ராணியென்று தன்னையறியாத ராணி

ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகள் காலவெளியில் தன்போக்கில் நிகழும் மாற்றங்களில் கவனம் கொள்பவை. இவரது கூர்ந்த அவதானிப்பு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நேருக்கு நேர் பேசுவது போலவே பெரும்பாலான கவிதைகளில் மொழிகிறார். இதனால் ஓர் இயல்பான நெகிழ்வும் சரளமும் கவிதை மொழியில் கூடிவிடுகிறது. நேரடி கூறல், குறியீடுகள், புனைவுகள், கதைகள் இப்படியாகக் கவிதைகளை உருவாக்குகிறார். நவீன கவிதை மீதான நம்பிக்கைக்கு வலுவூட்டும் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. – ஷங்கர்ராமசுப்ரமணியன் ரூ.50/-

நீர் அளைதல்

Minimalist poetry என் ஆழ் மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று ‘நீர் அளைதல்’ தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப் பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப் பார்த்தவை இந்தக் கவிதைகள். – எம்.டி. முத்துக்குமாரசாமி ரூ.90/-

சூரியன் தகித்த நிறம்

தமிழ் மொழியின் பெரிய ஆளுமையான கவிஞர் பிரமிள் மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு இது. உலக இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்த நேரங்களில் தனக்குப் பிடித்த பல கவிதைகளைப் பிரமிள் மொழிபெயர்த்திருக்கிறார். ரூ.70/- பிரமிள்

சாத்தானுக்குப் பிரார்த்தனை விண்ணப்பங்கள்

தமிழ் வாசகர்களுக்கு ஓரளவு அறிமுகமாகியிருக்கும் எட்கர் ஆலன் போ, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், மல்லார்மே, போரிஸ் பாஸ்டர்நாக் முதலான உலகப் படைப்பாளர்களோடு, ஆஸ்திரேலியக் கவி ஏ. டி. ஹோப், ஆப்பிரிக்கக் கவி அமில்கர் கப்ரல், சீனக் கவி ஸி சுஅன், ஜப்பானியக் கவி டோஸிமி ஹோரியுஷி, மராட்டிய பௌத்தக் கவி பஹ்வான் ஷவை முதலான பல முக்கியப் படைப்பாளிகளின் கவிதைகள் புத்தகத்துக்கு அடர்த்தியும் மதிப்பையும் கூட்டுகின்றன. ரூ.70/- – கால சுப்ரமணியம்

எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை

என் எல்லாக் கவிதைகளின் கவிப்பொருளாகவும் நானே இருந்துகொண்டிருக்கிறேன். என் சுயசித்திரத்தை வரையும் செயலாகவே என் கவிதைகள் உருவாகின்றன. என் அகவுலகின் ரகசிய சலனங்களைக் கைப்பற்றக் கவிதை உதவியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் மிகவும் நேசிக்கும் இளமைப் பொலிவு இதன்மூலம் என் வசமாகியிருக்கிறது. ரூ.90/-

அவன் எப்போது தாத்தாவானான்

தமிழ்க் கவித்துவ மரபில் ஆழ்ந்த பிடிமானமும் தனித்துவத் திறனும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிஞரான விக்ரமாதித்யனின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இது. ரூ.100/-

மலாலா – ஓர் அறிமுகம்

துப்பாக்கி ஏந்திய தாலிபான்களுடன் பேனா ஏந்திப் போராடியவர் மலாலா. துப்பாக்கியால் துளைக்கப்பட்டும் மனம் தளராமல் பெண் கல்விக்காகப் போராடியதால் 17 வயதில் ‘அமைதிக்கான நோபல் பரிசை’ப் பெற்றிருக்கிறார். அப்படிப்பட்ட வீரப் பெண்ணின் வாழ்க்கை பற்றி அறிந்துகொள்வது நமக்கு அவசியமாகிறது. அந்த நோக்கத்தில் உருவானதே இந்த நூல். – பிரியா பாலு ரூ.60/-

மகாபாரதம்

சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநாசத்துக்குக் காரணமாகிற துரியோதனனைத் தியாகம் செய், சிறைப்படுத்து, நாடு கடத்து என்று அறம் சொல்கிற விதுரனும் அவர் மகன். இருவரின் மேலும் அவருக்குப் பட்சமும் இல்லை. பாதகமும் இல்லை. அவர்கள் யாரோ, அவர்களின் உள்ளங்கை ரேகையோடு, அவர்களின் இதயம் எப்படித் துடிக்கிறதோ அதை அப்படியே சொல்வதே வியாச லட்சணம். இன்னும் ஆழ்ந்து போனால், இந்தக் கதை, இந்த மனிதர்கள், எல்லாமும் அவருக்கு வெறும் உபகரணங்கள்தான். அவரிடம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளமும், தத்துவ ஞானமும், அவர் கட்டமைக்கும் தர்மங் களும், புறக்கணிக்கும் பழைமையும், புதுசாக உருவாக்கும் வாழ்க்கைத் தர்மங்களுமே நாம் நுணுகிக் கற்கத்தக்கவை. – பிரபஞ்சன் ரூ.300/-

நாடற்றவன்

2012இல் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது நாடற்ற ஒருத்தர் மரதன் ஓட்டத்தில் கலந்துகொண்டார். உலகத்திலே நாடு இல்லாத அத்தனை பேருக்கும் பிரதிநிதியாக ஓடினார். அவரை எப்படி மறக்கமுடியும்? அவர் முதல் மூன்று இடங்களுக்குள் வரவில்லை. ஒரு பதக்கமும் பெறவில்லை. உலகத்துக் கண்கள் அவரில் இருந்தன. நான் அவரை மட்டுமே பார்த்தேன். அவர்தான் என்னுடைய வீரர். – அ. முத்துலிங்கம் ரூ.225/-

தேநீர் மேசை

இக்கட்டுரைகளை எழுத அமர்ந்தபோது ஊர்நினைவுகள் பனிமூட்டமெனப் பெருகி என்னைச் சூழ்ந்துகொண்டன. இப்போது ஊர் என்னிடம் மேலும் பிரியம் கொண்டுவிட்டது. இவற்றை எழுதிக் கொண்டிருந்தபோது ஊரைப்பற்றியும் ஊரிலிருந்த மனிதர்களைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்ளாமல் விட்டது எவ்வளவோ என்ற மலைப்பு உருவானது. ஊரைப் பற்றி அறிந்துகொள்ளாதது நம் பெற்றோர் குறித்தும் மூதாதையர் குறித்தும் அறிந்துகொள்ளாததைப் போன்றது என்பேன். இக்கட்டுரைகளைப் படிக்கிறவர்களுக்கு அவரவரது சொந்த ஊரைப் பற்றிய ஞாபகங்கள் உயிர்பெற்றால், அதுவே என் மகிழ்ச்சி. – அழகிய பெரியவன் ரூ.70/-