ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்

சுஜாதா இன்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் உண்மையில் ஹைக்கூதானா? ஹைக்கூவின் அழகியல் மற்றும் தத்துவார்த்த இலக்கணம் என்ன? கவிதைக்கும் ஹைக்கூவுக்குமான வித்தியாசங்கள் யாவை? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விரிவான உதாரணங்களுடன் பதிலளிக்கிறது இந்த நூல். ஹைக்கூ என்ற இலக்கிய வடிவத்தினூடே அதன் ஆழமான வாழ்வியல் நோக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறார் சுஜாதா ரூ.50/-

தனிமையின் வழி

சுகுமாரன் அற உணர்விற்கும் குற்ற உணர்விற்கும் இடையேஎப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நிம்மதியின்மையின் நெருப்பிலிருந்து பிறந்தவை சுகுமாரனின் இக்கட்டுரைகள். வதைபடுதல்கள், சுயநிந்தனைகள், குடித்துத் தீராத கசப்புகள், ஒருபோதும் பதில் இல்லாத கேள்விகள், ரகசியமாகத் துடைத்துக்கொண்ட கண்ணீர்த் துளிகள், நெகிழ்ச்சியின் விம்முதல்கள் என விரியும் இந்நூல் சுயமழிந்த குரலில் நவீன மனித இருப்பின் சஞ்சலங்களை எதிர்கொள்கின்றன. உரைநடையில் தனது கவித்துவத்தின் சலுகைகள் எதையும் பயன்படுத்திக் கொள்ளாத சுகுமாரன், கவிதையின் தீராத துயரத்தை இக்கட்டுரைகளிலும் தொடர்ந்து செல்கிறார். ரூ.85/-

நவீன தமிழிலக்கிய அறிமுகம்

ஜெயமோகன் நவீன இலக்கியத்தினுள் நுழைய விரும்பும் வாசகனுக்குரிய முழுமையான எளிய கையேடு இது. நவீன இலக்கியம் என்றால் என்ன, அதனுள் நுழையும்போது வரும் சிக்கல்கள் என்ன, ஒரு வாசகனாக எப்படி நம்மைத் தயாரித்துக்கொள்வது போன்ற வினாக்கள் எளிமையாக இந்நூலில் விளக்கப்படுகின்றன. நூற்றாண்டுகால நவீனத் தமிழிலக்கியத்தின் சுருக்கமான வரலாறு அளிக்கப்பட்டுள்ளது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கியஇயக்கங்கள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. இன்றியமையாத இலக்கியக் கலைச்சொற்களுக்குப் பொருள் அளிக்கப்பட்டுள்ளது. முக்கியப் படைப்பாளியும் இலக்கிய விமர்சகருமான ஜெயமோகன் அவரது தெரிவில் நவீன இலக்கியத்தின் சிறுகதை, நாவல், கவிதை ஆகியவற்றிலும் வணிக எழுத்திலும் உள்ள குறிப்பிடத்தக்க நூல்களின் பட்டியல் ஒன்றை அளித்துள்ளார். மேலும் இந்நூலில் இலக்கியஆக்கம். இலக்கிய வாசிப்பு என்ற இரு தளங்களையும் ஆசிரியர் மிக எளிமையாக விளக்குவதும் குறிப்பிடத்தக்கது ரூ.175/-

இலைகளை வியக்கும் மரம்

எஸ். ராமகிருஷ்ணன் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள், அவரது கதைகளைப் போலவே மிக நுட்பமானவை. ஊர்சுற்றுதல், கவிதைகள், நாட்டார் இலக்கியம், இலக்கிய ஆளுமைகள், தினசரி வாழ்வின் குறிப்புகள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் இந்தப் பதிவுகளின் அடித்தளமாக இருப்பது எதிலும் தேங்கிவிடாத படைப்பாளியின் முடிவற்ற தேடல். தினசரி வாழ்வின் ஊடாக வெளிப்படும் அற்புதக் கணங்களை அடையாளம் காண்பதிலும், இயற்கையின் தீண்ட முடியாத தனிமையை எதிர்கொள்வதிலும், கவிதையின் ரகசியச் செயல்பாட்டிலும் அலைவு கொள்ளும் இந்தக் கட்டுரைகள் புதிய வாசிப்பு அனுபவத்தை உருவாக்கக்கூடியவை. இணையத்திலும் சிற்றிதழ்களிலும் வெளியான இருபது முக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு. ரூ.90/-

கணையாழி கடைசிப் பக்கம்

சுஜாதா சுஜாதா கணையாழியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல், வேடிக்கைகள் என விரியும் இப்பத்திகள், வெளிவந்த காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டவை; விவாதிக்கப்பட்டவை. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.என்ற பெயரிலும் சுஜாதா என்ற பெயரிலும் ‘நீர்க்குமிழிகள்’, ‘பெட்டி’, ‘கடைசிப்பக்கங்கள்’ எனப் பல தலைப்புகளில் இவை எழுதப்பட்டன. சுஜாதா என்ற ஆளுமையின் பல்வேறு தோற்றங்களையும் அந்தந்தக் காலகட்டத்தின் பதிவுகளையும் கொண்ட இந்நூல் ஓர் அரியஆவணமாகத் திகழ்கிறது. ரூ.460/-

மலத்தில் தோய்ந்த மானுடம்

அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துக்கிருஷ்ணன் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தியாவையும் தமிழகத்தையும் தலை குனிய வைத்த பல்வேறு சமூக அவலங்கள், கொடுமைகள் குறித்து இக்கட்டுரைகள் விவாதிக்கின்றன. இளைய தலைமுறை அரசியல் விமர்சகர்களில் முக்கியமானவராக உருவாகி வரும். அ.முத்துக்கிருஷ்ணன் ஒடுக்கு முறைக்கு எதிரான குரலை உக்கிரமாக இதில் பதிவு செய்கிறார் ரூ.60/-

வெளிச்சம் தனிமையானது

சுகுமாரன் சுகுமாரன் தமிழ்ச் சூழலுக்கு வெளியே நிகழும் கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகள் குறித்து எழுதிய கட்டுரைகள் இவை. புறம் என்ற பிரிவில் மலையாளச் சூழல் சார்ந்த கட்டுரைகளும் அயல் என்ற தலைப்பில் பிற மொழி சார்ந்த ஆக்கங்களும் இடம்பெறுகின்றன. புதிய பின்னணிகளுக்காகவும் புதிய மொழியனுபவத்துக்காகவும் புதிய வாழ்க்கைக் கண்ணோட்டத்துக்காகவும் மேற் கொள்ளும் அக்கறைகளின் விளைவே இக்கட்டுரைகள். நம்மைப் புதிப்பித்துக்கொள்ளவும் நாம் எங்கே இருக்கிறோம் என்று சுய மதிப்பீடு செய்துகொள்ளவும் இந்த அக்கறை தேவையானது. அந்த வகையில் இந்தக் கட்டுரைகள் தமிழ் வாசகனுக்கு வேறொரு உலகத்தை அறிமுகம் செய்கிறது. ரூ.120/-

ஆஸாதி…ஆஸாதி…ஆஸாதி

சாரு நிவேதிதா தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கபட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச் சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாருநிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்ட வட்டமாக நிறுவுகின்றவை. தனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம்காலமாக அதிகார வன்முறைக்கும் சீரழிவிற்கும் எதிராக எழுப்பபட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீக கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார். இவற்றில் பல கட்டுரைகள் மலையாள இதழ்களில் வெளிவந்தது தற்செயலான ஒன்றல்ல. நமக்கு சொல்வதற்கும் கேட்பதற்கும் இன்னும் அதிக வெளி தேவைப்படும் சூழலில் இந்த எழுத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ரூ.200/-

மூடுபனிச்சாலை

சாரு நிவேதிதா கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, தமிழ் மொழிக்கு நேர்ந்துள்ள அவல நிலை, ஈழத் தமிழர் பிரச்சினை, திபெத், சீனா, ஹாங்காங், ஹவாய், வில்லுப் பாட்டு, இந்தோனேஷிய இயக்குனர் கரீன் நுக்ரஹோ, வி.எஸ்.நைப்பால், சல்மான் கான், அவர் வேட்டையாடிய மான் மற்றும் ஐஸ்வர்யா ராய், பெர்லின் நிர்வாண சங்கத்தில் பெரியார் எடுத்துக் கொண்ட புகைப்படம், மினரல் வாட்டரில் குளிக்கும் சினிமா நடிகர்கள், ஆவியுலக அனுபவங்கள், கூவாகம், குஜராத் படுகொலைகள் என்று பல்வேறு இடங்களில் பயணம் செய்கின்றன இக்கட்டுரைகள். இவை எந்த கருத்தியலுக்கும் விசுவாசமாக நின்று சமூக நிகழ்வுகளை சித்தரிப்பவை அல்ல. மாறாக ஒரு சுயேச்சையான எழுத்தாளனின் பார்வையிலிருந்து இந்த சமூக சித்திரங்கள் உருவாகின்றன. ரூ.95/-

அன்று பூட்டிய வண்டி

ந.முத்துசாமி ந.முத்துசாமி கூத்து மற்றும் நாடக கலை தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அன்று பூட்டிய வண்டி நூல் பதினைந்து புதிய கட்டுரைகளுடன் இப்போது வெளிவருகிறது. கூத்து மற்றும் நாடகம் தொடர்பான மிக ஆழமான பார்வைகளை முன்வைக்கும் இந்த நூல் ஒரு அரிய ஆவணமாக திகழ்கிறது. ரூ.150/-