தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)

சுஜாதா சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத நடத்தைகளும் உருவாக்கும் அர்த்தமின்மையும் அங்கதமும் இக்கதைகளைத் தனித்துவமுள்ளதாக்குகின்றன. மனித மனதின் இருள்வெளிகள், தனிமைகள், அவமானங்கள், சிறுமைகள், வினோதங்கள், சமூகச் சீரழிவுகள் எனப் பல்வேறு தளங்களில் இக்கதைகள் சஞ்சரிக்கின்றன. எழுதப்பட்ட காலத்திலிருந்து சுஜாதாவின் வாசகர்களின் நினைவுகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ‘பாலம்’, ‘குதிரை’ ‘ஒரு இலட்சம் புத்தகங்கள்’, ‘இரு கடிதங்கள்’, ‘தனிமை கொண்டு’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ரூ.440/-

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி)

சுஜாதா சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கின்றன. வெளிவந்த காலத்தில் வாசகர்களிடம் ஆழ்ந்த சலனங்களை உருவாக்கிய ‘நகரம்’, ‘பார்வை’, ‘ரேணுகா’, ‘எல்டொராடோ’, ‘கால்கள்’, ‘தீவுகள் கரையேறுகின்றன’ உள்ளிட்ட பல முக்கியக் கதைகள் அடங்கியது இத்தொகுப்பு. வாழ்வின் சில ஆதார குணங்களையும் அபத்தங்களையும் மிக நெருக்கமாகத் தொட்டுச் செல்லும் இக்கதைகள் காலமாற்றத்தால் புதுமை குன்றாதவை. ரூ.400/-

லா.ச.ராமாமிருதம் கதைகள்-இரண்டாம் தொகுதி

லா.ச.ராமாமிருதம் உபாசகன் என்ற சொல்லிற்கு ஒரு படைப்பிலக்கியம் சார்ந்த உருவகம் இருக்கும் என்றால் அது லா.ச.ராமாமிருதமே. இந்திய மரபின் ஆன்மீகத்தையும் சிருங்காரத்தையும் மாபெரும் அழகியல் தரிசனமாக மாற்றுவதில் சிகரத்தை எட்டியவை அவரது எழுத்துக்கள். மனதின் புதிர்மிகுந்த பாதைகளில் ஆயிரம் ஆயிரம் கனவுகளின் வண்ணங்களை உருவாக்குபவை இந்தக் கதைகள். அவை மௌனங்களின் பெரும் விம்முதலைத் தருகின்றன. ரகசியங்களின் பிரம்மாண்டமான விகாசத்தைக் கட்டி எழுப்புகின்றன. ஒருபோதும் பெயரிடமுடியாத, வரையறுக்கவியலாத உணர்ச்சிகளால் நம்மைத் ததும்பவைக்கின்றன. நான்கு தொகுதிகளைக் கொண்ட அவரது சிறுகதைகள் வரிசையில் இரண்டாவது தொகுதியான இந்நூலில் அவரது 30 கதைகள் இடம்பெறுகின்றன. ரூ.300/-

லா.ச.ராமாமிருதம் கதைகள்-முதல் தொகுதி

லா.ச.ராமாமிருதம் ‘நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்’ என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத்தை தமிழில் பாரதிக்குப்பின் அத்தனை மூர்க்கமாக நெருங்கிச் சென்றவர் லா.ச.ரா.வே என்று சொல்லும் அளவுக்கு அவரது மொழி மந்திரத்தன்மையும் விசையும் கொண்டதாக இருக்கிறது. அவரது கதைகள் ஒரு புதிர் விளையாட்டின் சூழ்ச்சி. அது வாசகனை சிலந்தி வலையினைப்போல கவ்விப் பிடிக்கிறது. பிறகு வேறொன்றாக உருமாற்றுகிறது. அவரது கதைகளுக்குள் செயல்படும் காலம் என்பது சமூகத்தினாலோ வரலாற்றினாலோ உருவாக்கப்படுவதில்லை. அது மனித மனதின் அமரத்துவம் வாய்ந்த கடக்க முடியாத தரிசனங்களாலும் தவிப்புகளாலும் பின்னப்படுகிறது. நவீன தமிழ் புனைகதை மொழியின் மகத்தான வெளிப்பாடாக லா.ச.ரா.வின் படைப்புகள் திகழ்கின்றன. நான்கு தொகுதிகளைக் கொண்ட அவரது சிறுகதைகள் வரிசையில் முதலாவது தொகுதியான இந்நூலில் அவரது 36 கதைகள் இடம்பெறுகின்றன. ரூ.300/-

விஞ்ஞானச் சிறுகதைகள்

சுஜாதா கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுஜாதா எழுதி வந்திருக்கும் விஞ்ஞானச் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு முதன் முதலாக வெளிவருகிறது. தமிழில் விஞ்ஞானக் கதைகளின் முன்னோடியான சுஜாதாவின் இப்படைப்புகளில் நிகழ்காலமும் எதிர்காலமும் அறிவியலும் புனைவும் யதார்த்தமும் கனவும் கலந்து மயங்குகின்றன. கால மாற்றத்தால் புதுமை குன்றாத இக்கதைகள் வாசகர்களின் மனதில் தீராத வினோதங்களைப் படைக்கின்றன. ரூ.340/-

ஸ்ரீரங்கத்து கதைகள்

சுஜாதா ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்கள், ஒரு காலம் கடந்துபோனதன் இழப்புகள், மாறுதல்களை எதிர்கொள்ள இயலாதவர்களின் சீரழிவுகள் என்பன இக்கதைகளின் பின்புலமாக இருக்கின்றன. இரண்டு உலகங்களுக்கிடையே அலைக்கழியும் ஒரு வாழ்க்கை முறையினை விவரிக்கும் ஸ்ரீரங்கத்துக் கதைகள் சுஜாதாவின் துல்லியமான சித்தரிப்பு முறையினால் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் உயிர்பெற்று எழச் செய்கின்றன. ரூ.300/-

சேகுவேரா வந்திருந்தார்

வா.மு. கோமு யாரும் பேசத் தயங்கும் உண்மைகளை, யாரும் சொல்லக் கூசும் ரகசியங்களை நேருக்கு நேர் பாசாங்கில்லாமல் முன்வைப்பவை வாமு.கோமுவின் கதைகள். வாழ்வின் அபத்த நிலைகள்மீது பரிகாசமும் சுய எள்ளலும் கொண்ட அவரது புனைவுலகம் தமிழ்வாழ்வின் அறியப்படாத புதிய பரப்புகளை அறியச் செய்கிறது. இத்தொகுப்பில் உள்ள கதைகள் அவரது படைப்பு மொழியின் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டுகின்றன. ரூ.180/-

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்-3

  சுஜாதா சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. இதற்கு முன்பு வெளிவந்த இரண்டு தொகுதிகளும் வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றதுடன் சுஜாதாவின் இலக்கிய ஸ்தானத்தை அவை திட்டவட்டமாக உறுதி செய்தன. இத்தொகுதியில் அவர் மத்தியமர் கதைகள் வரிசையில் எழுதிய கதைகளுடன் வேறு சில கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சமகால மத்தியதர வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் இக்கதைகளில் சில அவை வெளிவந்த காலத்தில் சர்ச்சைகளை உருவாக்கின. அபூர்வமான கதைசொல்லும் முறை, மின்னலைப் போல் வெட்டிச் செல்லும் நடை, அசலான மனிதர்களை மறுபடைப்புச் செய்யும் நுட்பம் ஆகியவற்றால் இக்கதைகள் தமிழ்ச் சிறுகதை மொழிக்கு பெரிதும் வளம் சேர்த்தவை. ரூ.320/-

காந்தியோடு பேசுவேன்

எஸ். ராமகிருஷ்ணன் எஸ். ராமகிருஷ்ணனின் பதிமூன்றாவது சிறுகதைத் தொகுதி. இந்த தொகுப்பின் விஷேசம் மகாத்மா காந்தி, டால்ஸ்டாய் என மகத்தான ஆளுமைகளின் வாழ்க்கையை தனது கதைகளின் பின்புலமாக்கியிருக்கிறார். ஆங்கிலோ இந்தியப் பெண், உலகத்திரைப்படவிழா, இசைதட்டின் முள்ளாக மாறிய ஒரு மனிதனின் வாழ்க்கை என மாறுபட்ட கதைக்களன்களுடன் புதிய கதை சொல்லும் முறையில் இக்கதைகள் புனைவின் முடிவற்ற சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுகின்றன. புதிய உரையாடல்களை சிந்தனையின் ஆழத்தில் துவக்கி வைக்கின்றன. ரூ.120/-

மழைமான்

எஸ். ராமகிருஷ்ணன் மொழியிலும் கதை சொல்லும் முறையிலும் தனக்கென தனித்துவமான ஒரு எழுத்து முறையை உருவாக்கிக்கொண்ட அரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு இது. இக்கதைகள் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது என்பதை அடையாளம் காட்டுகின்றன. நாம் வீழ்ச்சியின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அறம் அழிவது அன்றாட செயல்பாடாகி வருகிறது. இந்த அவலத்தையே எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் சுட்டிக்காட்டுகின்றன. கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ள இக்கதைகள் தமிழ் சிறுகதை உலகம் இதற்கு முன் அறியாத சாதனையாகும். ரூ.110/-