தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்

திரைப்பட இயக்குநர் பாலா எழுதிய  ‘இவன்தான் பாலா’ என்று ‘ஆனந்த விகடன்’ வெளியிட்ட தொடரிலும் நூலிலும் இந்தத் தொகுப்பின் கதையான ‘இடலாக்குடி ராசா’வைக் குறிப்பிட்டு  அந்தக் கதைதான் தனது சினிமா நுழைவுக்கான காரணம் என்று நன்றியுடன் குறிப்பிட்டபின், இந்த முதல் தொகுப்புக்கான தேடல் இருந்தது. ஆனால், தொகுப்பு பதிப்பில் இல்லை. 33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கதாசிரியனின் முதல் சிறுகதைத் தொகுப்பு மறுபதிப்பு வருவதென்பதும், அது அவன் வாழும் காலத்தில் நடக்கிறது என்பதும், அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் கலவையான உணர்ச்சிகளைத் தருகின்றது. – நாஞ்சில் நாடன் ரூ.90/-

திருச்செங்கோடு

கையைப் பிடித்து மெதுவாய்க் கூட்டிப் போனான். பாதம் முழுக்க நசநசத்துப் பாறை நனைந்தது. வழுக்கியது. சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றாள். மேலே இன்னும் கழுகு பறந்து கொண்டிருந்தது. மலையின் சரிவு முழுக்க மரங்கள். எந்த மரம் அந்த வேங்கை? சரிவின் கோடியில் பூக்களால் பொலி யும் அந்த மரம். அதனடியில் தலைவிரிகோலமாய் ஒரு பெண். யாரவள்? முகம் பளிச்சிட்டுத் தெரிகிறது. இவளேதான். இவளே தான்… ரூ.125/-

ஊமைச்செந்நாய்

ஜெயமோகனின் சிறுகதை. ஆதிக்க மனோபாவம் கொண்ட ஒருவனிடம் அடிமையாய் கிடக்கும் மனிதனின் செயல்பாடுகளை, மனநிலையைச் சித்திரிக்கும் சிறுகதை. ரூ.160/-

வண்ணநிலவன் சிறுகதைகள்

1970 செப்டம்பரில் எனது முதல் சிறுகதை வெளியானது. எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசையினால் கதை எழுத வரவில்லை. எட்டு, ஒன்பது வயதிலிருந்தே கதை படிக்கிற ஆர்வம் இருக்கிறது. Ôஎமிலி ஜோலாÕ எவ்வளவு புகழ்பெற்ற எழுத்தாளர் என்பதெல்லாம் தெரியாமலேயே, ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து நூலகத்திலிருந்த அவரது நாவல் மொழிபெயர்ப்புகளை வாசித்தேன். ‘வாசிக்க வேண்டும் என்ற மாளாத ஆசை என்னை சதா இயக்கியது. கதைகளின் மீது இருந்த தீராத கவர்ச்சி என்னை இழுத்துச் சென்றது. வாசித்துக் கொண்டிருப்பதே போதும் என்று தோன்றவில்லை. நாமும் எழுதிப் பார்த்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் இது. -வண்ணநிலவன்   ரூ.550/-

வெளியில் ஒருவன்

முதல் தொகுப்பினை மறுபடியும் கையில் எடுத்து வாசித்துப் பார்ப்பது என்பது பழைய கறுப்பு வெள்ளை புகைப்படத்தைக் கையில் வைத்து பார்ப்பதை போன்றது, நானும் வளர்ந்திருக் கிறேன், எனது எழுத்தும் வளர்ந்திருக்கிறது, இந்த மாற்றங் களை ஏற்படுத்திய காலம் இரண்டினையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது, முதல்தொகுப்பு வெளியாகின்ற நாளில் இதை எத்தனை பேர் வாசிக்கப்போகிறார்கள், எவ்வளவு வரவேற்பு பெறும் எனத் தெரியாத நடுக்கமும் கவலையும் இருந்தது, ஆனால் புத்தகம் வெளியான சில வாரங்களிலே பெரியவரவேற்பு பெற்றதுடன் இன்றுவரை எனது முதற்தொகுப்பின் கதைகளைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகின்றவர்களைக் காணமுடிகிறது, அந்த வகையில் நான் பாக்கியசாலி, இன்று எனது முதற்தொகுப்பு அப்படியே மறுபதிப்பு காணுவது சந்தோஷம் தருகிறது. என்றோ பள்ளிவயதில் நோட்டில் ஒளித்து வைத்த மயிலிறகை திரும்பக் கண்டெடுத்துப் பார்ப்பது போல மனது குதூகலம் அடைகிறது. -எஸ்.ராமகிருஷ்ணன் ரூ.90/-

எஸ்தர்

1975 ஏப்ரல் வாக்கில் திடீரென்று நண்பர் விக்ரமாதித்யன் சென்னைக்கு என்னைத் தேடி வந்தார். “பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் படித்த நண்பர்கள் சிலர் சேர்ந்து எனது சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர விரும்புவதாகவும், கதைகளைக் கொடுங்கள்” என்று கேட்டார். கைவசமிருந்த கதைகளை நம்பிராஜன் வாங்கிக் கொண்டு திருநெல்வேலிக்குப் போனார். அப்போது சிறுகதைத் தொகுப்பு வரவேண்டுமென்ற ஆசையைவிட வேலை கிடைக்கவேண்டும் என்ற ஆசை தான் அதிகமாக இருந்தது. வேலை தேடி அல்லாடிக் கொண்டிருந்தேன். சிறுகதைகளை விக்ரமாதித்யன் வாங்கிச் சென்றதெல்லாம் மறந்தே போய்விட்டது. இரண்டு மாதம் கழித்து எனது சென்னை முகவரிக்கு எஸ்தர் பிரதிகள் தபாலில் வந்துசேர்ந்தன. ஆச்சரியமாக இருந்தது… எஸ்தர் தொகுப்பு தமிழிலக்கிய உலகத்தில் நான் எதிர் பார்த்திராத அளவுக்கு முக்கியத்துவமும் பெற்றுவிட்டது. – வண்ணநிலவன் ரூ.90/-

ஊரின் அழகான பெண்

சாருநிவேதிதா மொழிபெயர்த்த புனைகதைகள் அடங்கிய இத்தொகுப்பு அதன் தேர்வு சார்ந்தும் மொழியாக்கம் சார்ந்தும் மிகவும் முக்கியமானவை. லத்தீன் அமெரிக்க, அரேபிய நாடுகளிலிருந்து இக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது தற்செயலானதல்ல. லத்தீன் அமெரிக்காவின் அரசியல் போராட்டம் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த காலத்தில், தமிழில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தையும் இன்று இஸ்லாமிய நாடுகள் வல்லரசுகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அரேபிய இலக்கியத்தையும் மொழிபெயர்க்கும் சாரு நிவேதிதாவின் தேர்வுகள் இலக்கிய முக்கியத்துவமும் அரசியல் முக்கியத்துவமும் ஒன்று சேர்ந்தவை என்பதற்கு இந்த நூல் ஒரு சாட்சியாகத் திகழ்கிறது. ரூ. 190/-

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி

மனதின் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக்கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான், கதைக்கருவிலும் கதை சொல்லும் முறையிலும் கவித்துவமான மொழியிலும் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவை எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள். ஒரு படைப்பு திரும்பத் திரும்ப வாசிக்கப்படுவதும், வேறு கலைவடிவங்களுக்கு உருமாறுவதும் தற்செயலானதில்லை. மாறாக, அந்தப் படைப்பு மற்றும் படைப்பாளி காலத்தின் ஊடாகத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் தாக்கத்தின் அடையாளம் என்றே கூறவேண்டும். எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியச்சூழலோடு ஏற்படுத்தி வரும் தாக்கமும் இத்தகைய ஒன்றே. எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், உருது, தெலுங்கு, கன்னடம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி

வரலாறு, எதார்த்தம், புனைவு என்ற எல்லைகளைக் கடந்து செல்கின்றன எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள். மனித வாழ்வின் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையிலும் பெருகிடும் வாழ்வின் மகத்துவங்களை அடையாளம் காட்டுகின்றன இக்கதைகள். காலனியம் ஏற்படுத்திய மோசமான விளைவுகளைத் தொடர்ந்து எஸ்.ரா. தனது சிறுகதைகளில் பதிவு செய்து வருகிறார். அவை அழுத்தமான வரலாற்று நினைவுகள். குறுங்கதைகள், மிகைபுனைவுகள், அதிகதைகள், மாய யதார்த்தக் கதைகள், வரலாற்று மீள்புனைவுகள், நடப்பியல் கதைகள், உருவகக் கதைகள் எனப் புனைவின் எல்லையற்ற சாத்தியங்களை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டுவதே இவரது எழுத்தின் சாதனை. எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், உருது, தெலுங்கு, கன்னடம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. ரூ.410/-

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி

நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணன் 2005 வரை எழுதிய 90 கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு. ரூ.630/-