜாதாவின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றான நிலா நிழல், குழந்தைப் பருவத்தை இழந்து இளமையை அடையும் காலத்தின் வேட்கையையும் கனவையும் கவித்துவத்துடன் வரைந்து செல்கிறது. ரூ.115/-

எப்போதும் பெண்

சுஜாதா இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின் பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன், பக்தியும் தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள். ரூ.140/-

கொலையுதிர் காலம்

சுஜாதா அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது. ரூ.250/-

ரத்தம் ஒரே நிறம்

சுஜாதா சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சுஜாதாவின் ‘ரத்தம் ஒரே நிறம்.’ இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்தப் படுகொலைகளும் குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன. தனிமனித விருப்பு வெறுப்புகளும், இலட்சியவாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சிப் பெருக்கையும் துயரங்களையும் பிரமாண்டமாகச் சித்தரிக்கும் சுஜாதா சரித்திரப் புனைகதை வடிவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறார். குமுதத்தில் ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ என்ற பெயரில் சில அத்தியாயங்கள் வெளிவந்து கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்ததால் நிறுத்தப்பட்டு மீண்டும் ‘ரத்தம் ஒரே நிறம்’ என்ற பெயரில் எழுதப்பட்டது இந்த நாவல். ரூ.260/-