பேசிக்கடந்த தூரம்

எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்கள், கேள்வி-பதில்கள் என்பது எழுத்திற்கு அப்பால் எழுத்தாளனின் ஆளுமையை அடையாளம் காட்டும் முயற்சிகள். சொந்த வாழ்க்கை அன்றாட அனுபவங்களை, படித்த, கேட்ட, பார்த்த நிகழ்வுகளை சமூகம் குறித்த உரத்த சிந்தனைகளை, சமகால இலக்கியப் போக்குகளைப் புனைவின் நிழல்படாமல் பேசி அறிந்து கொள்ளும் ஒரு சவாலே நேர்காணல்கள். இது எஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த நேர்காணல்களின் தொகைநூல். முன்னதாக, எப்போதுமிருக்கும் கதை என்ற அவரது நேர்காணல்களின் இரண்டாவது தொகுப்பு நூல். பேச்சிற்கும் எழுத்திற்கும் இடைவெளியற்றவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்பதையே இந்த நேர்காணல்கள் அடையாளம் காட்டுகின்றன. ரூ.130/-

அரவான்

எஸ். ராமகிருஷ்ணன் இந்த நாடகங்கள் வாழ்வைத் தீவிர நிலையில் எதிர்கொள்ளும் தருணங்களின் வெளிப்பாடு, தனக்குத்தானே ஒருமனிதன் உரையாடிக் கொள்ளும் நெருக்கடியிலிருந்துதான் நாடகம் பிறக்கிறது. அதிகாரத்தை எதிர் கொள்வதும், வரலாற்றை, கலாச்சாரப் புனைவுகளைக் கட்டுடைப்பதும், மனப் பிறழ்வுகளின் மீது மையம் கொள்வதும் என இந்த நாடகங்கள் புதிய நிகழ்வெளிக்கான சாத்தியங்களை உருவாக்கு கின்றன. எஸ். ராமகிருஷ்ணனின் ஒன்பது நாடகங்கள் கொண்ட தொகுப்பு இது. இந்த நாடகங்கள் நிகழ்த்தப்பட்டபோது மிகுந்த வரவேற்பு பெற்றதோடு சங்கீத நாடக அகாதமியின் தேசிய நாடகவிழாவிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள அரவான் நாடகம் மலையாளம் மற்றும் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.90/-

சுஜாதாவின் நாடகங்கள்

சுஜாதா சுஜாதாவின் நாடகங்களின் முழுத் தொகுப்பு இது. அவரது புகழ் பெற்ற நாடகங்களான அன்புள்ள அப்பா, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, ஊஞ்சல், பாரதி இருந்த வீடு, அடிமைகள் உள்ளிட்ட 22 நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. வாசிக்கப்பட்டபோதும் நிகழ்த்தப்பட்டபோதும் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் ஆழ்ந்த மனக்கிளர்ச்சியை இந்த நாடகங்கள் ஏற்படுத்தின. உரையாடல்களின் கூர்மையும் கதாபாத்திரங்களிடையே நிகழும் தீவிர மாறுதல்களும் உறவுகளின் விசித்திரங்களும் இந்த நாடகங்களை நவீன வாழ்க்கை முறையின் துல்லியமான சித்திரங்களாக்குகின்றன. ரூ.500/-

என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது

செழியன் ‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அடையாளப்படுத்தப்பட்டவர். தேசிய விடுதலைப் போராட்ட இலக்கியத்தில் முன்னோடியானவையாக அமைந்த கவிதைகளில் செழியனின் கவிதைகளும் அடங்கும். இதுவரை இவரது ஐந்து சிறுகவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அரசியல் முக்கியத்துவம் பெற்ற ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவருடைய நான்கு நாடகங்கள் டொரன்டோ, கனடாவிலும், ‘வேருக்குள் பெய்யும் மழை’ இலண்டனிலும் மேடை ஏற்றப்பட்டுள்ளன. மனித வாழ்வின், மனித உறவுகளின் சிறு சிறு கணங்கள்கூட காவிய வலிமை பெற்ற உயர்பெரும் பொழுதுகளாக மாற்றம் பெறுகின்ற அற்புத உலகமாக நாடகங்கள் அமைய முடியும். இத்தகைய புரிந்துணர்வும் புலப்பதிவும் ஒருங்கே அமையப் பெற்றவர் செழியன். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து டொரன்டோ கனடாவில் வாழ்கின்ற செழியனின் படைப்புகளுக்குப் புலம்பெயர்ந்த வாழ்வு புதிய வண்ணங்களை வழங்கியிருக்கிறது. புதிதாக இவர் ‘வானத்தைப் பிளந்த கதை’ என்கின்ற அனுபவத் தொடரை எழுத ஆரம்பித்துள்ளார். ரூ.50/-

ஆடு ஜீவிதம்

பென்யாமின் இது மல்லாந்து கிடக்கும் பாலைவனத்தில் உருவான அனலடிக்கும் அனுபவ’ கதை. அரைஜாண் வயிற்றுக்காக வீட்டையும், நாட்டையும் பிரிந்து மணல் காட்டுக்குப் போய் அகப்பட்டு’கொண்ட நஜீப் ஸ்பரிசம், வாசனை, அன்பு, ஆசை என்ற மனித நிலைகளை முற்றிலுமாகப் பறிகொடுத்துவிட்டு ஆட்டுக்கிடையில் ஒரு ஆடாகவே மாறிப்போன அவலம் மனம் கசியச் செய்கிறது. 2010 கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்நாவல் வித்தியாசமான ஒரு வாசக அனுபவத்தை தருகிறது. ரூ.140/-

ஊரின் மிக அழகான பெண்

சாரு நிவேதிதா சாருநிவேதிதா மொழிபெயர்த்த புனைகதைகள் அடங்கிய இத்தொகுப்பு அதன் தேர்வு சார்ந்தும் மொழியாக்கம் சார்ந்தும் மிகவும் முக்கியமானவை. லத்தீன் அமெரிக்க, அரேபிய நாடுகளிலிருந்து இக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது தற்செயலானதல்ல. லத்தீன் அமெரிக்காவின் அரசியல் போராட்டம் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த காலத்தில், தமிழில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தையும் இன்று இஸ்லாமிய நாடுகள் வல்லரசுகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அரேபிய இலக்கியத்தையும் மொழிபெயர்க்கும் சாரு நிவேதிதாவின் தேர்வுகள் இலக்கிய முக்கியத்துவமும் அரசியல் முக்கியத்துவமும் ஒன்று சேர்ந்தவை என்பதற்கு இந்த நூல் ஒரு சாட்சியாகத் திகழ்கிறது. ரூ.190/-

நாளை வெகுதூரம்

ஜி. குப்புசாமி ஜி.குப்புசாமி மொழிபெயர்த்துள்ள இத்தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகள் சமகால உலக புனைகதை இலக்கியத்தின் பல்வேறு போக்குகளை பிரதிபலிப்பவை. கதைகளின் தேர்வும் மொழியாக்கத்தின் சரளமும் காரணமாக இக்கதைகள் அவை இதழ்களில் வெளிவந்த காலத்திலேயே வாசகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவை. ரூ.130/-

கன்யாவனங்கள்

புனத்தில் குஞ்ஞ்ப்துல்லா 70களுக்குப் பின் அரபு நாடுகளின் புதிய எண்ணெய் வளங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளைத் தேடி மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஏராளமானோர் புலம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் பாலை நிலத்தின் கடும் போராட்டங்களும் நவீனத்துவத்தின் வசதிகளும் மத ரீதியான சமூக அரசியல் அமைப்பின் கெடுபிடிகளும் நிறைந்த ஒரு புதிய எதார்த்தத்தை எதிர்கொண்டனர். இந்த எதார்த்தத்தினூடே மனித ஆசாபாசங்களின், ஒடுக்கப்பட்ட கனவுகளின், தீர்க்கமுடியாத பெருமூச்சுகளின் கேவல்களையும் வன்மங்களையும் சித்தரிக்கிறது கன்யாவனங்கள். செல்வமும் காதலும் காமமும் பாவமும் ஆபத்துகளும் சூழ்ந்த ஒரு உலகத்தின் வசீகரத்தையும் இருளையும் இந்நாவலில் சித்தரிக்கிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. முன்னணி மலையாள நாவலாசிரியரான புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் புகழ்பெற்ற படைப்பு இது. ரூ.85/-

திசை

சி.வி பாலகிருஷ்ணன் கேரளத்தில் கஸபா என்னும் கற்பனை நகரம் ஒன்றை எழுப்பிக் காட்டி, அதன் மனிதர்களின் வழி இன்றைய வாழ்வு நிலை எவ்வளவு பயங்கரமானதொரு திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை இந்நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது. அதிகார வர்க்கம் விளிம்பு நிலை மனிதர்கள் மேல் செலுத்தும் அடக்குமுறைகள். கம்யூனிசம் என்னும் சித்தாந்தமே உருக்குலைந்துவிட்ட நிலைமை. புரட்சி என்னும் ஒன்று இனி உண்டா என்ற ஏக்கம், மனிதாபிமானம் மதிப்பிழந்து அராஜகம் மட்டுமே வெற்றிபெறுகின்ற புதிர், இவையெல்லாவற்றையும் கஸபா நகரத்து மனிதர்களின் வெளிவர முடியாத புதிர்ச்சூழலுக்குள் (லாபிரிந்த்) நிகழும் வாழ்க்கை நிகழ்வுகளின் மூலம் அறியும்போது நாம் இப்போது எந்த திசையில் இருக்கிறோம் என்ற கேள்வியை வாசகனுக்குள் இந்த நாவல் நிச்சயம் எழுப்பும். இன்றைய தலைமுறை மலையாள நாவலாசிரியர்களில் முக்கியமானவர் சி.வி.பாலகிருஷ்ணன். அவருடைய புதிர்த்தன்மை மிகுந்த எழுத்து மலையாளத்தில் மிகவும் ரசிக்கப்படுகிறது. ரூ.140/-

காளி நாடகம்

உன்னி ஆர் தற்கால மலையாளச் சிறுகதையில் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.உண்ணியின் சிறுகதைத் தொகுப்பு இது. இதை மலையாளச் சிறுகதையின் இன்றைய போக்கைச் சுட்டுக்காட்டும் ஒரே தொகுப்பாகவும் கொள்ளலாம். சமகாலப் பார்வையிலிருந்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்யும் இக்கதைகள் நாம் எதிர்கொள்ளும் வாழ்வின் சாயல்களை எதிர்கொள்கிறது. ரூ.50/-